புலிகளின் தளபதிகள் சொர்ணம், சசிமாஸ்டர் நேற்று தாக்குதலில் பலி: பெருந்தொகையான புலிகள் படையிடம் சரண்!!!
புலிகளின் முக்கிய சிரேஷ்ட தளபதிகளான சொர்ணம் மற்றும் சசி மாஸ்டர் ஆகிய இருவரும் நேற்றுக் கொல்லப்பட்டனர். வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களிலேயே இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டுள்ள பிரபாகரனையும் அவரது முக்கிய சகாக்களையும் இலக்கு வைத்து படையினர் தாக்குதல் நடத்திய வண்ணம் முன்னேறி வருவதாகவும் இறுதிக்கட்ட நடவடிக்கை வெற்றியளித் துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தப்பிச் செல்லமுடியாதவாறு பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளதையடுத்து நூற்றுக் கணக்கான புலி உறுப்பினர்கள் சரணடையத் தொடங்கியுள்ளனர். புலிகளின் தற்கொலை படையணியைச் சேர்ந்தவர்களும் இவர்களுள் அடங்குவதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். பெரும்பாலும் சிறுவர் போராளிகளே உள்ளதாகவும் இவர்கள் அனைவரது தலைமுடி புலித் தலைமைகளினால் வேண்டுமென்றே கட்டாயமாக கத்தரிக்கப் பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவிக்கின் றனர். சில புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கு முன்னர் தமது கைகளிலுள்ள துப்பாக்கிகளை கடலேரிக்குள் வீசிவிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எப்பகுதிக்கும் தப்பிச் செல்ல முடியாதவாறு குறுகிய பகுதிக்குள் முடக்கப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டுள்ள புலித்தலைவர்கள் இறுதி நேரத்தில் பாரிய தற்கொலைத் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவருகிறது என படைத்தரப்பினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பிரபாகரனையும் அவரது சகாக்களையும் இலக்கு வைத்தே 58, 59, 53 ஆவது படையணிகள் சுற்றி வளைப்புகள், முன்னகர்வுகளை மேற்கொள்வதாகவும் பிரபாகரன் இந்த பகுதியில் இருப்பது ஊர்ஜிதம் என்றும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் கரையாமுள்ளி வாய்க்கால் தெற்கு நோக்கியும், சர்வார் தோட்டம் வட க்கு நோக்கியும் முன்னேறிச் சென்ற இராணுவத்தின் 58, 59 ஆம் படையணிகள் வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்றுக் காலை ஒன்றிணைந்தன. இதன் மூலம் புலிகள் குறுகிய பகுதிக்குள் எப்பகுதியிலிருந்தும் வெளியேற முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளனர்.
மன்னாரிலிருந்து பிரிகேடியர் சவேந்திர டி. சில்வா வின் தலைமையில் சென்ற 58 ஆவது படையணியினரும், வெலிஓயாவிலிருந்து பிரிகேடியர் நந்தன உடவத்தவின் தலைமையில் புறப்பட்ட 59 ஆவது படையணி யும் தற்போது பிரிகேடியர் பிரசன்ன சில்வாவின் தலை மையில் முல்லைத்தீவு வெள்ளமுள்ளி வாய்க்கால் கடற் கரைபகுதியை பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
சுமார் 30 வருடங்களின் பின்னர் இலங்கையை சூழவு ள்ள அனைத்து கடற்பகுதிகளும், கடற்கரைப் பகுதிக ளையும் படையினர் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். கடற்புலிகளின் நடவடிக்கைகள் யாவும் முடக்கப்பட்டுவிட்டன.
