நியுயார்க் மிஷுலான் ஸ்டார் உணவக மெனுவில் ‘மோர் களி’!! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 54 Second

திருமணமாகி 15 வருஷத்தில் குடும்பம், கணவர், குழந்தைகள்தான் என் குடும்பம்னு இருந்தேன். எனக்காக நான் தனிப்பட்ட முறையில் எதுவுமே செய்து கொண்டதில்லை. கோவிட் தாக்கம் பலரின் வாழ்க்கையில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியது. என் வாழ்க்கையிலும் அந்த பெரிய மாற்றம் நிகழ்ந்தது. எனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள அதுவே ஒரு வாய்ப்பாக அமைந்தது. இப்போது நான் இணையத்தில் ஒரு கன்டென்ட் கிரியேட்டராக வலம் வருகிறேன்.

அது மட்டுமில்லாமல் என் கணவருடன் இணைந்து தொழிலதிபராகவும் செயல்பட்டு வருகிறேன்’’ என்கிறார் அருணா விஜய். சென்னையை சேர்ந்த அருணா இந்தியாவின் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட போட்டியாளராக தேர்வானவர். தற்போது இவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடும் தமிழக உணவுகள் குறித்த வீடியோக்களுக்கு என தனிப்பட்ட ஃபாலோவர்கள் உள்ளனர்.

‘‘இந்த மூன்று வருடம் நான் யார் என்ற அடையாளத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இணையங்கள் இயங்கி வந்தாலும், கோவிட் பிறகுதான் அதன் பயன்பாடு அதிகமானது. ஊரடங்கு, வீட்டை விட்டு எங்கும் செல்ல முடியாத நிலை. எவ்வளவு நேரம் தான் தொலைக்காட்சியை பார்ப்பது… வீட்டில் பொழுது போக வேண்டும் என்பதற்காகவே பலர் உணவு புகைப்படங்களை இணையத்தில் அப்லோட் செய்ய ஆரம்பித்தனர். அப்படிப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. வீட்டில் நான் சமைக்கும் உணவினை புகைப்படம் மற்றும் அதன் தயாரிக்கும் வீடியோக்களை பதிவு செய்தேன். பலருக்கு பிடித்து என்னை பின்பற்ற ஆரம்பித்தார்கள். அதனாலேயே அதை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன்.

பலர் நேரம் வீண் என்றார்கள். எதற்காக இதை செய்கிறாய் என்ற அவர்களின் கேள்விக்கு என்னிடம் அப்போது விடை இல்லை. எனக்கு பிடிச்சிருந்தது அதனால் செய்கிறேன் என்றேன்’’ என்றவர், தமிழக உணவினை பதிவு செய்யும் காரணத்தைப் பற்றி விவரித்தார்.‘‘ஆரம்பத்தில் நானும் எல்லாவிதமான உணவுகளின் வீடியோக்களை வெளியிட்டேன். அதைத்தான் பலரும் செய்றாங்களே. எனக்கான தனிப்பட்ட அடையாளம் இதில் என்ன இருக்கு என்று தோன்றியது. அதனால் ஒரு குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே பதிவு செய்ய திட்டமிட்டேன். அப்படித்தான் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு உணவுகள் குறித்த வீடியோக்களை அப்ேலாட் செய்தேன்.

காரணம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 100 கிலோ மீட்டர் கடந்தாலே உணவினை தயாரிக்கும் முறை மற்றும் அதற்கென தனிப்பட்ட பாரம்பரியம் உண்டு. அதைத் தெரிந்து கொள்ள பலவிதமான தமிழக உணவுகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டேன். ஒரு உணவகம் சென்றால் அங்கு இட்லி, தோசை, செட்டிநாடு, சைனீஸ் உணவுகள்தான் இருக்கு. மற்றபடி கொங்கு நாடு, தஞ்சை மீல்ஸ் போன்ற உணவுகள் கிடைப்பதில்லை. அந்த உணவுகளை சுவைக்க அந்தந்த இடங்களுக்குதான் பயணிக்க வேண்டும். அந்த உணவினை என் இணையத்தில் பதிவிடும் போது அதை நம் வீட்டிலேயே சுவைக்க பார்வையாளர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தர முடிந்தது.

இதன் முதல் கட்டமாக தமிழகத்தில் குறிப்பிட்ட ஊர்களில் உள்ளவர்களிடம் பேசி அங்குள்ள சிறப்பு உணவுகள் குறித்து தெரிந்து கொண்டேன். தமிழ்நாட்டின் உணவுகள் இட்லி, தோசை மட்டுமில்லை. ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப மசாலாக்கள் முதல் சுவை, தயாரிக்கும் முறை அனைத்தும் மாறுபடும். அப்படிப்பட்ட உணவுகளை நான் சமைத்து பார்த்து பிறகு அதனை என் இணையத்தில் பதிவு செய்ய ஆரம்பித்தேன். நான் பதிவு செய்திருப்பது ஒரு கையளவுதான். சொல்லப்போனால் இது ஒரு பெரிய கடல். அதில் மறைந்திருக்கும் பொக்கிஷங்கள் ஒவ்வொன்றையும் பதிவு செய்வேன்’’ என்றவர் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் பங்கு பெற்றது பற்றி கூறினார்.

‘‘இணையத்தில்தான் இந்த போட்டிக்கான அறிவிப்பு வந்தது. இந்தியா முழுக்க பலர் இதில் பங்கு பெறுவார்கள். என்னுடைய பலம் தமிழ்நாடு உணவுகள் என்பதால், என்னால் முடிந்த வரை அந்த உணவுகளுக்கு பெருமை சேர்க்க விரும்பிதான் விண்ணப்பித்தேன். ஆடிஷனுக்கான அழைப்பு வந்தது. ஏதாவது ஒரு உணவினை சமைத்து கொண்டுவரச் சொன்னார்கள். ‘மதுரை ஆன் ஏ பிளேட்’ என்ற தலைப்பில் ஜிகிர்தண்டா பெனகோட்டா, கொத்துப்பரோட்டா டம்ப்லிங்ஸ் வித் எம்டி சால்னாவினை செய்து கொண்டு போனேன்.

ஆடிஷனுக்கு வந்திருந்த நடுவர்களுக்கு பிடித்திருந்தது. இவை அனைத்தும் மதுரையின் பாரம்பரிய உணவு. அங்கு ஜிகிர்தண்டாவினை நாம் குடித்திருப்போம், அதை பெனகோட்டா வடிவில் ஒரு டெசர்ட்டா நான் கொண்டு போன போது அனைவரும் அதை விரும்பி சுவைத்தார்கள். இரண்டாவது கட்ட தேர்வில் மனசுக்கு பிடிச்ச உணவினை சமைக்க சொன்னாங்க. என் மனசுக்கு ரொம்பவே நெருக்கமான உணவு ரசம் சாதம். சின்ன வயசில் எங்க வீட்டில் வாரத்தில் ஒரு நாள் ரசம் சாதம், வாழைக்காய் வறுவல் செய்வாங்க. அதே ரசம் சாதம் நூடுல்சாகவும், பீட்ரூட் சிப்சாகவும் என் பிளேட்டில் மாறியது. பார்க்க நூடுல்ஸ் போல இருந்தாலும், சாப்பிட்டால் ரசம் சாதம் சுவைதான் இருக்கும். இந்த இரண்டு உணவுகள்தான் என்னை மாஸ்டர் செஃப் செட்டிற்கு அழைத்து சென்றது.

மும்பையில் தங்கி போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். முதல் முறையாக நான் தனியாக வீட்டைவிட்டு வேறு மாநிலத்திற்கு சென்றேன். நான்கு மாசம் நான் அங்கு தனியாக இருக்கணும்.  வீட்டில் இருப்பவர்களை சந்திக்க கூட முடியாது. கல்லூரியில் படிச்சிட்டு இருக்கும் போதே என் அப்பா எனக்கு திருமணம் செய்திட்டார். கல்லூரி படிப்பை என் கணவர் வீட்டில் இருந்துதான் முடிச்சேன். எனக்கு தனிப்பட்ட எக்ஸ்போஷர் கிடைச்சதே இல்லை.

