பிரபா இறுதிநேரத்தில் தப்பிச்செல்ல பாரிய 11 படகுகள் தயார் நிலையில்.. ‘புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் எட்டியுள்ளது’ என்கிறார் உதய நாணயக்கார
புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இறுதி நேரத்தில் தப்பிச் செல்வதற்காக சகல வசதிகளையும் கொண்ட 11 பாரிய படகுகள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்கள் கடல் வழியைப் பயன்படுத்தி தப்பிச்செல்வதை தடுக்கும் வகையில் அங்குள்ள கரை யோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டு ள்ள சகல மீனவப் படகுகளையும் தீயிட்டுக் கொளுத்துமாறு புலிகளின் தலைமைத்துவம் உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெற்றது. தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில்:- பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள மிகவும் குறுகியதும், ஒடுக்கமானதுமான பிரதேசத்தில் முற்றாக முடக்கிவிடப்பட்டுள்ள புலிகளின் தலைவர்கள் எவ்வாறாவது தப்பிச் செல்வதற்கு முயற்சித்து வருகின்றனர். பிரபாகரன் மற்றும் அவரை சுற்றியுள்ள முக்கியஸ்தர்கள் மாத்திரம் தப்பிச் செல்வதற்கென ஆறு பாரிய படகுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதிநவீன தொழில் நுட்ப கருவிகள், ஜி. பி. எஸ். கருவிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட சகல வசதிகளையும் கொண்டதாக இந்த படகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, தப்பிச் செல்பவர்களுக்குத் தேவையான உணவு வகைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் களஞ்சியப் படுத்தப்பட்ட மேலும் 5 படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதென புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.
எனினும், புலிகள் எந்த வகையிலும் தப்பிச் செல்ல முடியாத வகையில் சகல நடவடிக்கைகளையும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, எஞ்சியுள்ள பிரதேசத்தில் புலிகள் தங்களது பாதுகாப்புக்காக பணயமாக பிடித்துவைத்துள்ள பொது மக்கள் தரைவழியையோ கடல் வழியையோ பயன்படுத்தி எந்த விதத்திலாவது தப்பி பாதுகாப்பு படையினரை நோக்கி வர தயாராகக் காத்திருக்கின்றனர்.
இந்த மக்கள் தரைவழியால் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தி தடுத்துவரும் புலிகள் இந்த மக்கள் கடல் வழியை பயன்படுத்தி தப்பிச்செல்வதையும் தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள பிரதேசத்தில் உள்ள சகல மீனவப் படகுகளை உடைத்து தகர்க்கும் வகையிலும், எரித்து நாசமாக்கும் வகையிலும் புலிகளின் உயர்மட்டம் தமது சகாக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ¤லுகல்லே, விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Average Rating