பாதுகாப்பு வலயம் எனக் குறிப்பிடப்பட்ட குறுகிய பகுதிக்குள்ளிருக்கும் புலித் தலைவர்களை இல க்கு வைத்து 58, 59 ஆவது படையணிகள் மேலும் முன்னேறிச் செல்வதுடன் வெளியேறும் மக்களை மீட்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை 58 ஆவது படையணியை இலக்கு வைத்து புலிகள் அனுப்பிய தற்கொலைத் தாக்குதல் பஸ் வண்டி இலக்கை எட்ட முன்னரேயே வெடித்துச் சிதறியது.
தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு பஸ் வருவதை முன் கூட்டியே அவதானித்த படையினர் தாக்குதல் நடத்தி பஸ்ஸை வெடிக்க வைத்தனர்.
புலிகளின் பிடிக்குள் சிக்கி யிருக்கும் பொது மக்களுள் பெரும் பகுதியினர் நேற்றும் படையினரின் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் வந்தனர். நேற்று மாலை வரை சுமார் 6000 பேரளவில் வந்தனர். அரசு அறிவித்த முதல் 48 மணி நேரம் முதல் நேற்று மாலை வரை சுமார் 20,000 பேர் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை கடந்த சில தினங்களாக வருகை தந்த பொது மக்களுள் சுமார் 12000 பேர் நேற்று வவுனியா ஓமந்தையூடாக அழைத்து வரப்பட்டனர். பஸ் வண்டிகள் மூலம் அழைத்து வரப்பட்ட இவர்கள் நேற்று இராமநாதன்,
அருணாசலம் நிவாரணக் கிராமங்களுக்கு கொண்டு வரப்பட்டனர். தொடர்ந்தும் பொது மக்கள் கொண்டு வரப்படுவதால் ஓமந்தையில் பொது மக்களுக்கு வழங்கு வதற்காக உணவு, தண்ணீர், மருத்துவ உதவிகளை வவுனியா அரச அதிபர் அலுவலகம் ஆயத்த நிலையிலேயே வைத்துள்ளது.
வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியை பூரண கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்த படையினர் நடத்திய தேடு தலின் போது 152 எம். எம். ரக ஆட்லறி மற்றும் 140 எம். எம். ரக மோட்டார் போன்ற கனரக ஆயுதங்கள் உட்பட வெடி பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். கனரக ஆயுத மீட்பில் 140 எம். எம். ரக மோட்டார் ஒன்றை மீட்டெடுத்தது இதுவே முதற் தடவை எனவும் படைத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
படையினரின் முன்னகர்வை தடுப்பதற்காக புலிகளால் தகர்க்கப்பட்ட வட்டுவாக்கல் பாலத்தை மீண்டும் படை யினர் பல மணி நேரத்துள் பாதையை சரி செய்து பொது மக்களின் வருகையை இலகுபடுத்தினர்.
பொது மக்களின் வருகையை தடுக்கவும் படையினரின் முன்னகர்வை கட்டுப்படுத்தவும் இந்தப் பாலத்தை நான்கு புறத்திலும் புலிகள் தகர்த்திருந்தனர்
3 thoughts on “புலிகளின் தளபதிகள் சொர்ணம், சசிமாஸ்டர் நேற்று தாக்குதலில் பலி: பெருந்தொகையான புலிகள் படையிடம் சரண்!!!”
Leave a Reply
You must be logged in to post a comment.
வகை தொகை இன்றி மக்களை பலிகொடுத்து என்ன ஐயா கண்டீர்?
இவர்களின் மரணமும் வேதனை தான்… புலிகளின் தலைமை பீடம் முன்னரே நல்ல முடிவுகளை எடுத்து இருந்தால் இவற்றை தவிர்த்து இருக்கலாம்….
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வடக்குகிழக்கில் இருந்த மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் நாட்டைவிட்டு நிரந்தரமாக வெளியேறிவிட்டார்கள். இன்னுமொரு மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் நிரந்தரமாக தெற்கில் குடியேறிவிட்டார்கள். வடக்கு கிழக்கில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களே உள்ளனர்.தமிழ் பகுதிகளை விட்டு வெளியேறி வாழும் தமிழர்களுக்கு இணையாக சிங்களவர்களோ அல்லது முஸ்லீம்களோ தமிழ் பகுதிகளில் இல்லை.