இந்த அனுபவம் எனக்கு பிடிச்சிருந்தது. 35 வயசில் நான் முதல் முறையா தனியா ஃபிளைட்டில் பயணம் செய்தேன். இது நாள் வரை குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன்தான் பயணம் செய்திருக்கேன். என்னுடைய தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்த முதல் முறையா போன போது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்தது. வேறு வேறு மாநிலத்தில் இருந்து போட்டியாளர்கள் வந்திருந்தாங்க. நான் முதலில் அங்கு சென்ற போது அதிக பட்சம் ஒரு வாரம்தான் இருப்பேன்னு நினைச்சேன்.

ஆனால் நான் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வாவேன்னு யோசிச்சு கூட பார்க்கல. குறிப்பா அசைவ உணவுகள் செய்யாமல், சைவம் மட்டுமே செய்து நான் இவ்வளது தூரம் வரை டிராவல் செய்வேன்னு நினைக்கல. மாஸ்டர் செஃப் முதல் நாள், நான் என்ன சமைக்கப் போகிறேன்னு கேட்ட போது, தமிழக உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதில் ரொம்பவே உறுதியா இருந்தேன். இட்லி, தோசை தவிர மற்ற உணவுகளும் இங்குண்டு என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுதும் தெரியப்படுத்த விரும்பினேன்’’ என்றவர் அங்கு அவரின் அனுபவங்கள் பற்றி விவரித்தார்.

‘‘ஒரு முறை சிறுவயதில் சாப்பிட்ட உணவினை சமைக்க சொன்னாங்க. நான் சேமியா பால் குச்சி ஐஸ் செய்தேன். நான் ஸ்கூல் படிக்கும் போது, என் ஸ்கூல் வாசலில் ஒரு தாத்தா இந்த ஐஸ் விற்றுக் கொண்டு இருப்பார். அதை நான் சின்ன டிவிஸ்ட் செய்து கொடுத்தேன். சைவ முறையில் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி செய்தேன். புளி இஞ்சி, மோர் களி இந்த உணவுகள் எனக்கு அந்த நிகழ்ச்சியில் தனிப்பட்ட அடையாளத்தினை ஏற்படுத்தியது. அங்கு வந்திருந்த நடுவர்கள் கூட தமிழகத்தில் இவ்வளவு உணவு உள்ளதானு வியந்தாங்க. காரணம், மோர் களி, இஞ்சி புளி நம்மூர் பிராமணர் வீடுகளில் செய்யக்கூடிய மாலை நேர சிற்றுண்டி.

அதேபோல் எம்டி சால்னா, மதுரை சாலையோர கடைகளில் மிகவும் ஃபேமஸ். என்னதான் நான் வித்தியாசமான உணவுகளை கொடுத்தாலும், சைவ உணவுகளை மட்டுமே சமைப்பது என்பது கஷ்டமாக இருந்தது. மற்றவர்கள் சிக்கன், மீன், மட்டன் என்று சமைக்கும் போது நான் சைவத்தில் கிரியேடிவாக கொடுக்கணும். மேலும் அசைவத்தை விட சைவம் சமைப்பது அவ்வளவு எளிதல்ல. ஒன்றுக்கு இரண்டாக யோசித்து செய்யணும். அப்படி நான் சமைத்த உணவுகள் பெஸ்ட் டிஷ் ஆப் த டே மற்றும் பெஸ்ட் டிஷ் ஆப் த வீக் வென்றுள்ளது. இது என் வாழ்வின் இரண்டாவது இன்னிங்ஸ். இது நாள் வரை கேமரா முன் நிற்க கூச்சமா இருக்கும்.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் எங்களைச் சுற்றி 20 கேமரா இருக்கும். அப்படிப்பட்ட தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நான் இடம் பெற்ற பிறகு எனக்குள் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. என்னுடைய அப்பா, கணவர் இருவருமே தொழிலதிபர்கள். அப்படி இருந்தும் நான் இந்த போட்டியில் பங்கு பெற பணமோ அல்லது தொழிலதிபர்களின் மகள், மனைவி என்றில்லாமல் எனக்கான ஒரு தனிப்பட்ட அடையாளத்தை தேடித்தான் போனேன்.

