இலங்கையில் பெய்து வரும் கனமழையால் 5 லட்சம் மக்கள் பெரும் பாதிப்பு..!
இலங்கையில் பெய்து வரும் கனமழையால் 7 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5 லட்சம் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 18 வருடங்களுக்கு பின்னர், கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.கொழும்பில் 440.2 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. இலங்கையின் ஊடாக செல்லும் காற்றின் அழுத்தம் அதிகாரித்ததன் காரணமாக 10 ஆம் திகதி மாலை 5 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை கொழும்பு, களுத்துறை, காலி, குருணாகல், ஹம்பாந்தோட்டை, கம்பஹா, இரத்தினபுரி கன மழை பெய்ததாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை அவதானி கயனா ஹெந்தவிதாரண தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தின் கோட்டை, கொட்டாஞ்சேனை, செட்டித்தோட்டம்,புளுமென்டால், ஆமர் வீதி, பலாமரச் சந்தி, கிராண்ட்பாஸ், மாதம்பிட்டி,இரத்மலானை, மொரட்டுவை, பாணந்துறை, பொரலஸ்கமுவ, கெஸ்பேவ, பிலியந்தல, மடபாத்த, போக்குந்தர, மகரகம, கடவன, ஜா‐எல போன்ற பிரதேசங்களில் வீதிகள் மற்றும் தொடரூந்து பாதைகள் என்பன நீரில் மூழ்கின. இதனை தவிர களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, வல்லாவிட்ட, இங்கிரிய, அகலவத்தை, பதுரெலிய, புளத்சிங்கள, ஹொரண, களுதுறை, பாதுக்க, பண்டாரகம, நாகொட ஆகிய பிரதேசங்களின் வீதிகளும் நீரில் மூழ்கியது. மேலும் இரத்தினபுரி, குருணாகல் மாவட்டங்களிலும் வீதிகள் நீரிழ் மூழ்கின. வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால், போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டன. இதேவேளை மழைக்காரணமாக கொழும்பு மாவட்டத்தில் 33 ஆயிரத்து 501 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. இவர்கள் 11 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் 3 முகாம்களும் கோட்டே பிரதேசத்தில் 8 முகாம்களிலும் இடம்பெயர்ந்தவர்கள் தற்காலிமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 2ஆயிரத்து 234 குடும்பங்களும், களுத்துறையில் 200 குடும்பங்களும் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களால், நேற்று மாலை வரை கொழும்பு நகரின் பல பகுதிகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. மேலும் கொழும்பு , கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக மாவட்ட அரசாங்க அதிபர்;களுக்கு 20 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்திற்கு 10 மில்லியன் ரூபாவும், ஏனைய இரண்டு மாவட்டங்களுக்கு தலா 5 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருள் மற்றும் நிதியுதவிகளை வழங்கவுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 60 ஆயிரம் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறு கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Average Rating