பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க தயார்: மத்திய-மாநில அரசு வழக்கறிஞர்கள்
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க தயாராக இருப்பதாக மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். அவரை விமான நிலையத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல், குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கருப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர்.
அப்போது, மத்திய அரசு [^] சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில்தான் பார்வதியம்மாள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு தடை விதித்து கடந்த 2003ம் ஆண்டு மத்திய அரசு எச்சரிக்கை சுற்றறிக்கையை அனைத்து இந்திய தூதரகங்களுக்கும் அனுப்பியது.
அந்த அடிப்படையிலே சென்னை வந்த பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், கடந்த 7 ஆண்டுகளில் சூழ்நிலைகள் மாறியிருக்கின்றன. இதுகுறித்து தமிழக அரசின் தற்போதைய நிலை என்ன என்பதை அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும் என்றும், விசாரணை இன்று தொடர்ந்து நடைபெறும் என்றும் உத்தரவிட்டனர்.
திருப்பி அனுப்ப உரிமை உண்டு-மத்திய அரசு:
முன்னதாக, மத்திய அரசு சார்பில் குடியேற்ற அதிகாரி அவி பிரகாஷ் நேற்று ஒரு பதில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,
மனுதாரருக்கு இந்த மனுவை தாக்கல் செய்ய தகுதியில்லை. அவர் பார்வதியம்மாளின் உறவினர் இல்லை. அவருக்கு வேறு எந்தவிதத்திலும் தொடர்பும் கிடையாது. பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியதில் குடியேற்ற அதிகாரிகள் சட்டப்படிதான் நடந்துள்ளனர். பார்வதியம்மாள் இந்திய பிரஜை என்பது உறுதி செய்யப்படவில்லை. எந்த வெளிநாட்டவரையும் திருப்பி அனுப்பும் உரிமை குடியேற்ற அதிகாரிகளுக்கு உண்டு.
தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரிலே கடந்த 2003ம் ஆண்டு பார்வதியம்மாளுக்கு எதிராக எச்சரிக்கை சுற்றறிக்கையை அனைத்து இந்திய தூதரகங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியது. அதன்படி பார்த்தால் கோலாலம்பூரில் உள்ள தூதகரம் பார்வதியம்மாளுக்கு விசா வழங்கியிருக்கக் கூடாது.
வெளிநாட்டவராக இருப்பதால் அவருக்கு இந்தியாவில் அடிப்படை உரிமை எதுவும் இல்லை. எனவே, அவரை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் குடியேற்ற அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை குறைகூற முடியாது என்று கூறப்பட்டிருந்தது.
இந் நிலையில் இந்த மனு மீது இன்றும் விசாரணை நடந்தது.
அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா கூறுகையில், பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளிடம் இருந்து அரசுக்கு இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. அவர் மனு கொடுத்தால் நிபந்தனையின் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்கத் தயார் என்றார்.
அதே போல மத்திய அரசி்ன் வழக்கறிஞர் ரவீந்திரன் கூறுகையில், தமிழக அரசு கேட்டுக் கொண்டால் இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்கத் தயாராக உள்ளது என்றார்.
Average Rating