எமது பெண்கள் வெளிநாடுகளிற்கு வேலைக்காக செல்லக் கூடாது: இதற்காகவே திவிநெகும – கருணா
இலங்கையினைச் சேர்ந்த 400 பேருக்கு கடந்த காலங்களில் வெளிநாடுகளில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் நமது பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்களுக்காகச் செல்லாக்கூடாது. அதற்காக வேண்டியே திவிநெகும திட்டத்தின் கீழ் பல்வேறுபட்ட சுயதொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேசத்துக்கான கூட்டம் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் வி.முரளிதரன்,
கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வதாரத்தை அதிகரித்துக்கொள்ள இந்த திட்டங்களை சிறந்த முறையில் கைக்கொள்ள வேண்டும்.
வறுமை நிலையில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வறுமையற்ற நிலையை உருவாக்கும் ஒரு சிறந்த திட்டமாக திவிநெகுமவின் வறுமையற்றதோர் இலங்கை தேசம் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் கடந்த காலங்களைவிட பல்வேறு அபிவிருத்திகளைக் கண்டு வருகின்றது. தற்போது இம்மாவட்டத்தில் கடமைபுரிகின்ற அரச அதிகாரிகள் மிகவும் சுறு சுறுப்புடனும் துடிப்புடனும் கடமைபுரிந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 85 வீதம் மிச்சாரத் தேவைகள் பூர்திசெய்யப்பட்டுள்ளன. மிகவிரைவில் படுவான்கரையிலுள்ள பகுதிகளில் உள்ள 12 இடங்களுக்கு மின்சார இணைப்புக்களை வழங்கவுள்ளோம்.
இதனைவிட மாவட்டத்திலுள்ள பல குளங்களை புனரமைப்புச் செய்துள்ளோம். மேலும் பல குளங்கள் புனரமைப்புச் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இவைகள் அனைத்திற்கும் திவிநெகும திட்டம் பெரும் உறுதுணையளிக்கும். இத்திட்டத்தில் நமது பெண்கள் வீட்டிலிருந்தபடியே பல்வேறுபட்ட சுயதொழில் முயற்சிகளை மேற்கொள்ளலாம். இவைகளை விடுத்து வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்கு பெண்கள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. இனிமேல் பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு அனுப்பக்கூடாது என்பது பற்றி ஜனாதிபதியிடமும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடமும் பேசியுள்ளளேன் எனவும் பிரதியமைச்சர் கூறினார்.
இதன்போது பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வறுமை ஒழிப்பு தொடர்பிலான கருத்துரைகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து திணைக்களங்களின் ஊடாக இந்த வறுமை ஒழிப்பு செயற்றிட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்போது குறித்த திணைக்களங்களின் தலைவர்களினால் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
விவசாய திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், கால்நடை வளத்திணைக்களம், வங்கிகள் போன்ற துறைகளினுடாக இந்த செயற்றிட்டம் மேற்கொள்ளப்படவுள்ளன.
Average Rating