முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு சகல உதவிகளையும் வழங்க வேண்டும் :இராதாகிருஷ்ணன்
தமிழ் மக்களின் அபிலாஷைகள் வட மாகாண தேர்தல் முடிவுகளின் மூலம் வெளிப்பட்டுள்ளது. சம உரிமைகளுடன் ஐக்கிய இலங்கைக்குள் வாழ வேண்டும் என்பது அனைத்து தமிழ் மக்களினதும் எதிர்பார்ப்பாகும். இதற்கு மதிப்பளித்து வடமாகாண முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள முன்னாள் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கு அரசாங்கம் அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று முன்னாள் பிரதியமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிவினை வாதத்தையோ, தனி நாட்டையோ தமிழ் மக்களோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ விரும்பவில்லை என்பது ஜனாதிபதி முன்னிலையில் வட மாகாண முதலமைச்சர் பதவி ஏற்றபோது வெளிப்பட்டுள்ளது. ஆகவே, வீண் இனவாதத்தை தூண்டாமல் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச ஆகியோர் தமது அமைச்சுக்களால் முடிந்த உதவிகளை தமிழர்களுக்கு செய்ய முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து முன்னாள் பிரதி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் கூறுகையில், வட மாகாண தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாரிய வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய விடயமும் ஆகும். முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும் கம்பன் கழக தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்றமையானது முக்கியமானதொரு விடயமாகும்.
சந்தேகத்திற்கு இடமின்றி அவரது தலைமைத்துவத்தின் கீழ் வடமாகாணம் பாரிய அபிவிருத்தியினை அடையும். அத்தோடு பொதுமக்களின் வாழ்வாதாரம் பாரிய பிரச்சினைகளாக காணப்படும் மீள் குடியேற்றம் மற்றும் விதவைப்பெண்களின் விவாகரத்து போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தீர்வுகளும் எடுக்கப்படும்.
குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சி.வி விக்கினேஸ்வரனின் நிலைப்பாடும் அதற்கு பின்னரான அவர் வலியுறுத்திய விடயங்களும் முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டியவை ஆகும்.
அதாவது தமிழ் மக்கள் தமது உரிமைகளுடன் வாழ விரும்புகின்றனர். அத்துடன் தமிழ் மொழி பாரம்பரியம் மிக்கதும் சமத்துவமிக்கதுமான மொழி என்பதால் அதனை பாதுகாக்கவும் கலாசார பாரம்பரிய தொன்மைகளை உணர்வு மூலமாக தமிழ் மக்கள் முன்னெடுப்பதற்கான அனைத்து உரிமைகளுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்பது அவரது விருப்பமாகும்.
ஆகவே, அரசாங்கம் இந்த விடயங்களுக்கு முக்கித்துவம் அளித்து ஜனாதிபதி உள்ளிட்ட அரச பிரிவுகள் தேவையான அனைத்து உதவிகளையும் வட மாகாண முதலமை ச்சருக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating