பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்- பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி!
இந்தியாவில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. கட்டாக்கில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் ஒடிசா லெவன் அணியை தோற்கடித்தது. 10வது ஐ.சி.சி. பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பை, கட்டாக் நகரங்களில் நாளை தொடங்கி பிப்ரவரி 17ஆம் திகதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன‘ஏ’ பிரிவில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் , இங்கிலாந்து, இலங்கை அணிகளும், ‘ப” பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த போட்டிக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூஸிலாந்தை வீழ்த்தியிருந்தது. இந்த நிலையில் இந்திய அணி தனது 2வது பயிற்சி ஆட்டத்தில் 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நேற்று மோதியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது.
ரீமா மல்கோத்ரா, தமிழகத்தை சேர்ந்த நிரஞ்சனா ஆகியோர் தலா 35 ரன்களும், பூனம் ரவுத் 31 ரன்களும், காமினி 30 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 38.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 223 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. கேமரூன் (35), பிளாக்வெல் (47), கேப்டன் ஜோடி பீல்ட்ஸ் (52), ஹீலே (36) உள்ளிட்டோர் அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
கட்டாக்கில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் ஒடிசா லெவன் அணியை தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நயின் அபிதி (73), பிஸ்மா மகரூப் (76) ஆகியோர் விளாசிய அரைசதத்தின் உதவியுடன் 48.4 ஓவர்களில் 240 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. பின்னர் ஆடிய ஒடிசா லெவன் அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்களே எடுக்க முடிந்தது.
மும்பையில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் சந்தித்தன. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 45.2 ஓவர்களில் 164 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் களம் கண்ட இலங்கை அணி 44.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 8வது வரிசையில் இறங்கி அசத்திய வீரக்கொடி 54 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதே போல் மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, நியூசிலாந்திடம் 13 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மெக்கிளாஷன் 88 ரன்களும், பிரான் 40 ரன்களும் விளாசினர்.
அடுத்து 224 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து 48.2 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. கிரீன்வே (51), ஜென்னி குன் (35) ஆகியோர் ரன் அவுட் ஆனது, இங்கிலாந்துக்கு பின்னடைவாக அமைந்து விட்டது.
பயிற்சி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நாளை நடக்கும் உலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன
Average Rating