சிங்களவர்கள் இவற்றை தமிழர் நினைக்கும் அளவுக்கு பெரிதுபடுத்தியதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு நிலை இருந்தால் தமிழர்கள் சிங்கள பகுதிகளை விட்டு எப்போதோ இல்லாமல் போயிருக்க வேண்டும்.இந்திய தமிழ் நாட்டு அரசியல் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு ஆதாயம் தேடும் ஒரு அரசியல். அது நம் தமிழ் அரசியல் வாதிகள் தொட்டு போராளிகள் வரை தொடர்ந்து வந்து கொண்டே இருந்திருக்கிறது.இருக்கிறது. இதுவும் ஒரு அவலம்தான். இதன் பிரதிபலிப்புதான், உலக நாட்டுத் தலைவர்களிடம், நம்மவர்கள் உணர்ச்சி மேலீட்டால் உருவாக்கும் அனுதாபங்களைக் கூட,சிங்கள அரசியல்வாதிகளால் லொஜிக்காக தகர்க்க முடிந்திருப்பதற்கான காரணம். சிங்கள தலைமைகள் ஐயோ அடிக்கிறான் என்று கத்தியதும் இல்லை. அடிச்சுப் பிடிச்சிட்டோம் என்று குதித்ததுமில்லை. அவர்கள் நிதானமாக தமது சிந்தனைகளை நகர்த்திக் கொண்டேயிருக்கிறார்கள். எனவே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுக்கு வழி ,அனைத்து மக்களும் எங்கும் தனி ஒரு குழுவாக வாழாமல், நாடு முழுவதும் பரந்து வாழ்வதும் , இரு மொழிக் கல்வியை (தமிழ் – சிங்களம்) கட்டாயமாகக் கற்று புரிந்துணர்வோடு வாழ்வதுமேயாகும். மொழி, மனிதனை புரிந்து கொள்வதற்கான வழி. உலகமெல்லாம் பரவி விட்ட தமிழர்கள் , தாம் வந்த நாட்டு மொழியை கற்றுக் கொள்ள முடியுமானால், தான் வாழும் நாட்டின் சகோதர மொழியைக் கற்க முடியாது என்பது பிடிவாதமாக மறுப்பதாகவே இருக்கிறது. அந்த சிந்தனையை உருவாக்கிய பெரும் தவறு நம் தமிழ் அரசியல்வாதிகள் சார்ந்தது. அந்நிலை மாற வேண்டும். உன்னால் ஒரு மனிதனை புரிந்து கொள்ள முடியுமானால், அவனோடு இணைந்து வாழ்வது ஒன்றும் சாதனையல்ல. அது சரித்திரம். அதற்காக அவன் மொழி நமக்கு தெரிய வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் மொழி அறிவும் , கலந்து நட்போடு வாழும் மன நிலையும் , அந்த இணைப்பினால் அனைவருக்கும் கிடைக்கும் வசதி வாய்ப்புகளும் ஒற்றுமையான புது வசந்தத்தை அனைத்து மக்களுக்கும் கிடைக்க வழி அமைக்கும்.
முதன் முதலில் சுயாட்சிக் கழக நவரட்னம் தமிழீழ கோரிக்கையை முன்வைத்தார்.அப்போது மக்கள் அவரையும் அவருடைய தீர்வையும் ஏற்றுக்கொள்ளவில்லை.அப்போது இந்த தனிநாட்டு தீர்வை அமிர்தலிங்கம் “தற்கொலைக்கு ஒப்பான தீர்வு”என்றார். இந்த இடைக்கால கட்டத்தில் அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றோர் தேர்தலில் தோற்றதைத் தவிர வேறு மாற்றம் எதுவும் நடைபெறவில்லை. அமிர்தலிங்கம் தனது தேர்தல் சுயநல அரசியலுக்காகவே தமிழீழ தனிநாட்டு தீர்வை முன்வைத்தார் என்பது உணர முடிகிறது. வட்டுக்கோட்டை தனி அரசு பிரகடனப் பாதை, ஒரு பிடி சோற்றுக்கும், திறந்த வெளிச் சிறை வாழ்வுக்கும், நிவாரணத்தில் தங்கி வாழ்வதற்கும், நாடோடியாக அகதியாக அலைவதற்கும் வித்திட்டுள்ளது.
