அ.தி.மு.க. தோல்வியால் பலியானவர்கள் எண்ணிக்கை 99 ஆக உயர்வு மேலும் 8 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் உதவி ஜெயலலிதா அறிவிப்பு

Read Time:3 Minute, 9 Second

Jaya-2.jpg
தேர்தல் தோல்விக்கு பலியான மேலும் 8 அ.தி.மு.க. தொண்டர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

நடந்து முடிந்து சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த கவலையிலும், அதிர்ச்சியிலும் கழக உடன் பிறப்புகள் தங்கள் இன்னுயிரை தொடர்ந்து இழந்து வருவதை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைகிறேன்.

கழகம் வெற்றி வாய்ப்பை இழந்ததால் சென்னை அண்ணாநகர், எம்.ஜி.ஆர்.காலனி வ.உ.சி நகரைச்சேர்ந்த சரவணன் தீக்குளித்தும், ராமநாதபுரம் மாவட்டம் சித்திரக்குடி கிளை கழகத்தைச் சேர்ந்த பிச்சை வேலு விஷம் அருந்தியும், கோவை சுண்டக்காமுத்தூர் கண்ணையன், மதுக்கரை ஒன்றியத்தைச் சேர்ந்த சின்னம்மா, திருச்சி பொன்மலை எஸ்.அர்ச்சுனன், போளூர் ஒன்றியம் கஸ்தம்பாடி கிளை பிரதிநிதி எம்.சிவசங்கரன், கிருஷ்ணகிரி மாவட்டம் விசுவாசம்பட்டி பிரதிநிதி முருகன், ஈரோடு மாவட்டம் குடிசைவலவு கிளை பொருளாளர் ரங்கன் ஆகியோர் அதிர்ச்சியிலும் பலியானார்கள்.

99 ஆக உயர்வு

இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 99 பேர் பலியாகி இருக்கிறார்கள். தற்போது பலியான 8 பேர் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.ஒவ்வொரு நாளும் இந்தத் துயரச் சம்பவங்கள் தொடர்ந்து வருவது குறித்து நான் ஆற்றொணாத் துயரமும், அளவற்ற மன வருத்தமும் அடைகிறேன்.

எதிர் காலம் உண்டு

தேர்தல் தோல்வி தற்காலிகமானது என்றும், மிகச் சிறந்த எதிர்காலம் கழகத்துக்கே உண்டு என்றும், எனவே கவலையோ, அதிர்ச்சியோ அடைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் நான் திரும்பத் திரும்பக் கூறி வருகிறேன். நம்பிக்கையோடும், துணிவோடும் இருந்து ஆக்கப்பூர்வமான கழகப் பணிகளை ஆற்றுவதே தற்போது கழக உடன் பிறப்புகளின் கடமை என்பதை மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்திக் கூறிக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நேற்றும் இலங்கை அகதிகள் 48 பேர் தமிழகம் சென்றனர்
Next post ஓஸ்லோ பேச்சுக்கான அரசாங்க குழு அறிவிப்பு