காதலியை அம்பலப்படுத்திய பகீர் “எஸ்எம்எஸ்” காதலர்கள் மோதலால் ரயில் நிறுத்தம்
சென்னை : காதலர் தினத்தை முன்னிட்டு நண்பருக்கு காதலி அனுப்பிய எஸ்எம்எஸ் செய்தியால் இரண்டு பேருக்கும் தகராறு ஏற்பட்டது. அதனால் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயில் ஆற்று பாலத்தின் மீது நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு தினசரி வந்து செல்வது ஏலகிரி எக்ஸ்பிரஸ். ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, வாலாஜா, சோளிங்கபுரம், அரக்கோணம், திருவள்ளூர் உட்பட 15க்கும் அதிகமான ரயில்நிலையங்களில் நின்றுச் செல்லும். வேலை, படிப்பு, தொழில் என சென்னைக்கு தினமும் வந்து செல்ல வசதியான ரயில் என்பதால் எப்போதும் நெரிசலாக இருக்கும். இந்த ரயில் நேற்று காலை அரக்கோணத்தில் நின்று புறப்பட்டது.
கார்டு பெட்டியில் இருந்து 6வது பெட்டியில் நண்பர்களான அரக்கோணம் பழனிப்பேட்டையை சேர்ந்த பிரசாத்(25), சுவால்பேட்டையை சேர்ந்த வினோத்(25) ஆகியோரும் ஏறினர் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இருவரும் சென்னையில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் பிரசாத், தனக்கு காலையிலேயே தனது காதலி காதலர் தின வாழ்த்து செய்தியை அனுப்பியதாக கூறியுள்ளார். ஆர்வமான வினோத், செய்தியை காட்டும்படி கேட்டுள்ளார். உற்சாகமான பிரசாத் தனது செல்போனை நீட்டியுள்ளார்.
செல்போனை வாங்கி எஸ்எம்எஸ் செய்தியை படித்துக் கொண்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தவர், திடீரென அமைதியானார். காரணம் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்ட எண் வினோத் காதலியின் செல்போன் எண். அமைதி கோபமாக வெடிக்க, ”இவ எதுக்கு உனக்கு எஸ்எம்எஸ் அனுப்பியிருக்கா” என்று கேட்டுள்ளார்.
அதற்கு பிரசாத், ”என்னுடைய காதலி எனக்கு அனுப்பாமல் உனக்கா அனுப்புவா” என்று சொல்லியுள்ளார். ”இல்லை இவள் என் காதலி” என்று வினோத் சொல்ல இரண்டு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருக்கட்டத்தில் இருவரும் அடித்துக்கொள்ள ரயில் பெட்டியே கலவரமானது. நண்பர்கள் சமாதானப்படுத்தியும் ”யாருக்கு காதலி” மோதல் முடிவுக்கு வரவில்லை.
எங்கே கைகலப்பு வேறு மாதிரியாக முடிந்து விடுமோ என்று பயந்த சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ரயில் சரியாக மணவூர், செஞ்சிபனம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள கொற்றலை ஆற்று பாலத்தின் மீது நின்றது.
தகவல் அறிந்த ரயிலின் டிரைவர், கார்டு ஓடிவந்து சம்பந்தப்பட்ட பெட்டியில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் துண்டிக்கப்பட்ட இணைப்புகளை சரி செய்தனர். அதேபோல் ரயில்வே பாதுகாப்பு படையினரும் அங்கு வரவே சண்டை போட்ட நண்பர்களும் அமைதியானார்கள். அவர்களை எச்சரித்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அந்த பெட்டியிலேயே ஏறிக் கொண்டனர்.
அதன்பிறகு சண்டை தொடராததால் நண்பர்களுக்கு ”அல்வா” கொடுத்த காதலி யார் என்று கடைசி வரை தெரியாமல் போய்விட்டது. இந்த பிரச்னையால் ஏலகிரி எக்ஸ்பிரஸ் காலை 8.15 மணி முதல் 8.25 மணி வரை கொற்றலை ஆற்றுப்பாலத்தின் மீது நிறுத்தப்பட்டது. இந்த விவரம் தெரியாமல், வேலைக்கு போகும் அவசரத்தில் இருந்த பயணிகள் தவித்தது தனிக்கதை.
Average Rating