புலிகளுக்கு எதிரான இறுதி தாக்குதல்: புது தகவல்கள்!!
இலங்கையில், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இருந்தாலும், கடந்த மே மாதம் நடந்த இறுதிக் கட்ட தாக்குதலின் போது, உண்மையில் என்ன நடந்தது, பிரபாகரன் எப்படி இறந்தார் என்பது குறித்த ஏராளமான கேள்விகளுக்கு இன்னும் விளக்கமான பதில் கூறப்படவில்லை. இறுதிக் கட்ட தாக்குதல் நடந்தபோது, என்.டி.டி.வி.,யின் செய்தியாளரும், பிரபல கட்டுரையாளருமான, நிதின் ஏ கோகலே, இலங்கை பிரச்னை குறித்த முழுமையான விவரங்களை தொகுத்து “ஸ்ரீலங்கா ப்ரம் வார் டூ பீஸ்’ ( இலங்கை – போரில் இருந்து அமைதிக்கு) என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட தாக்குதல் குறித்து, இதுவரை வெளிவராத தகவல்களை கூறியுள்ளார். இந்த புத்தகம் இன்னும் வெளிவரவில்லை. இலங்கை, இந்திய ராணுவ அதிகாரிகளிடம் இருந்து கேட்டுத் தொகுத்த சில தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
புத்தகத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு: துவங்கியது கவுன்டவுண்: இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட தாக்குதலுக்கான “கவுன்ட்டவுண்’ மே 17ம் தேதி துவங்கியது. நந்திகடல் நீர் ஏரி அருகே, மிக குறுகிய பகுதிக்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தப்பித்துச் செல்வதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே இருந்தது. இலங்கை ராணுவம் இதை நன்கு அறிந்திருந்தது. இந்த பகுதியை நோக்கி ராணுவத்தின் நான்கு பிரிவுகள் முன்னேறின. மே 17ம் தேதி அதிகாலை 3மணிக்கு, தப்பித்துச் செல்வதற்கான முதற்கட்ட முயற்சியை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். 150க்கும் மேற்பட்ட புலிகள், அந்த அமைப்பின் மூத்த தலைவர் ஜெயம் தலைமையில் நீர் ஏரிக்கு அப்பால் இருந்து சிறிய படகுகள் மூலம் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதற்காகவே காத்திருந்த இலங்கை ராணுவத்தினர் எதிர் தாக்குதல் நடத்தினர். நீர் ஏரியின் மேற்கு பகுதியில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கடும் சண்டை நடந்தது. இதில், 148 விடுதலைப் புலிகள் பலியாயினர். ராணுவத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.
புலிகள் முயற்சி தோல்வி: பிரபாகரனும் மற்றவர்களும், தப்பிச் செல்வதற்கு வசதியாக, வழியை ஏற்படுத்தி அவர்களை முத்தியங்காடு வனப் பகுதிக்குள் பாதுகாப்பாக மறைத்து வைக்கும் நோக்கதுடனேயே புலிகள் இந்த தாக்குலை நடத்தினர். ஆனால், இலங்கை ராணுவம் அதை முறியடித்து விட்டது.புலிகளின் இரண்டாம் கட்ட இறுதித் தாக்குதல், அடுத்த சில மணி நேரங்களில் துவங்கியது. 200க்கும் மேற்பட்ட புலிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். ராணுவத்தினரும் திருப்பி தாக்கினர்.
நீர்ஏரி பகுதியை கடப்பதற்கு முன்பே, நூறுக்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் சிலர் புலிகளின் மூத்த தலைவர்கள். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட புலிகள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் இருந்தவாறே தாக்குதல் நடத்தினர். ராணுவத்தின் சிறப்பு படையினர் மற்றும் கமாண்டோக்களின் கடும் தாக்குதலில் இவர்கள் கொல்லப் பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய புலிகளுக்கு, பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணி தான் தலைமை ஏற்றிருந்தார். சார்லஸ் அந்தோணியின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டது.
பிரபாகரன் பற்றிய வதந்தி: மே 18ம் தேதி பிரபாகரன் குறித்த பல்வேறு வதந்திகள் பரவின. ஆம்புலன்சில் தப்பிக்க முயற்சித்தபோது பிரபாகரன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. பிரபாகரன் கொல்லப்பட்டதை இலங்கை ராணுவ அமைச்சகம் உறுதி செய்தது. இருந்தாலும், பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான் குறித்த தகவல்கள் தொடர்ந்து மர்மமாகவே இருந்து வந்தன.
