யுத்தம் முடிந்த பின்னர் பிரபாகரனின் பெயரை வேறு எவரையும் விட அரசே கூடிய தடவை உச்சரித்துள்ளது; அரியநேத்திரன் எம்.பி…!
யுத்தம் முடிவடைந்து 4 வருடங்களாகி விட்ட போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விட அரசாங்கமே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை அதிகமாக உச்சரிப்பதில் இருந்தே அந்தப் பெயரில் ஏதோவொரு சக்தி இருக்கிறது என்பது புலனாவதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அரியநேத்திரன் எம்.பி. இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் பேசுகையில்; காணி என்பது மக்களின் அடிப்படைப் பிரச்சினையாக இருக்கிறது. ஆனால், கொங்கிரீட் வீதிகள் போட்டு விட்டால் சமாதானம் வந்துவிட்டது என்பது தான் அரசின் நினைப்பாக இருக்கிறது.
ஆனால் உண்மை நிலைமை அதுவல்ல. உரிமைக்காக போராடி முள்ளிவாய்க்காலுடன் அது முடிவுற்று நிற்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை நாம் உச்சரிக்காவிட்டாலும் யுத்தம் முடிவடைந்து கடந்த 4 வருடங்களில் அரசாங்கமே இந்த பாராளுமன்றத்தில் அதிகமாக அந்தப் பெயரை கூறி வருகிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை விட
இதிலிருந்தே அந்தப் பெயருக்கு ஏதோவொரு சக்தி இருக்கிறது என்பது புலனாகிறது. எந்த மதகுருவும் இனவாதமாகச் செயற்பட்டால் அது தவறு என்று பிக்கு எம்.பி. இங்கு கூறினார். அப்படியென்றால் வாருங்கள் நான் காட்டுகின்றேன். யார் இனவாதத்துடன் செயற்படுகின்றார்கள் என்பதை மட்டக்களப்பில் பௌத்த பிக்கு ஒருவர் புத்தர் சிலை வைக்க முயற்சித்தமைக்கு எதிராக பொலிஸாரின் அனுமதி பெற்று நாம் ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டபோது இராணுவத்தினரோ மக்களின் வீடுகளுக்குச் சென்று அதில் கலந்து கொள்வதை தடுத்து நிறுத்தும் முகமாகச் செயற்பட்டனர். அரசாங்கமே பிரபõகரனின் பெயரை அதிகம் பயன்படுதிக்கொண்டிருக்கிறது.
இன்று இது ஜனாதிபதியின் கீழ் இயக்கும் நாடாக இருக்கிறதா அல்லது அவரது தம்பியின் கீழ் இயங்கும் நாடாக இருக்கிறதா? ஜனாதிபதியின் கீழ் இயங்கும் நாடு என்றால் சட்ட ஒழுங்கு பொலிஸாரிடம் இருக்க வேண்டும். அது இராணுவத்தினரிடம் இருப்பதுதான் இங்கு பிரச்சினையாக இருக்கிறது. அங்கு சிவில் நிர்வாகம் இராணுவத்தினரின் கைகளில் இருக்கிறது. வடமாகாண தேர்தலில் செப்டெம்பர் 21 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக வெற்றிபெறவுள்ள நிலையில் இராணுவத்தினர் அத்துமீறி அரசுக்காக பிரசாரம் செய்கின்றனர்.
இதேநேரம் அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கும் அஷ்வர் எம்.பி. தமிழ் சமூகத்தினரை தரக்குறைவாகப் பேசுகிறார். முஸ்லிம் சமூகத்துக்காகவும் நாம் தான் பேசிக்கொண்டிக்கின்றோம். அஷ்வர் தேவையென்றால் அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கட்டும். ஆனால் தமிழ் மக்கள் பற்றிப் பேசுவதற்கு அஷ்வருக்கு அருகதையில்லை’ என்றார்.
Average Rating