தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் ஹெராயின் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு தபால் தந்தி காலனியில் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி பீச் ரோட்டில் ஒரு ஆசாமி ஒருவர் `ஹெராயின்’ என்ற போதை பொருளை கடத்தி வந்து விற்க முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான தனிப்படையினர் தூத்துக்குடி பீச் ரோடு விரைந்தனர். அங்கு தங்களது வாகனத்தை மறைவான இடத்தில் நிறுத்திவிட்டு போலீசார் அங்குள்ள இனிகோ நகர் பகுதியில் மறைந்து நின்று கண்காணித்தனர்.
அப்போது இனிகோநகர் பஸ் ஸ்டாப்பில் ஒரு ஆசாமி ஒருவன் கையில் ஒரு பையுடன் நின்று கொண்டு இருந்தான். அங்கும், இங்கும் சுற்றி பார்த்த அந்த நபர் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு நின்றது தெரியவந்தது. போலீசார் அதிக நேரம் கண்காணித்துக் கொண்டு மற்ற நபரையும் சேர்த்து பிடிக்கும் திட்டத்தில் இருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் யாரும் வரவில்லை. அதனைத்தொடர்ந்து போலீசார் பாய்ந்து சென்று அந்த நபரை பிடித்து சோதனை செய்தபோது, அவர்வைத்து இருந்த பையில் 700 கிராம் ஹெராயின் என்ற போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும்.
பின்னர் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் பரூக் (வயது 39).சென்னை பிராட்வே பிடாரியார் கோவில் தெருவை சேர்ந்த அப்துல்வகாப் என்பவர் மகன் ஆவார்.
இவரது சொந்த ஊர் தொண்டி ஆகும். தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீட்டின் கீழ் வடமாநில லாரி டிரைவர்கள் செட் உள்ளது. எனவே பரூக்குக்கு அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதில் சிலர் மத்திய பிரதேசமாநிலம் போபாலை சேர்ந்தவர்கள்.
அவர்களில் சிலர் போபாலில் இருந்து ஹெராயின் கொண்டு வந்து பரூக்கிடம் கொடுத்து விற்க கூறி உள்ளனர். ஒரு கிலோ ஹெராயினை வாங்கிய பரூக், அதில் 300 கிராமை தொண்டியில் விற்பனை செய்து உள்ளார். மீதி 700 கிராமை விற்க முடியாமல் திணறியபோது நண்பர் ஒருவர் தூத்துக்குடி கொண்டு செல்லுங்கள். அங்குதான் அடையாளம் கூறிய நபர் வருவார். அவரிடம் கொடுத்தால் பணம் தருவார் என்று பரூக்கை அனுப்பி வைத்துள்ளார்.
அதன்படி தூத்துக்குடியில் விற்பனை செய்து அதனை கப்பல் மூலமோ அல்லது படகு மூலமோ இலங்கைக்கு கடத்தி கொண்டு போகவும் திட்டம் தீட்டப்பட்டது. தூத்துக்குடிக்கு வந்து 700 கிராம் கஞ்சாவை விற்க முயன்றபோதுதான் பரூக் போலீசிடம் மாட்டிக் கொண்டார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைதான பரூக் நேற்று தூத்துக்குடி ஜே.எம்.-1 கோர்ட் டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டார். கைதான பாரூக் ஏற்கனவே 2 முறை ஹெராயினை கடத்தி விற்பனை செய்துள்ளார். ஆனால் 2 முறையும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்த அவர் தற்போது மாட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.