உள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்களுக்காக முகாம் மக்களை விடுவிக்க முடியாது: கோத்தபாய திட்டவட்டமாக தெரிவிப்பு
“வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அழுத்தங்களுக்கு உட்பட்டு இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் இருந்து விடுதலை செய்ய முடியாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, “அவ்வாறு அவர்களை விடுதலை செய்தால் அகதிகளுடன் மறைந்திருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் வெளியே வந்து வன்னியில் மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலைத் தொடங்கி விடுவார்கள்” எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் மக்கள் அவர்களின் விருப்பத்துக்கு முரணான வகையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக நிராகரித்திருக்கும் அவர், பாதுகாப்பு விவகாரங்களை தனது அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் முற்பட்டிருப்பதாகவும் சாடியுள்ளார். சாதாரண குடிமக்களைப் போல இடம்பெயர்ந்த மக்களுடன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்திருப்பதாகத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு உட்பட்டு அவர்களை விடுதலை செய்தால் அவர்கள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்களை நடத்தத் தொடங்கிவிடுவார்கள் எனவும் குறிப்பிட்டார். வன்னியில் பெரும் தொகையான ஆயுதங்களும் வெடிபொருட்களும் புதைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வன்னியின் கிழக்குப் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர்களை விடுதலை செய்தால் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி அவர்கள் தாக்குதல்களை மீண்டும் தொடங்கி விடுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் கோத்தபாய ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்த அவர், விடுதலைப் புலிகள் அமைப்பை சில மாத காலத்துக்கு முன்னர்தான் நாம் அழித்தோம் என்பதை எதிரணியினரும், ஊடகங்களில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்களும் வசதியாக மறந்துபோய் விடுகின்றார்கள் எனவும் கோத்தபாய குற்றம் சாட்டினார்.
“மே மாதத்தில் விடுதலைப் புலிகளின் தலைமை நந்திக் கடலோரத்தில் வைத்து அழிக்கப்பட்ட பின்னர் எந்தவொரு தாக்குதல் சம்பவம் கூட இடம்பெறாமைக்கு எமது பாதுகாப்பு நடவடிக்கைகளே காரணம். இந்தப் பாதுகாப்பு நடைமுறைகளை நாம் தளர்த்திக்கொண்டால், குண்டுகள் மீண்டும் வெடிக்கத் தொடங்கும். அவ்வாறான நிலையில் அரசு பதவி துறக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதே குழுவினரே முன்வைப்பார்கள்” எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இடம்பெயர்ந்த மக்களை விரைவாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அண்மையில் அரசைக் கேட்டுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்த விடயத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். அப்பாவி மக்களை அரசு தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளும் அனைத்துலக சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளைத் தமது நலன்களுக்குப் பயன்படுத்துவதற்கு முற்பட்டுள்ளார்கள் எனக் குற்றம் சாட்டினார். “இதுதான் அவர்களின் இறுதியான துருப்புச் சீட்டாக இருக்கும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
Average Rating