1977 ம் ஆண்டு யூலை மாதம் 21ந் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமது வேட்பாளர்களை நிறுத்தியபோதும் அக்கோரிக்கை தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த 878,143 தமிழ் வாக்காளர்களில் 394,992 வாக்காளர்கள் மட்டுமே தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு வாக்களித்தனர். இத்தொகை மொத்த தமிழ் வாக்காளர்களில் 45% வாக்காளர்கள் மட்டுமே த.வி.கூட்டணியினருக்கு வாக்களித்தனர். ஒரு தனி இறைமை பெற்ற நாட்டினுள் ஒரு நாட்டினை அமைப்பதானால் குறைந்தபட்சம் 67%மக்களின் ஆதரவு பெறவேண்டியது கட்டாயமானதென்பதே சர்வதேச நியதியாகும்.
விட்ட தவறுகளை மறுப்போரும், செய்த குற்ரங்களை ஏற்காதவரும் தமிழினத்தின் தலைவராகவோ, அல்லது வழிகாட்டியாகவோ ஒருபோதும் இருக்கமுடியாது. இன்றைய சூழலில் இலங்கையில் சமாதானமும், தமிழ் சிஙகள, முஸ்லிம் இனங்களிற்கிடையே ஒற்றுமையுமே முக்கியமானது. புலத்தில் வாழும் தமிழர் சிங்களவர் தமிழரிற்கு பகைவர்கள் என்பதனை மட்டுமே தளமாகவைத்து நடத்தும் போராட்டங்கள் ஈழ்த்தமிழர் நிலைமையை மேலும் மோசமடையச் செயுமே தவிர ஒருவ்கையான தீர்வையும் தரப்போவதில்லை. சிங்கப்பூரை உருவாக்கிய லீ குவான்யூ, இலங்கையை பார்த்த பின் இலங்கை போல் சிங்கப்பூரை உருவாக்க வேண்டும் என எண்ணம் கொண்டு சிங்கப்பூரை உருவாக்கினார். பின்னர் அதே லீ குவான்யூவால் இலங்கை போல் என் நாடு ஆகக் கூடாது என்றும் சொன்னார். முன்னது பெருமை. பின்னது வெட்கம். இனி ஒரு போதும் அழிவுகள் இலங்கை மண்ணில் இல்லாமல் போக வேண்டுமானால் , மிகுதி தமிழரும் சுபீட்சமாக வாழ வேண்டுமானால் அனைத்து மக்களும் இலங்கை முழுவதும் பரவி வாழும் நிலைமை உருவாக வேண்டும். இது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், மொழி அறிவை பகிர்ந்து கொள்ளவும் ,அப் பகுதியின் வளர்ச்சிக்கான நிதி பங்கீடுகளை சம அளவாக பெறவும் உதவும். ஒரு பகுதியின் முன்னேற்றமே அம் மக்களின் வாழ்வை வளமாக்கும். தமிழரோடு சிங்களவரும் கலப்பதால் அங்கு முன்னேற்ற வழிவகைகளுக்கான நிதி பங்கீடுகள் சிங்கள பகுதிகளுக்கு போல் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். மொழி வாழ வேண்டுமானால், அந்த மொழி பேசும் மனிதன் வாழ வேண்டும். அந்த மனிதன் வாழ வேண்டுமானால் அந்த மனிதன் உயிரோடு இருக்க வேண்டும். அதைவிடுத்து இன்னொரு இன அழிப்புக்கான எண்ணங்கள் இனி எவர் மனதிலும் உருவாக்கப்படக் கூடாது. புலிகளுக்கு இப்படியான கருத்துகள் பாவற்காய் போலவே இருக்கும். எம் மக்களை இந்த நிலைக்கு தள்ளியவர்கள் அவர்களே. என்றும் மக்களே