இராக்கில் வன்முறைக்கு முழுமையாக முடிவு கட்ட இயலாது -அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்

Read Time:3 Minute, 40 Second

Irak-P.M-Usa.bush.jpgஇராக்கில் வன்முறைக்கு முழுமையாக முடிவு கட்ட இயலாது என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறினார். இராக்குக்கு செவ்வாய்க்கிழமை திடீர் ரகசியப் பயணமாக வந்த அவர் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிச் செல்கையில், அமெரிக்க விமானப் படை விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2009-ல் பதவிக் காலம் முடிந்து அமெரிக்க அதிபர் பொறுப்பில் இருந்து நான் விலகுவதற்குள் இராக்கில் பாதுகாப்பு குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

வன்முறையே இல்லை என்ற நிலைதான் சிறந்த அளவுகோலாக இருக்கும் எனில், அது எட்ட முடியாத அளவுகோலாகவே இருக்கும்.

மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசு என்பது அளவுகோலாக இருக்கும் எனில், அந்த அளவுகோலை இராக் அரசு நிச்சயம் பூர்த்தி செய்யும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில், இராக்கில் இயல்பு நிலை திரும்புவதற்கு அரசு விவேகமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார் புஷ்.

இப்போது வந்தது போல அவர் ரகசியமாக வர வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு இராக்கில் நிலவரம் முன்னேற்றம் அடையுமா என்று கேட்டதற்கு, இராக்கில் பாதுகாப்பு நிலவரம் நிச்சயம் மேம்படும் என்று நம்புவதாக பதிலளித்தார் புஷ்.

அவர் மேலும் கூறியதாவது: வன்முறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் இராக்கில் வெற்றிக்கு அர்த்தம் என்று கருதுவது, வெற்றி தோல்வியை மதிப்பிடுவதற்கு சரியான வழியல்ல. மக்களைக் கொல்ல விரும்பும் தற்கொலைப் படையினர், கார் குண்டு தாக்குதல்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

வாழ்க்கைக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என அரசு நிர்வாகம் குறித்து மக்கள் வசதியாக உணரும் வகையில் ஓர் ஒழுங்கு உணர்வை ஏற்படுத்துவதுதான் இராக்கில் குறிக்கோளாக இருக்க முடியும். வன்முறையே முற்றிலும் இருக்காது என இராக் அரசு உத்தரவாதம் அளிக்க முடியும் என நான் நினைக்கவில்லை என்றார் புஷ்.

ஜார்ஜ் புஷ் செவ்வாய்க்கிழமை திடீரென ரகசியப் பயணமாக இராக் தலைநகர் பாக்தாத் வந்தார். முதன் முறையாக இராக் பிரதமர் நூரி-அல்-மலிகியை நேரில் சந்தித்துப் பேசினார். அவர் அமைத்துள்ள அமைச்சரவைக்கு பாராட்டு தெரிவித்தார். இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்து பாராட்டினார். அமெரிக்க படையெடுப்புக்கு பிறகு இராக்குக்கு புஷ் வந்தது இது 2-வது முறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விமான நிலைய அதிகாரிகள் வழமைக்கு மாறாகத் தாமதப்படுத்தி சோதனை நடத்தியதானது… சு.ப.
Next post தமிழர் பகுதிகள் மீது இலங்கை போர் விமானங்கள் குண்டு வீச்சு -எழிலன்