பலவருடகாலம் மர்மமாக இருந்த குண்டுத் தாக்குதல் தொடர்பில் இரகசியங்கள் அம்பலம்..
அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பல வருட காலமாக மர்மமாக இருந்து வந்த இரகசியங்கள் தற்பொழுது கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்து அம்பலமாகியுள்ளன என்று ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:- குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு ஆகியன தற்போது புலி உறுப்பினர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களுடன் விசாரணைகள் பூர்த்தியடையும் நிலைக்கு வந்துள்ளன. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுடன் சேர்ந்திருந்த சிரேஷ்ட புலி உறுப்பினர் ஒருவரைக் கைது செய்து விசாரித்த போது முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பாதுகாப்பு அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சிக்கு புலிகள் இராணுவத் தலைமைக் காரியாலயத்திற்குள் இருந்து பெற்றுக் கொண்ட உதவி தொடர்பாக முக்கிய தகவல்கள் கிடைத்ததால் அந்த விசாரணைகள் பூர்த்தி அடைந்துள்ளன என்று குற்றப் புலனாய்வு மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு வட்டாரங்கள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளன. கிடைத்த தகவல்களின்படி இராணுவத் தலைமைக் காரியத்தினுள் அமைந்துள்ள இராணுவத் தளபதியின் வாசஸ்தலத்திலும், ஜெனரல் சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைகளின் தலைவராக சேவையாற்றிய போதும் அவருக்கு சமையற்காரராகப் பணிபுரிந்த நபர் ஒருவரே விடுதலைப்புலிகள் இராணுவத் தலைமைக் காரியாலயத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தவும் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரை அங்கு அனுப்பவும் உதவி புரிந்ததாக தெரிய வந்துள்ளது. பிரஸ்தாப சமையற்காரர் வீதி விபத்து ஒன்றில் சிக்கி இராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது அங்கு செல்வதற்காக அவரது மனைவிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிச் சீட்டுக்களைப் பயன்படுத்தி புலிகள் இராணுவத் தலைமைக் காரியாலயத்தினுள்ளும் அங்கு அமைந்திருந்த ஆஸ்பத்திரிக்குள்ளும் சுதந்திரமாகச் சென்று வந்தனர். சம்பவதினம் இராணுவத் தளபதி பகல் போசனத்திற்காக வாசஸ்தலத்திற்கு செல்வதற்காக அலுவலகத்திலிருந்து வெளியேறியுள்ளார் என்று ஆஸ்பத்திரிக்கு எதிரே தளபதியின் மோட்டார் பவனியின் வருகைக்காகக் காத்திருந்த தற்கொலைக் குண்டுதாரிக்கு தகவல் கொடுப்பதற்காக இறுதித் தொலைபேசி அழைப்பை எடுத்தவர் இந்தச் சமையற்காரரே என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பல தற்கொலைப்படை உறுப்பினர்களை கையாண்டுவந்த புலி உறுப்பினர் ஒருவர் அண்மையில் கொழும்பு நகருக்குள் கைது செய்யப்படதை அடுத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும் இந்த முக்கிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. மேல் விசாரணைகளுக்குத் தடையாக இருக்கும் என்பதால் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடுவதில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் குரே,வவிடுதலைப்புலிகள் கொழும்பிலும், தெற்கிலும் பல தற்கொலைத் தாக்குதல்களை நடத்த உதவியுள்ளார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவ இடங்களுக்கு புலி உறுப்பினர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காக இந்தப் பொலிஸ் அதிகாரி புலிகளிடமிருந்து பல லட்சக் கணக்கான பணத்தை பெற்றுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி, கொடாப்பிட்டிய தற்கொலைக் குண்டுத் தாக்குதல், ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை கொலை, பொரலஸ்கமுவவிலும், பொலநறுவையிலும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் முயற்சிகள், திகம்பதனை தற்கொலைத் தாக்குதல் ஆகியவற்றிற்கும் பொலிஸ் அத்தியட்சகர் குரே உதவியுள்ளார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. பொலிஸ் அத்தியட்சகர் குரேயும் நலன்புரி முகாம்களிலிருந்தும் கொழும்பிலிருந்தும் செயற்பட்ட புலி உறுப்பினர்களும் தெரிவித்த தகவல்கள் புலிகள் புரிந்த வேறு பல கொலைகள் பற்றிய விசாரணைகள் பூர்த்தி செய்ய உதவியாக இருக்கின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating