அசாத் சாலி கைது மூலம் மேற்குலகை வலைத்துப்போட அரசாங்கம் முயற்சி!!
இலங்கையில் அல்-கைடா, தலிபான் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இருப்பதாக காட்டி அமெரிக்கா உட்பட மேற்குலகை வவளைத்து போடவே தேசிய ஐக்கிய முன்னணி பொது செயலாளரும், அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் இணை தலைவருமான நண்பர் அசாத் சாலி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என இன்று கொழும்பில் நடைபெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் உரையாற்றுகையில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடக மாநாட்டில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
ஜூனியர் விகடன் சஞ்சிகையில் அசாத் சாலியின் நேர்முகம் 24ம் திகதி வெளிவந்தது. அதில் இடம்பெற்றதாக சொல்லப்படும் கருத்து பிழையை திருத்தி அவர் ஜூனியர் விகடனுக்கு அனுப்பி வைத்துள்ள திருத்தம் இன்றைய திகதியிடப்பட்டுள்ள இதழில் வெளியாகியுள்ளது என எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது என்ன பெரிய பிரச்சினையா? இது சம்பந்தமாக அவரிடம் ஒரு வாக்குமூலம் பெற்றுக்கொண்டால் போதும். இது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவரை கைது செய்யும் அளவிற்கு பெரும் பிரச்சினை அல்ல.
அதிகாரத்தை பகிர்ந்து அரசியல் தீர்வின் மூலம் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்போம் என உலகத்துக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என கூறுவது தவறா? கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை உறுதியளித்தப்படி நிறைவேற்றுங்கள் என சொல்வது தவறா? இந்த உறுதிமொழிகளை நிறைவேற்றாவிட்டால் இந்த நாட்டில் மீண்டும் பிரிவினைவாதமும், ஆயுத போராட்டமும் தோன்ற இடம் இருக்கின்றது என சொல்வது தவறா? இவை தவறுகள் அல்ல.
இவை தவறு செய்யாதீர்கள் என்ற முன்னெச்சரிக்கைகள். இந்த நாட்டில் இன்று முன்னெச்சரிக்கை செய்வது தவறாக போய் விட்டது. அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துங்கள் என்று சொல்வது பயங்கரவாதமாக போய் விட்டது. இதைத்தான் அசாத் சாலி எங்களுடன் சேர்ந்து சொன்னார். அதற்காகத்தான் அவர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கே இப்போது இருக்கும் நாங்களும் இதைத்தான் சொல்கிறோம். அப்படியானால் நாங்களும் பயங்கரவாதிகளா? இதுநாள்வரை நாட்டை பிரிக்க சொல்வதுதான் பயங்கரவாதம் என சொல்லப்பட்டது. இப்போது அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்று சொல்வதும் பயங்கரவாதம் என்று இந்த அரசாங்கம் சொல்கிறது. அப்படியானால் இந்த நாட்டில் இன்று அதிகாரப்பகிர்வை வலியுறுத்தும், 13ம் திருத்தத்தை அமுல் செய்யுங்கள், வட மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் என்று சொல்லும் ஒவ்வொருவரும் பயங்கரவாதித்தான்.
அப்படியானால், நாட்டுக்கு வெளியே இருந்து 13ம் திருத்தத்தை அமுல் செய்யுங்கள் என சொல்லும் பான்கி மூன், பராக் ஒபாமா, மன்மோகன் சிங், கமரூன் ஆகியோரும் பயங்கரவாதிகள்தான். தெரு அரசியல் செய்யும் சிலர் இப்படி சொல்வது உண்டு. இன்று இந்த அரசாங்கமும் இப்படியே நடந்து கொள்கிறது.
உண்மையில் அசாத் சாலி கைதுக்கு பின்னால் உள்ள உண்மை காரணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உலகத்தில் இன்று இஸ்லாமிய அடிப்படைவாததிற்கு எதிராக மேற்குலகமும், இந்தியாவும் கூட்டாக செயல்படுகின்றன. ஆனால் இலங்கை தேசிய பிரச்சினையில் இந்த நாடுகள் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன.
அதிகாரத்தை பகிரும் அரசியல் தீர்வை காணும்படி இலங்கை அரசின் மீது சர்வதேச அழுத்தம் உள்ளது. இந்நிலையில் இலங்கையில் அல்-கைடா, தலிபான் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இருப்பதாக காட்டி அமெரிக்கா உட்பட மேற்குலகை வளைத்து போட இலங்கை அரசு முயற்சி செய்கிறது.
அல்-கைடா, தலிபான், அல்-ஜிஹாத் என்பவற்றின் தொடர்பாளர்கள் இங்கு இருப்பதாக காட்டினால் மேற்குலகம் தன்னை அரவணைக்கும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். இங்கு இல்லாத இஸ்லாமிய அடிப்படைவாதம் இருப்பதாக காட்டவே தேசிய ஐக்கிய முன்னணி பொதுசெயலாளரும், அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் இணை தலைவருமான நண்பர் அசாத் சாலி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Average Rating