இலங்கையின் வரலாற்றில் இடம் பெறக் கூடிய மே 19ம் தேதி ஒரு வழியாக விடிந்தது. காலை 9.30 க்கு அதிபர் ராஜபக்ஷே பார்லிமென்டில் உரையாற்றினார். பிரபாகரன் குறித்த எந்த தகவலையும் அவர் தனது உரையில் கூறவில்லை.
இது, பிரபாகரன் மரணம் குறித்த சந்தேகத்தை மேலும் அதிகரித்தது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் நந்திகடல் நீர் ஏரி பகுதியில், பிரபாகரன் உடல் கண்டுபிடிக் கப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்த காட்சிகள் இலங்கை “டிவி’யில் ஒளிபரப்பாயின.
பிரபாகரன் கொல்லப்பட்டது எப்படி?
இறுதிக் கட்ட தாக்குதலில் பிரபாகரன் கொல்லப்பட்டது எப்படி என்பது குறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: பிரபாகரன் உட்பட புலிகளின் முக்கிய தலைவர்கள் பதுங்கியிருந்த குறுகிய காட்டுப் பகுதிக்குள் இறுதிக் கட்ட தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தை கமல் குணரத்னே, ரவிப்பிரியா, லலந்தா காமகே போன்ற ராணுவ உயரதிகாரிகள் வகுத்தனர். மே 18ம் தேதி நள்ளிரவில் கமாண்டோ படையினருடன், ராணுவ வீரர்களும் அந்த பகுதிக்குள் நுழைந்தனர். விஜேசிங்கா தலைமையிலான ராணுவப் படையினர் முதலில் அங்கு ஊடுருவினர். மார்பளவு தண்ணீரில் சென்றவாறே அவர்கள் தாக்குதல் நடத்தினர். அரை மணி நேரத்திற்கும் மேலாக புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. 50 மீட்டர் தூரம் முன்னேறிய ராணுவத்தினர் ஐந்து புலிகளின் உடலை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்துகைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
இதைப் பார்த்த ராணுவ வீரர்களுக்கு தங்களின் தாக்குதல் முடிவுக்கு வரும் நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்தனர். ஏனெனில், புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு பாதுகாவலராக இருப்பவர்களுக்கு மட்டுமே கைத் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி அளிக்கப்படும் என்ற தகவல் அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. இதனால், பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் அருகில் தான் பதுங்கியிருக்க வேண்டும் என, ராணுவ வீரர்கள் உறுதியாக நம்பினர். புலிகள் தப்பிச் செல்வதற்கு எந்த ஒரு சிறிய வாய்ப்பும் அளித்து விடாமல் பாதுகாப்பு அரணை பலப்படுத்தும்படி, ராணுவ வீரர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
விஜேசிங்கா தலைமையிலான படையினருக்கு ஆதரவாக மேலும் ஏராளமான ராணுவ வீரர்கள் அங்கு அனுப்பப்பட்டனர். இதையடுத்து, ராணுவத்தினர் வேகமாக முன்னேறி காட்டுப் பகுதிக்குள் கடும் தாக்குதல் நடத்தினர். புலிகள் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு மணி நேர கடும் சண்டைக்கு பின், புலிகள் தரப்பில் இருந்து எந்த தாக்குதலும் இல்லை. வனப் பகுதி முழுவதும் கனத்த மவுனம் நிலவியது. இதையடுத்து, காட்டுப் பகுதிக்குள் முன்னேறிய ராணுவத்தினர் அங்கு தீவிரமாக தேடினர். இதில் 18 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் பிரபாகரன் உடலும் அடையாளம் காணப்பட்டது. மே 19ம் தேதி காலை 8.30 க்கு இந்த தகவல் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு கிடைத்தது.
இருந்தாலும், இந்த தகவலை நன்கு உறுதி செய்தவுடன் தான், செய்தியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதில் சரத் பொன்சேகா உறுதியாக இருந்தார். புலிகளின் முன்னாள் தளபதியும், தற்போதைய இலங்கை அமைச்சருமான கருணா, சரண் அடைந்த புலிகளின் மூத்த தலைவர் தயா மாஸ்டர் ஆகியோர், பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டினர். இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் கூறியதாக, தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
புலிகளை ஒழிக்க இந்திய ராணுவம் எவ்வாறு உதவியது, மற்ற நாடுகள் எந்த வகையில் உதவின என்ற தகவல்களும் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் வெளியான பின்னர் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புயல் வீசத் துவங்கும் என எதிர்பார்க்கலாம்
Average Rating