நான் இன்னாரின் மகள் என்று சொன்னவர்கள், என்னுடைய அப்பா இவர் என்று சொல்கிறார்கள். அதைக் கேட்கும் போது நான் எனக்கான அடையாளத்தை அச்சீவ் செய்திருக்கேன் என்று நினைக்கும் போது பெருமையா இருக்கு. என்ன கொஞ்சம் லேட்டா ஆரம்பிச்சிருக்கேன்’’ என்றவர் கன்டென்ட் கிரியேஷன் மற்றும் ரீல்சுக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி விவரித்தார்.

‘‘பலர் நான் இன்ஸ்டாவில் போடும் வீடியோக்களை பார்த்து அது ரீல்ஸ்னுதான் நினைக்கிறாங்க. இது என்னுடைய வேலை. அதாவது ஒரு உணவு குறித்து பதிவு செய்கிறேன். அதற்கும் ரீல்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. டயலாக் பேசுவதோ, நடனம் ஆடுவதோ கிடையாது. என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் ஒரு உணவு குறித்து சொல்லித் தருகிறேன். இதுதான் கன்டென்ட் கிரியேஷன்.

நான் இன்ஸ்டாவில் கன்டென்ட் போடுவது மட்டுமில்லாமல், வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துக் கொள்கிறேன். என் கணவருடன் இணைந்து பிசினஸ் செய்கிறேன். ஒரு மல்டி டேலன்டாக இருக்கிறேன். என்னைப் பார்த்து என் குழந்தைகள் வளரும் போது, அவர்களும் எதிர்காலத்தினை மிகவும் பொறுப்பாக கடக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அது அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு நல்ல பாலமா அமையும். என்னுடைய இந்தப் பயணத்திற்கு முழு காரணம் என் குடும்பத்தினர்தான்.

மாஸ்டர் செஃப்பில் தேர்வான போது என் கணவர்தான் குழந்தைகளை பார்த்துக் கொண்டார். என் மாமியார் உனக்கு பிடிச்சதை செய்னு சொல்லி ஆசிர்வதித்தார். என் அம்மா எனக்கு சமைக்க கற்றுக் கொடுத்தவர். திருமணம் நிச்சயமானதும், எங்க வீட்டு சமையல் அறையில்தான் ஒவ்வொரு உணவினையும் செய்ய கற்றுக் கொண்டேன். ஆனால் அதுவே என்னுடைய வேலையாக மாறும்னு நான் அப்போது நினைக்கல. பூர்வீகம் ராஜஸ்தான் என்றாலும், நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் உள்ள மதுராந்தகத்தில். தமிழ்நாடு என்னுடைய வேர். அதனால்தான் தமிழ்நாட்டு உணவுகளை எல்லோருக்கும் தெரியும்படி அமைக்க வேண்டும்.

தற்போது தேசிய பிராண்ட்களுடன் ஈடுபட்டு வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஆங்கிலம், தமிழ் மற்றும் ஹிந்தி என மூன்று மொழியும் தெரியும் என்பதால், நான் தென்னிந்திய உணவு மட்டுமில்லாமல் வட இந்திய உணவுகளையும் செய்து வருகிறேன். வெளிநாடுகளில் உள்ள உணவகங்களுக்கு சென்று அங்குள்ள கிச்சனில் நம்முடைய உணவினை சமைத்து தரவேண்டும். காரணம், தமிழக உணவினை மார்டனாக கொடுக்க முடியாது என்ற எண்ணத்தை மாற்றி, சுவை மாறாமல் மார்டனாக அமைக்க முடியும் என்பதை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தணும். அதற்கு முக்கிய காரணம் மிஷுலான் ஸ்டார் பட்டம் பெற்ற செஃப் விகாஸ் கண்ணா அவர்களின் உணவகத்தில் என்னுடைய மோர் களி இடம் பெற்றுள்ளது. அதேபோல் நம்முடைய மற்ற உணவுகளும் உலகளவில் இடம் பெற வேண்டும்’’ என்றார் அருணா விஜய்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா ? (அவ்வப்போது கிளாமர்)
Next post ஆசிரியர்களை கவுரவித்த வெள்ளி விழா மாணவர்கள்!!! (மகளிர் பக்கம்)