தனுஷிகா என்ற சிறுமியைக் கடத்தி கப்பக் கோரிக்கை விடுத்து கொலை செய்யப்பட்டதை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிக்கின்றது..
மட்டக்களப்பில் அண்மையில் எட்டு வயதுடைய பாடசாலை மாணவியான சதீஸ்குமார் தனுஷிகா என்ற சிறுமியைக் கடத்தி கப்பக் கோரிக்கை விடுத்து கொலை செய்யப்பட்டதை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிக்கின்றது. மேலும் அங்கு கடத்தப்பட்ட பாடசாலை சிறுவர்களான ஏரம்பமூர்த்தி ஜனார்த்தனன், வள்ளுவன் ஜீவகுமார் ஆகியோரை உடனடியாக விடுவிக்குமாறும் வேண்டுகிறது. இச்சிறுமியின் கொலையுடன் தொடர்புடையதாக கருதப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டமையால் இதில் தொடர்புடைய பெரிய புள்ளிகள் சிலர் தப்பிவிடுவார்கள். இந்த சந்தேக நபர்களின் கொலைகள் திட்டமிட்டு நடைபெறுவதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றது. ஏன் எனில் திருகோணமலைச் சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் கொலைகளும் இப்படியான முறையிலேயே நடந்துள்ளது. கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்டு ஜனநாயகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் இவ்வேளையில் இப்படியான சம்பவங்கள் கடந்த சில காலமாக நடைபெறுவதன் மூலம் அங்குள்ள தமிழ் மக்களை ஆயுத அடக்கு முறை கலாச்சாரத்திற்கு அடிபணிய வைக்கப்படுவதை எந்த ஒரு ஜனநாயக வாதியும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அண்மைக்காலமாக யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் நடந்த, நடக்கின்ற கடத்தல்கள், கப்பம், கொலைகள், கொலைமிரட்டல்கள், கொள்ளைகள் என்பனவற்றை யார் செய்கின்றார்கள் எனபது மக்களுக்கு நன்கு தெரிந்தும் பயத்தின் நிமித்தம் எவரும் சாட்ச்சி சொல்ல முன்வரமாட்டார்கள். ஆனால் ஜனாதிபதி அவர்கள் விசாரனை குழு ஒன்றை நியமித்து அதற்கு சாட்ச்சி சொல்ல வருவோரின் இரகசியம் காக்கப்படும் என உத்தரவிடின் இச்செயலில் ஈடுபடுவோரை மிக எளிதில் கண்டுபிடிக்க முடியும். இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், இப்படியான கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதற்கும், கப்பம், கடத்தல், கொள்ளைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் அத்துடன் இச்சம்பவங்களுக்கு ஆயுதக் குழுக்களே மூல காரணமென்பதனால் அனைத்து ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை முழுமையாக உடனடியாக களையவேண்டும் எனவும் நாங்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். தேவை ஏற்படின் அவர்களுக்கு அரச பாதுகாப்பு வழங்கலாம். மேலும் சதீஸ்குமார் தனுஷிகாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் எனவும் அச்சிறுமியின் இழப்பால் துடிக்கும் அவரின் குடும்பத்தினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வீ. ஆனந்தசங்கரி, தலைவர், தமிழர் விடுதலைக் கூட்டணி.
2 thoughts on “தனுஷிகா என்ற சிறுமியைக் கடத்தி கப்பக் கோரிக்கை விடுத்து கொலை செய்யப்பட்டதை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிக்கின்றது..”
Leave a Reply
You must be logged in to post a comment.
இந்த உலகில் கண்டன அறிக்கையால் எந்த பயனும் இல்லை…..
ஆனாலும் இந்த அரசியல் தலைவர்கள் கண்டன அறிக்கை விடுவதில் சளைத்தவர்கள் இல்லை…
கண்டன அறிக்கைகளை விட்டு விட்டு உங்களால் முடிந்த உடனடி நடவடிக்கையில் இறங்குங்கள்..
பேச்சுப் பல்லக்கு… தம்பி பொடி நடை… என சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள்.
அறிக்கை விட்டுக் காலம் தள்ளும் ஆனந்தசங்கரி ஐயா!
செயல் வீரன் எனப் பெயர் எடுப்பதெப்போ?