முக்கியம்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் வந்த போது அதை நிறைவேற விடாது செய்ததில் புலிகளின் பங்கும் பெரிதானது. அதை நிறைவேற்ற இந்திய அரசிற்கு உதவியிருந்தால் பின்னாளில் படிப்படியாக எமது அதிகாரங்களைப் பெற்றுத் தர இந்திய அரசும் உதவியிருக்கும். பினபு இந்திய இராணுவத்தை எதிர்க்க பிரமேதாசா அரசுடன் கைகோர்த்து நாங்கள் சகோதரர்கள் இன்று அடித்து கொள்வோம் நாளை அணைத்துக் கொள்வோம் எமது பிரச்சினைகளை நாமே பார்த்துக் கொள்வோம் என்று கூடிக் குலாவினர் புலிகள். இந்தச் சந்தர்ப்த்தைப் பாவித்து பிரேமதாசா அரசுடன் ஏதாவது பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு பெற்றார்களா புலிகள்?? மாறாக தமது அரசியல் எதிரிகளை போட்டுத் தள்ள பிரேமதாசா அரசின் மறைமுக உதவிகளையும் ஆயுதங்களையும் கோடிக்கணக்காக பணத்தையும் பெற்றுக் கொள்ளவே புலிகள் முயன்றனர். ரணில் அரசுடன் போர் நிறுத்த ஒப்பத்தம் செய்யப்பட்ட போது கூட புலிகள் தம்மை வளப்படுத்தவே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு கருணா புலிகளிலிருந்து பிரிந்த பின் கருணாவிடமிருந்து ஆயுதக் களைவைச் செய்யச் சொல்லியே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ரணில் அரசுடன் சுவிசில் பலமுறை பேச்சு வார்த்தை நடாத்திய புலிகள் ஒருமுறையாவது தமிழ்மக்களுக்கான தீர்வைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார்களா?? மாறாக வரி என்ற பெயரில் பகல் கொள்ளை அடித்ததும் வெளிநாட்டுத் தமிழர்களிடமும் வெளிநாட்டு உதவி நிறுவனங்களிடமும் தமிழ் மக்களுக்கு நிவாரணமளிக்க என்று சுருட்டிய பணத்தில் தமகு்கு ஆடம்பர பங்களாக்களும் நீச்சல் தடாகங்களும் கட்டி சொகுசு வாழ்க்கை நடத்தத் தொடங்கினார்கள். ஆனால் வன்னியில் புலிகளின் பிடியில் மாட்டுப்பட்ட மக்கள் மரங்களின் கீழ் கற்கால வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றவர்களே புலிகள். இந்த நரகத்தை உருவாக்கியவர்கள் தமது சொந்த வாழ்கையை நன்கு வாழ்ந்து விட்டார்கள். இந்த நரகத்தை உருவாக்கவும் தொடரவும் உதவிய “புலன்” பெயர் தமிழர் எந்தக் குறையும் இன்றி வாழ்கிறார்கள். இவர்களை நம்பி எனியும் நம் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையையும் அழித்துக் கொள்ள விரும்புகின்றீர்களா? புலிகளின் காலாவதியான சுடுகாட்டுக்கு இட்டுச் செல்லும் அரசியலில் உங்களை ஈடுபடுத்தாது, இந்த நூற்றாண்டுக்கு பொருத்தமானதும் ஆக்கபூர்வமான சிந்தனையில் வழிகாட்டலில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.