மூளையை வளமாக்கும் நான்கு உணவுகள்!! (மருத்துவம்)
‘மூளை நம் உடலில் இயங்கும் ஒரு முக்கிய உறுப்பு. இந்த உறுப்புதான் நம்முடைய உடலில் உள்ள அனைத்து செயல்பாட்டிற்கும் முக்கிய காரணம். இது நரம்பு மண்டலத்தின் மைய உறுப்பு. இதன் மூலம் நம் உடலில் உள்ள புலன்களை வழிநடத்துவது மட்டுமில்லாமல், அதனை செயல்படுத்த தகவல்களைப் பெறுதல் அறிவுரைகளை அனுப்புதல், சிந்திக்க செய்தல் என பல வேலைகளையும் தன்னுடைய நரம்பு மண்டல கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. நாம் சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியமாக மட்டும் இல்லாமல் அவை சமநிலையான உணவாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நம் உடல் மட்டுமில்லாமல் நம்முடைய மூளையும் ஆரோக்கியமாக செயல்பட உதவும்.
மூளையின் ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் வளர்ச்சியின் முக்கியத்துவத்தினை நாம் கருத்தில் கொள்வது அவசியம். அதற்கு நாம் உட்கொள்ளும் உணவு மிகவும் முக்கியம். மூளையின் அறிவாற்றல் வளர்ச்சி பல காரணங்களால் பாதிக்கப்படுகிறது. அதில் மிகவும் அத்தியாவசியமாக கருதப்படுவது ஊட்டச்சத்து. காரணம், ஆரோக்கியமான உணவிற்கும் மூளை வளர்ச்சிக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது’’ என்கிறார் உணவு ஆலோசகர் ரிதிக்கா சமாதார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் தங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, தங்களின் உணவில் நான்கு முக்கிய உணவினை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ரிதிக்கா அறிவுறுத்துகிறார்.
பாதாம்
இந்தியர்களாக நாம் எண்ணற்ற வருடங்களாக பாதாமினை உண்டு வருகிறோம். காரணம், அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள். பாட்டிகள் முதல் அம்மா வரை நாம் குழந்தையாக இருக்கும் காலம் முதல் இன்று வரை அவர்கள் குறிப்பிடும் ஒரே அறிவுரை பாதாமினை உட்கொள்ள வேண்டும் என்பதுதான். அதற்கான முக்கிய காரணம் மூளையின் செயல்திறன் மற்றும் ஞாபக சக்தியினை அதிகரிக்கும்.
தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்பட்ட நம்பிக்கை என்றாலும், மருத்துவ ரீதியாகவும் தொடர்ந்து பாதாமினை சாப்பிட்டு வந்தால் நம்முடைய மூளை மட்டுமில்லாமல் அதன் நரம்பு மண்டலத்தின் செயல்திறனையும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் ஆய்வு மூலம் நிரூபித்துள்ளனர். அதனால் வளரும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும், தினமும் ஒரு கைப்பிடி பாதாமினை உட்கொள்வதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
ெபர்ரி பழங்கள்
பெர்ரி என்று சொன்னால் அதில் ஸ்ட்ராபெர்ரி, பிளாக் பெர்ரி, ப்ளூபெர்ரி என அனைத்து பெர்ரி பழங்களும் அடங்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் விட்டமின் சி சத்து ஒருவரின் அறிவாற்றல் மற்றும் அவர்களின் மோட்டார் திறன்களை மேம்படுத்தும். இதில் உள்ள இயற்ைக தாவர நிறமிகள் தாவரங்களில் உள்ள மெட்டபாலிசம் ஞாபக சக்தியினை அதிகரிக்க உதவுகிறது. ஆக்ஸிஜனேற்ற தற்காப்புகள் இல்லாத காரணத்தால் மூளை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தினால் பாதிப்பு அடைய வாய்ப்புள்ளது. அதனை தடுக்க இந்த பெர்ரிகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. எனவே இந்த சுவையான பருவகால பழங்களை குடும்பத்தில் உள்ள அனைவரின் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
கீரை மற்றும் பச்சை காய்கறிகள்
நம்முடைய சிறு வயதில் இருந்தே ெபற்றோர்கள், உணவில் கீரை மற்றும் பச்சை காய்கறிகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். தினமும் ஒருவர் தன்னுடைய ஒரு வேளை உணவில் ஏதேனும் ஒரு வகை கீரையினை சேர்த்துக் கொண்டால் அவர்கள் எப்போதும் இளமையாக இருக்க உதவும். வயது என்பது ஒரு எண்ணிக்கைதான். என்றாலும், பலருக்கு வயதானாலும் இளமையான தோற்றத்தில் இருக்கவே விரும்புவாங்க. அதற்காக பலவிதமான மேக்கப் சாதனங்களை பயன்படுத்துவார்கள். அதற்கு பதில் தினமும்
ஒரு கீரையினை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கீரை என்றதும் நாம் அன்றாடம் சாப்பிடும் அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை மட்டுமில்லாமல் பசலைக்கீரை, பருப்பு கீரை, ஸ்பினாச், லெட்யூஸ், கேல், கொலார்ட்ஸ் போன்ற வகை கீரைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பச்சைக் காய்கறிகள், குறிப்பாக வயதானவர்களுக்கு மிகவும் நல்லது. இதில் ஃபோலேட், ஃபிலோக்யுனோன், நைட்ரேட், லூடென், டேகோஃபெரால், கேம்ப்ஃபெரால் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் வயதான காலத்தில் உடலில்
ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அசதியினை போக்கி அறிவாற்றலை மேம்படுத்தும்.
மஞ்சள்
மஞ்சள், நம்முடைய சமையல் அறையில் இடம் பெற்று இருக்கும் முக்கியமான மசாலாப் பொருட்களில் ஒன்று. மஞ்சள் இல்லாத உணவு இந்திய சமையல் அறையில் இருந்து வெளியேறாது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மஞ்சளினை தங்களின் உணவில் பிரதானமாக பயன்படுத்துவது வழக்கம். இதில் அதிக அளவு கர்குமின் என்ற வேதியப் பொருள் நிறைந்துள்ளது. இது நம் உடல் ஆற்றலுடன் செயல்பட மிகவும் அத்தியாவசியமானது. மஞ்சள் கிருமி நாசினி என்பதால் நம் உடல் மட்டுமில்லாமல் சருமத்தினையும் பாதுகாக்கும் திறன் கொண்டது.
என்னதான் நாம் நம்முடைய அன்றாட உணவில் மஞ்சளினை சேர்த்து சமைத்தாலும், அவை நம்முடைய உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதில்லை. அதாவது நம்முடைய ரத்தத்தில் அதன் வேதியப் பொருள் அதிக அளவில் உட்கொள்ளப்படுவதில்லை. அதே சமயம் மஞ்சளினை நாம் பாலில் கலந்து சாப்பிடும் போது அவற்றில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு தேவையானதாக கிடைக்கிறது. அதுவே அதனுடன் சிறிது மிளகுத்தூளும் சேர்த்து பருகும் போது கர்குமின் நம் உடலில் சேர்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் கலந்து பால் சாப்பிட்டவர்களுக்கு வைரசின் தாக்குதல் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருப்போம். மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை கட்டாயமாக உணவில் சேர்த்து நம் வாழ்க்கையினை வளமாக வாழ வழி செய்வோம் என்று ஆலோசனை வழங்கினார் உணவு ஆலோசகர் ரிதிக்கா சமாதார்.