நார்வே சமரச முயற்சியில் `திடீர்’ முட்டுக்கட்டை பேச்சு வார்த்தைக்கு வர விடுதலைப்புலிகள் `திடீர்’ மறுப்பு
அமைதிப் பேச்சு வார்த்தைக்கு வர விடுதலைப்புலிகள் திடீரென மறுத்து விட்டனர். இதனால் நார்வே நாடு மேற்கொண்டுள்ள சமரச முயற்சியில் `திடீர்’ முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளது. தங்களது புறக்கணிப்புக்கு இலங்கை அரசுதான் காரணம் என்று விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இலங்கையில் தனி நாடு கேட்டு போராடும் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே உயிர் சேதத்தை தடுக்க நார்வே நாடு முயற்சி மேற்கொண்டது. இதன் காரணமாக இரு தரப்பிலும் போர் நிறுத்தம் அமல் படுத்தப்பட்டது. இரு தரப்பிலும் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்து வந்தது.
ஆனால் புதிய அதிபர் மகிந்தா ராஜபக்சே பதவி ஏற்ற பின்னர் அடிக்கடி மீண்டும் மோதல்கள் வெடித்தன. இதனால் போர் நிறுத்தம் முறிந்தது. பெரும் முயற்சிக்கு பின்னர் நார்வே மீண்டும் இரு தரப்பிலும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தது.
நேற்று நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் இந்த பேச்சு வார்த்தை நடப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள முடியாது என்று விடுதலைப்புலிகள் மறுத்து விட்டனர்.
இலங்கை அரசாங்கம் மீது விடுதலைப்புலிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.“இலங்கை அரசாங்கம் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அனுபவம் இல்லாத இளம் அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளது. அரசியல் வாதிகள் யாரையும் அனுப்ப வில்லை. ஆகவே பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள விரும்ப வில்லை” என்று அந்த குற்றச்சாட்டில் அவர்கள் கூறி உள்ளனர்.
இந்த குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் மறுத்து உள்ளது.இது பற்றி இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
எங்கள் தூதுக்குழுவுடன் பேச்சு நடத்த விடுதலைப்புலிகள் திடீரென மறுத்து விட்டதாக நார்வே சமரச குழு தகவல் தெரிவித்துள்ளது. இது நார்வே குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பேச்சு வார்த்தைக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடித்து விட்ட நிலையில் விடுதலைப்புலிகள் மறுத்தது எங்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அமைதிப்பேச்சு வார்த்தைக்கு வரும் அதிகாரிகள் யார்-யார் என்று கடந்த வாரமே பட்டியல் வெளியிடப்பட்டது. அதை தெரிந்து கொண்டுதான் விடுதலைப்புலிகள் ஆஸ்லோ நகருக்கு பேச்சு வார்த்தை நடத்த புறப்பட்டார்கள். ஆனால் இது பற்றி தெரியாது என்று இப்போது கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு கடந்த வாரம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தங்களது நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்தது. இதனால் அந்த கூட்டமைப்பில் உள்ள சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்தை கண்காணிக்கும் குழுவில் இடம் பெறுவதற்கு விடுதலைப்புலிகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும் நார்வே தூதுக்குழு தெரிவித்துள்ளது.” இவ்வாறு இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதனால் இலங்கை அரசாங்கம்-விடுதலைப்புலிகள் இடையேயான அமைதிப் பேச்சு வார்த்தையில் முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளது.