ஜெனரல் சரத் பொன்சேகாவை, எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சியைக் கடுமையாக எதிர்க்கிறோம் -தமிழ் கூட்டமைப்பு
முப்படைகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகாவை, எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சியைக் கடுமையாக எதிர்ப்பதாக தமிழ் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் கூறியுள்ளது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான குறைநிரப்புப் பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பு உறுப்பினர் என்.ஸ்ரீPகாந்தாவே இவ்வாறு கூறியுள்ளார். தற்போது யுத்தம் முடிந்துவிட்டது. நடந்து முடிந்தது இரு நாடுகளுக்கிடையிலான யுத்தமல்ல, உள்நாட்டு யுத்தம். இதில் மரணித்தவர்கள் எமது நாட்டு மக்கள். அவர்கள் படையினராக இருக்கட்டும், தமிழ் மக்களாக இருக்கட்டும், எல்லோரும் எம்நாட்டு மக்கள்தான். தொடர்ந்தும் யுத்த வெற்றிபற்றி தொடர்பாகப் பேசி மகிழ்ச்சியடைந்து கொண்டிருப்பது சரியல்ல. இந்த யுத்தத்திற்குக் காரணமான தேசிய பிரச்சினையைத் தீர்க்க அரசியல்தீர்வு உடன் முன்வைக்கப்படல் வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்குகிழக்கு மக்கள் இப்போது பெரும் துன்பத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் உறவினர்களை, குடும்பங்களை இழந்து அநாதைகளாகியுள்ளனர். 25வருடங்களாக வடக்குகிழக்கில் அர்த்தமுள்ள அபிவிருத்திகள் எவையும் இடம்பெறவில்லை. அப்பகுதிகள் இனியாவது அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். யுத்தம் முடிவுற்ற நிலையிலும்கூட இந்நாட்டுக்குப் பாரிய இராணுவக் கட்டமைப்புத் தேவையில்லை. அவர்களுக்காகச் செலவுசெய்யும் கோடிக்கணக்கான ரூபா பணத்தை இந்நாட்டின் பொருளாதாரத்திற்குச் செலவிடமுடியும். படையினர் சுயமாகப் படையிலிருந்து விலகும் திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்த வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகளும் உதவவேண்டும். இதன்மூலம் நாம் எமது நாட்டைக் கட்டியெழுப்பமுடியும். இந்தப் பாரிய படைக்கட்டமைப்பை அரசு வைத்திருப்பதற்கான காரணம் என்ன? தமிழர் தரப்பிலிருந்தும் மீண்டும் இராணுவரீதியான எழுச்சி ஏற்படும் என்று அரசு நினைத்தா இப் படைக்கட்டமைப்பை வைத்திருக்கின்றது? இவ்வாறு வைத்திருப்பின் அது ஆரோக்கியமானதொன்றாக இருக்கமுடியாது. அத்தோடு ஜெனரல் சரத்பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றமை பற்றிப் பேசப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பொதுக்கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவா அல்லது வேறு ஒருவரா என்று தெரிவிப்போம் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தற்போது முப்படைகளின் பிரதமஅதிகாரி படையிலுள்ள ஒருவரை அரசியலில் இணைத்துப் பேசுவதையும் அவரை அரசியலில் இணைக்க முற்படுவதையும் நாம் எதிர்க்கின்றோம். பொதுவாகப் படையினர் அரசியலில் ஈடுபடுவது நல்லதல்ல. ஓய்வு பெற்றதன் பின்பு அரசியலில் ஈடுபடலாம். இலங்கை வரலாற்றில் அப்படி எத்தனையோபேர் அரசியலில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆகவே, சரத்பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating