கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 53 Second

* ஒரு நிமிடத்தில் ரய்த்தா தயாரிக்க. ஒரு கிண்ணம் கெட்டித்தயிரில் இரண்டு சிட்டிகை உப்பும், அரைத் தேக்கரண்டி சாட் மசாலா அல்லது சன்னா மசாலா பொடியும் சேர்த்துக் கலக்கினால் ஃப்ரைடு ரைஸுக்கு ஏற்ற திடீர் ரய்த்தா தயார்.

* வேக வைத்த உருளைக்கிழங்குடன் அரிசி மாவு, கடலைமாவு சேர்த்து ஓமப் பொடி பிழிந்தால் ஓமப் பொடி மிகவும் சுவையாக இருக்கும்.

* ஹோட்டல் பூரி போல் உப்பலாக பூரி வேண்டுமா? கோதுமை மாவைப் பிசையும் போதே ஒரு தேக்கரண்டி சோயா மாவு, அரைத்தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பூரி உப்பலாக வரும். இது சீக்கிரத்தில் நமர்த்தும் போகாது.

* வெங்காய பக்கோடா செய்ய பாதி வெங்காயத்தையும், இஞ்சியையும் மிக்ஸியில் அரைத்து எடுத்து அந்த விழுதை மாவில் கலந்து செய்தால் பக்கோடா
‘கமகம’வென்று வரும்.

– கீதா ஹரிஹரன், கேரளா.

* கேரட் துருவலுடன் வெல்லம் சேர்த்து கெட்டிப்பாகு காய்ச்சி, அந்தப்பாகை வேக வைத்து எடுத்து, பொங்கலோடு கலந்து செய்தால் மாறுதலான சுவையுடனும், அழகான நிறத்திலும் பொங்கல் இருக்கும். பொங்கலை எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

* சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது நன்கு கனிந்த பலாச்சுளைகளை பாலில் அரைத்துப் போட்டு செய்தால் பொங்கல் அமிர்தமாக இருக்கும்.

* எண்ணெய் ஜாடிகளையோ, பாட்டில்களையோ ஒரு எவர் சில்வர் தட்டில் வைத்து பயன்படுத்தினால் அந்த இடம் எண்ணெய் சிக்கு பிடிக்காது. சுத்தம் செய்வதும் சுலபம்.

* காளானைச் சமையல் செய்யும் போது அது வேக தண்ணீர் விடாதீர்கள். கொஞ்சம் எண்ணெய் மட்டும் விடுங்கள் போதும். காளானில் உள்ள தண்ணீரே அது வேகப் போதுமானது.

– எம்.ஏ. நிவேதா, திருச்சி.

* ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போடலாம்.

* கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.

* இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவைப் படும்போது வற்றலாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்!

-அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

* வெந்நீரில் சிறிது டால்டா கலந்து, கோதுமை மாவில் ஊற்றி பிசைந்து சப்பாத்தி செய்தால், மிகவும் மிருதுவாக இருக்கும்.

* வழக்கமாக தயார் செய்யும் சப்பாத்தி மாவுடன் துருவி வேக வைத்து மசித்த கேரட் மற்றும் சீரகப் பொடி ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி செய்தால் சுவை
நன்றாக இருக்கும்.

* ரவையை வறுக்கும் பொழுது, சிட்டிகை உப்புத்தூள் கலந்து வறுத்தால், நீண்ட நாட்கள் புழுக்கள் அண்டாது.

– எல்.உமா ராதாகிருஷ்ணன், வாணியம்பாடி.

* வற்றல், வடாகம் போடு முன் காலை இளம் வெயிலில் பிழியவும்., காகம் கொத்தாமல் இருக்க, கருப்புத்துணி அல்லது குடையை குச்சியில் கட்டி வைக்கவும்.

* வடாகத்திற்கு மாவை மெஷினில் அரைக்கும்போதே, ஜவ்வரிசி சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம். வடாம் மாவில் புளித்த மோர் அல்லது எலுமிச்சைச்சாறு விடலாம்.

* மாவு புளித்த பிறகு வற்றல் இட்டால், சுவை கூடும். துணியில் வற்றல் பிழிந்தால், காய விட்டு, நீர் தெளித்து, துணியில் இருந்து எடுக்கவும். 2 அல்லது 3 நாட்கள் நன்கு காய விடவும். சரியாக காய வில்லை என்றால், பூஞ்சை பிடித்துவிடும்.

* வற்றல் வகைகளை மைக்ரோவேவ் அவனிலும் பொரிக்கலாம்.

– என். குப்பம்மாள், கிருஷ்ணகிரி.

* உருளைக்கிழங்கை வறுவல் செய்யும்போது சட்டென நிறம் மாறாமல் இருக்க சிறிதளவு தண்ணீரில் கடலை மாவைக் கரைத்து உருளைக்கிழங்கை சீவிப்போட்டு எடுத்து சுத்தமான வெள்ளை துணியில் உலர்த்தி வறுக்கலாம்.

* ேதாசை மாவுடன் ஒரு தம்ளர் தேங்காய்ப்பாலை ஊற்றி தோசை வார்க்க தோசை தேங்காய் வாசனையுடன் மொறு மொறுவென புளிப்பு இல்லாமல் இருக்கும்.

* ஜவ்வரிசி மட்டும் போட்டு பாயசம் செய்யும்போது, இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவையும் பாலில் கலந்து பாயசத்தில் ஊற்ற பாயசம் கெட்டியாக இருப்பதுடன் மணமாகவும் இருக்கும்.

* இரண்டு வாழைப்பழம், சிறிது சர்க்கரையை மிக்ஸியில் அரைத்து, ஒன்றரை தம்ளர் தண்ணீர் கலந்து ஏதாவது ஒரு எசன்ஸ் ஊற்றினால் புதுமையான, சுவையான பாயசம் ரெடி.

– ஆர்.பூஜா, சென்னை.

தேன்குழல்

தேவையானவை:

பச்சரிசி- 200 கிராம்,
உளுத்தம் பருப்பு- 50 கிராம்,
கடலைப்பருப்பு- 100 கிராம்,
பாசிப்பருப்பு- 100 கிராம்,
தேங்காய்- 1 மூடி,
சீரகம்- 1 தேக்கரண்டி,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய்- அரை லிட்டர்.

செய்முறை: அரிசியை ஊறவைத்து, களைந்து நிழலில் காயவைக்கவும். பருப்பு வகைகளைத் தனித்தனியாக ெபான்னிறமாக வறுக்கவும். அரிசியை லேசாக வறுக்கவும். அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாகக் கலந்து நைசான பதத்தில் மாவாக அரைக்கவும். அரைத்த மாவில் உப்பு, சீரகம் சேர்க்கவும். தேங்காய் மூடியைத் துருவி பால் எடுக்கவும். மாவு கலவையில் தேங்காய்ப் பாலை ஊற்றி கெட்டியாக பிசைந்து, மகிழம் பூ அச்சில் மாவை போட்டு எண்ணெயில் பிழியவும். வெள்ளையான பதத்தில் பொரித்து எடுக்கவும். சுவையான கரகரப்பான தேன்குழல் தயார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா ? (அவ்வப்போது கிளாமர்)
Next post அழகு தரும் வளையல் அலங்காரம்! (மகளிர் பக்கம்)