ஷ்ரத்தா ஸ்ரீநாத்-ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!! (மருத்துவம்)
தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சவாலான பல கதாபாத்திரங்களில் நடித்து குறுகிய காலத்தில் திறமையான நடிகை என்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷ்ரத்தா நாத். காஷ்மீரில் பிறந்தவரான ஷ்ரத்தா நாத் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். அவருடைய தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றியதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பள்ளிக் கல்வியை முடித்தார்.
சட்டத்தில் பட்டம் பெற்றுள்ள ஷ்ரத்தா, நடிகையாவதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். அவருக்கு சிறுவயது முதலே நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால், பள்ளி, கல்லூரி காலத்தில் இருந்தே அவ்வப்போது நாடகங்களில் நடித்துவந்தார். இதன் மூலம், விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்புகிட்ட நடித்து வந்தார்.
இந்நிலையில், 2015-ல் வெளியான ‘கோஹினூர்’ என்னும் மலையாளப் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன்பின்னர், ‘யூ டர்ன்’ என்னும் கன்னடப் படத்தில் நாயகியாக நடித்தார். பின்னர், 2016- ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’, நேர்கொண்ட பார்வை, மாறா போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் ஷ்ரத்தா, இப்போது தமிழில் இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்கிவரும் இறுகப்பற்று படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஷ்ரத்தா தனது ஃபிட்னெஸ் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
வொர்க்கவுட்ஸ்
நடிக்க வருவதற்கு, முன்பு நான் உடல் எடையைப் பற்றியெல்லாம் யோசித்ததே இல்லை. பிடித்ததை, இஷ்டப்படி சாப்பிடும் பழக்கம் உடையவளாக இருந்தேன். இதனால், நல்ல குண்டாக இருந்தேன். ஆனால் நடிகையாக வேண்டும் என்று முடிவெடுத்ததும் எனக்கு முன்னால் நின்ற முதல் சவால், உடல் எடையை குறைப்பதுதான்.
அதற்காக, முதல்முறையாக ஜிம்முக்கு போனேன். அங்கே எனக்கு அருமையான பயிற்சியாளர் கிடைத்தார். அவர் கொடுத்த ஊக்கம்தான் என் உடல் எடையை குறைப்பதற்கான முயற்சிகளை விடாப்பிடியாக செய்ய வைத்தது. தினமும் மூன்று வேளையும் வொர்க் அவுட் பண்ணணும்னு என்னை விரட்டுவார். அப்படியொரு மோட்டிவேஷன் எனக்கு அப்போது அவசியமாக இருந்தது. வொர்க் அவுட் பண்றதுங்கிறது தவம் மாதிரி என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டேன். அதிலிருந்து எவ்வளவுதான் பிஸி ஷெட்யூலாக இருந்தாலும் வொர்க் அவுட்க்கான நேரத்தையும் ஒதுக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் டிரெட்மில்லில் 5 நிமிடம் ஓடத் தொடங்கிய நான் பின்னர், 15 நிமிடங்களாக உயர்த்தினேன். தற்போது 40 நிமிடங்கள் வரை ஓடுகிறேன்.
இதைத்தவிர, பைலேட்ஸ், கார்டியோ பயிற்சிகள், ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், வேகமான நடைப்பயிற்சி என வழக்கமான பயிற்சிகளும் உண்டு. கார்டியோ பயிற்சிகள் இதயயத்துடிப்பை அதிகரிப்பதோடு, கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. இதைத்தவிர, தினசரி யோகாவுக்காக குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது ஒதுக்கிவிடுவேன். இதன் மூலம் கடந்த 2019 இல் இருந்து தற்போதுள்ள உடல் எடையை பராமரித்து வருகிறேன்.
டயட்
என் கல்லூரி காலத்தில்தான் சுவையான உணவுகளை தேடி தேடி உண்ணும் பழக்கம் என்னிடம் ஒட்டிக் கொண்டது. பெங்களூர் ஸ்ட்ரீட் ஃபுட்டில் நான் சுவைக்காத அயிட்டமே கிடையாது எனலாம். சாட் வகைகள், தட்டு இட்லி, தாவன்கரே, பென்ன தோசை இதெல்லாம் ரொம்ப பிடிக்கும். பென்ன தோசை மைசூரில் ரொம்ப பேமஸ். அதனால், ஒரு பென்ன தோசை சாப்பிடுவதற்காக அப்பாவை அழைத்துக் கொண்டு மைசூர் வரை கூட சென்று சாப்பிட்டு வந்திருக்கிறேன். ஆனால், எப்போது, ஜிம்முக்குள் முதல்முறையாக நுழைந்தேனோ, அப்போதிலிருந்தே, அதிகப்படியாக சாப்பிடுவதையும் விட்டுவிட்டேன்.
அதிலும், தற்போதெல்லாம் ஹெல்த்தியான ஆரோக்கியமான உணவு வகைகளில் அதிகமாகவே கவனம் செலுத்துகிறேன். அந்த வகையில் தற்போது, எனது தினசரி உணவில், பச்சை காய்கறிகள், நட்ஸ் வகைகள், பழங்கள், தயிர் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்கிறேன். இருந்தாலும், சாட் வகைகளை பார்த்துவிட்டால், என்னை கட்டுப்படுத்துவதுதான் எனக்கு மிகவும் சவாலானது.
பியூட்டி
என்னுடைய ஸ்கின் பாதுகாப்பிற்காக, க்ளன்சர், மாய்சுரைஸர், சன் ஸ்க்ரீன் போன்றவை எப்போதும் மேக்கப் கிட்டில் கட்டாயம் இருக்கும். இதைத்தவிர தேங்காய் எண்ணெயையும் அதிகம் பயன்படுத்துவேன். ஏனென்றால் ஸ்கின்னை ட்ரை ஆகாமல் பார்த்துக் கொண்டாலே, தோல் பளபளப்பாகவும், அழகாகவும் இருக்கும்.
மற்றபடி மேக்கப் என்று எடுத்துக் கொண்டால் எனக்கு லைட் மேக்கப் செய்வதுதான் மிகவும் பிடித்தமானது. அதுபோன்று, வெளி இடங்களுக்கு போகும்போது, பெரிய பெரிய காதணிகள், மோதிரம் அணிந்து கொள்வது மிகவும் பிடிக்கும். அது பார்ப்பதற்கு அழகான தோற்றத்தையும் அளிக்கிறது.