அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்தது இலங்கை : சங்கா, குலசேகர அதிரடி
கட்டாய வெற்றியை எதிர்பார்த்து இங்கிலாந்தை அணியை எதிர்கொண்ட விறுவிறுப்பான போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது.
ஐ.சி.சி சம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரின் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை – இங்கிலாந்து அணிகளிடையே ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பினைத் தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான அலஸ்டெயர் குக் (59) – இயன் பெல் (20) ஜோடி சிறப்பான ஆரம்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது.
இவர்கள் 48 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற நிலையில் இயன் பெல் 20 ஓட்டங்களுடன் எரங்கவின் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ட்ரொட், அணித் தலைவர் குக்குடன் சிறந்த இணைப்பினை ஏற்படுத்தி 83 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
தொடர்ந்தும் இங்கிலாந்தின் நடுவரிசைத் துடுப்பாட்ட வீரர்களான ட்ரொட் (76) மற்றும் றூட் (68) ஆகியோர் இங்கிலாந்து வலுச்சேர்த்து ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் குறித்த இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுக்கள் வேகமாக வீழ்ந்தது.
இருப்பினும் 7ஆவது வீரராக களமிறங்கி போபரா அதிரடியா துடுப்பெடுத்தாடி 13 பந்துகளில் 33 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இதில் இலங்கை அணியின் இறுதி ஒவரை வீசிய எரங்கவின் பந்துவீச்சில் 3 சிக்ஸ்களையும் 2 பௌண்டரிகளையும் அடித்து 28 ஓட்டங்களைப் பெற்றார்.
இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 293 என்ற பாரிய இலக்கினை அடைந்தது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக மலிங்க, ஹேரத் மற்றும் எரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் குலசேகர ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.
தொடர்ந்து 294 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பாடத்தாடக் களமிறங்கிய இலங்கை அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இரண்டாவது போட்டியிலும் குசால் பேரேரா ஏமாற்றமளித்து 6 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த டில்சான் – சங்கா இணைப்பாட்டம் இலங்கை அணியை ஸ்திரமான நிலைக்கு இட்டுச்சென்றது. இவர்கள் தங்களுக்கிடையில் இணைப்பாட்டமாக 92 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை டில்சான் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய மஹேலவும் தன்பங்கிற்கு சிறப்பாக துடுப்பெடுத்தாடி 42 ஓட்டங்களைப் பெற்று அரங்கு திரும்பினார். இவரைத் தொடர்ந்து களம்புகுந்த குலசேகர சிறப்பான இணைப்பாட்த்தினை சங்காவுடன் ஏற்படுத்தி இறுவரை ஆட்மிழக்காது அதிரடியாக துடுப்பெடுத்தாடினார்.
இந்த ஜோடி இறுதிவரை களத்திலிருந்து இணைப்பாட்டமாக 110 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வெற்றிபெறச் செய்தனர். இதில் குலசேகர 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு உதவினார்.
மேலும் தடுமாறிக்கொண்டிருந்த இலங்கை அணியை நிதானமான சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் வெற்றி பெறச் செய்த குமார் சங்கக்கார ஆட்டமிக்காது 134 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இறுதியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 47.1 ஓவர்களில் 297 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றனர். இதன் மூலம் இலங்கை அணி சம்பியன் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கான வாய்ப்பினைத் தக்க வைத்துக்கொண்டது.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக ஆட்டமிக்காது 134 ஓட்டங்களைப் பெற்ற குமார் சங்கக்கார தெரிவானார்.
இன்று தென்னாபிரிக்கா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளிடையேயான தீர்க்கமான போட்டி இன்று நடைபெறவுள்ளது.
Average Rating