அவுஸ்திரேலிய கப்பலிலுள்ள இலங்கை அகதிகளுக்கும் இந்தோனேஷிய அதிகாரிகளுக்குமிடையேயான நெருக்கடி தொடர்கிறது
இந்தோனேஷிய கடற்பரப்பில் தரித்திருக்கும் அவுஸ்திரேலிய கப்பலிலுள்ள இலங்கை அகதிகளுக்கும் இந்தோனேஷிய அதிகாரிகளுக்குமிடையேயான நெருக்கடி தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கப்பலில் இருக்கும் அகதிகள் இலங்கை பிரஜைகள் என ஊர்ஜிதம் செய்யப்படும் பட்சத்தில் இலங்கையின் உதவி நாடப்படுமென இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அவுஸ்திரேலிய கப்பலிலுள்ள இலங்கை அகதிகளுக்கு எதிர்வரும் 06ம் திகதிவரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் காலக்கெடு முடிந்தவுடன், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை அவுஸ்திரேலியாவே தீர்மானிக்க வேண்டுமெனவும் இந்தோனேஷியா தெரிவித்துள்ளது. மேலும், இந்தோனேஷியா கடற்பகுதிக்குள் குறித்த கப்பல் வருவதற்கு நாம் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொண்டோம். இலங்கையர்கள் தொடர்ந்தும் கப்பலுக்குள்ளேயே உள்ளனர். இங்கு அவர்கள் 06ம் திகதிவரை இருக்கலாம் என இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் டியூக்கு பைஸாஷியா தெரிவித்துள்ளார். கப்பலில் இருப்போர் இலங்கையர்கள்தானா என்று வினவியமைக்கு இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பதிலளிக்கையில், கப்பலுக்குள் இருப்பவர்கள் இலங்கையர்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் இந்தேõனேஷிய அதிகாரிகளினால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கப்பலுக்குள் இருக்கும் அனைவரையும் விசாரணை நடத்திய பின்னர் அவர்கள் எந்நாட்டு பிரஜைகள் என்பதை நாம் ஊர்ஜிதம் செய்வோம் என்றும் அவர் பதிலளித்துள்ளார். இதேவேளை, ஓஷியானிக் வைக்கிங் எனப்படும் கப்பலிலுள்ள 78பேரில் புகலிடம் கோருவோரும் பெரும்பாலானோர் கடந்த சில வருடங்களை இந்தோனேஷியாவில் கழித்தார்களா என்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியவில்லையென அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார். இதேவேளை, பெரும்பாலான புகலிடம் கோருவோர் இந்தோனேஷியாவில் ஐந்து வருடங்களை கழித்ததாகவும் அங்குள்ள ஐ.நா. அலுவலகம் தங்களுக்கு அகதிகள் அந்தஸ்த்து வழங்கியுள்ளதாகவும் தகவல்களை அனுப்பியுள்ளனர். ஓஷியானிக் வைக்கிங்கிலுள்ள அனைவரும் தமிழர்கள் எனவும், கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அவர்கள் குறித்த கப்பலிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவுஸ்திரேலியா அவர்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ளாத வரையில் கப்பலைவிட்டு தாங்கள் இறங்கப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே இப்பிரச்சினை தீர்வுக்குவர எவ்வளவு காலம் நீடிக்கும் என தெரியவில்லையென்று அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்மித் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், இதற்கென நாம் ஒரு காலத்தையோ ஒரு நேரத்தையோ குறிப்பிட முடியாது. இது மிகவும் கடினமானதும், குளறுபடியானதுமான விடயமாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தோனேஷிய கடற்பரப்பிலிருந்தும் இவர்கள் பிடிபட்டதன் காரணமாக இந்தோனேஷிய அரசாங்கத்துடன் பேசி ஒரு முடிவை காண அவுஸ்திரேலியா முயன்று வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating