மனவெளிப் பயணம்!! (மருத்துவம்)

Read Time:13 Minute, 50 Second

ஆண் நண்பரா? புது அப்பாவா? தாயின் நட்பில் தடுமாறும் குழந்தைகள்!

மையல் தாழ் தானே விலகுகிறது கதவுகள் தானே
திறவுபடுகின்றன.வா என்று யாரும் அழைக்காமலேயே
வந்துவிட்ட ஒருவனின் தோள்களில்

பூமாலைகள் விழுந்து துவள்கின்றன – தீபுஹரி எழுதிய இந்தக் கவிதை எனக்குள் என்றுமே பல கேள்விகளை உருவாக்கியது. இந்தக் கவிதையை படிக்கும் போது எல்லாம் நான் ரொம்ப ரசித்து அடிக்கடி பார்க்கும் படங்களில் EAT PRAY LOVE முக்கியமானதாக இருக்கும். நாயகி திருமண வாழ்வில் பிடிக்காமல், தனக்கான காதலைத் தேடும் ஒரு பெண்ணாக இருப்பாள். இந்தப் படம் எலிசபெத் கில்பெர்ட் எழுதிய நாவலில் இருந்து உருவானது. இவரைப் பேட்டி எடுக்கும் போது அத்தனை விதமான கேள்விகள் பெண்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அந்த அளவுக்கு ஒரு பெண் தனக்கான காதலைத் தேட ஊர்ஊராக, நாடுநாடாக சுற்றுவதைப் பார்க்கும்பொழுது, பெரும்பான்மையான பெண்களுக்கு ஆசையும், அதை அடையக்கூடிய வழிகளையும் தேடிக் கண்டடைய விருப்பமாகிறார்கள்.

படமாகவும், நாவலாகவும் வெற்றி பெற்ற இந்தக் கதை நிஜவாழ்வில் பெண்களின் மனநிலையை என்ன மாதிரி மாற்றுகிறது என்பதைப் பார்ப்போம்.60 வயதில் இருக்கும் அப்பா ஒருத்தர் பேசணும் என்று வந்தார். தன்னுடைய ஒரே மகளுக்கு விவாகரத்து ஆகி, அவளுக்கு முதல் திருமணத்தில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். அதனால் மகளையும், பேரன், பேத்தியையும் தன்னுடன் அழைத்து வந்து விட்டதாக கூறினார். ஆனால் அதுவல்ல பிரச்சனை.

மகள் நன்றாகப் படித்து, நல்ல பதவியிலும் இருக்கிறார். அதனால் பணத்தேவையை அவளாகவே பார்த்துக்கொள்வார். அதனால் நானும் என் மனைவியும் ரொம்ப பெருமையாகத்தான் அதை எடுத்துக் கொண்டோம். சொந்தபந்தம் முழுவதுமே எங்களுடைய மகளைப் பார்த்து, பொறாமைப்படும் அளவுக்குத் தான் இருந்தாள். படிப்பிலும் சரி, பார்க்கும் வேலையிலும் சரி ப்ரோமோஷன் என்று அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டே இருப்பாள். திருமண வாழ்விலும் பிடிக்கவில்லை என்றதும், அவளின் முடிவு சரியென்று ஒத்துக்கொண்டு விவாகரத்துக்கும் சம்மதித்துவிட்டோம்.

அவளுடைய அறிவைப் பார்த்தும், ஆளுமையைப் பார்த்தும் அவளை என்றுமே எல்லோரும் தோழியாக வைத்துக் கொள்வார்கள். அப்படித்தான் விவகாரத்து கேஸ் கோர்ட்டில் நடக்கும்போது, வேலைபார்க்கும் இடத்தில் நண்பராக ஒரு தம்பி பழகினார். அந்த நேரத்தில் இருந்த நெருக்கடியும், கோர்ட்டில் முதல் கணவர் வீட்டில் நடந்த சண்டைகளும், அந்தத் தம்பியுடன் தினம் தினம் அவளுக்கு என்னவெல்லாம் நடக்கிறதோ அதை அத்தனையையும் தொடர்ந்து கூறுவாள். அதனால் அவள் எப்படி நிதானமாக, பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்று விவாகரத்து நடக்கும் நேரத்தில் தொடர்ந்து அவனும் சொல்லிக் கொண்டே வந்தான். அந்த நேரத்தில் அவளுக்குப் பிடித்த அந்த தம்பி என்ன சொன்னாலும் அனைத்தையும் யோசிக்காமல் செய்து விடுவாள்.

அப்பாவாக எனக்கு, சுதந்திரமாக முடிவெடுக்கும் பெண், தன்னுடைய நாளில் நடக்கும் அத்தனையையும் ஒரு குழந்தை போல் அனைத்தையும் அவள் பழகும் நண்பரிடம் சொல்லுவதைப் பார்க்கும் பொழுது வேடிக்கையாக தான் இருந்தது. ஆனால் சில நெருக்கடி காலக்கட்டத்தில் இப்படி பேசுவது இயல்பு என்று விட்டுவிட்டேன். மகள் பேசுவது, பழகுவது எல்லாமே எங்கள் அனைவரின் முன்னிலையிலும் இருப்பதால் நட்புரீதியில் அமைதியாக வேடிக்கைப் பார்த்தோம்.

ஒரு நாள் என்னுடைய பேரன் வந்து, அந்தத் தம்பிதான் எங்களோட புது அப்பா என்று சொன்னதும் தான் உண்மையில் ரொம்ப அதிர்ச்சியானேன். அப்பாவாக என் பார்வையில், முறையாக விவாகரத்து வாங்கிவிட்டு, அதன்பின் மறுமணம் செய்து, அப்பா என்று சொல்லலாம் என்பது சரியாக இருக்கும் என்று இவ்வளவுதான் யோசித்தேன்.

ஆனால் இன்றைய இளைஞர்கள் லிவிங்கில் இருப்பது போல், எல்லார் முன்னிலையிலும் இவரை எனக்குப் பிடித்து இருக்கிறது என்றும், ஆனால் பழகியபின் தான் ஒரு முடிவுக்கு வர முடியும் என்று கூறுவதையும் ஏற்றுக் கொள்கிறேன். எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல், யாருடைய ஒப்புதலும் இல்லாமல், பழகிய ஆணை புதுஅப்பா என்று குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதை என்னால் தாங்கவே முடியவில்லை என்று கூறி அழுதே விட்டார்.

என்னுடைய வயதுக்கும், இன்றைய தலைமுறையினரின் மாற்றத்தை ஒரு மகளின் அப்பாவாக மனவோட்டத்தில் ஒரு குதிரையின் ஓட்டம் போல் வேகமாக ஓட முயற்சி செய்கிறேன். ஆனாலும் இப்படி புதுஅப்பா என்று பழகும் நண்பரை கூறுவதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவை எல்லாம் கடந்து என்னுடைய மனதளவில் ஒரே மகளின் ஆசையை, வாழ்க்கையை மாற்ற மனதுக்கும், சமூகத்துக்கும் ஒத்துவராத விஷயங்களை ஏற்றுக் கொண்டேன். எப்படியோ மகளும், பேரனும், பேத்தியும் நிம்மதியாக இருந்தால் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
இவ்வளவு சம்பவங்களும் எங்க வீட்டில் உள்ள அனைவரின் பார்வையில் படும்படி தான் நடந்ததால், தம்பியின் பார்வையில் இந்த வீட்டில் யாருமே தன்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் வந்துவிட்டது.

மகளும் எங்களின் கருத்துக்களையும், முடிவுகளையும் சுத்தமாக கேட்காமல் இருந்தாள். எங்கள் வீட்டில் என்ன செலவாக இருந்தாலும், மகள் அவரிடமே தெரிவித்து, அதன் பின்தான் அந்தச் செலவு செய்யப்பட்டது. இதனால் எங்க வீட்டில் நாங்கள் சுதந்திரமாக எதுவுமே பேசமுடியாத சூழலுக்குள் வர வேண்டிய நிர்பந்தத்துக்குள் தள்ளப்பட்டோம்.

ஒரு நாள் அழுது கொண்டே மகள் ஓடி வந்து, அவளின் ரூமுக்குள் கதவை அடைத்து எல்லாவற்றையும் உடைக்க ஆரம்பித்தாள். அதன் சத்தம் வெளியே கேட்கவும், நானும், என்னுடைய மனைவியும் போய் கதவை தட்டிக் கொண்டே இருந்தோம். சிறிது நேரம் கழித்து கதவைத் திறந்தவள், அவள் பழகிய பையன் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி முகத்தில் அறைந்துகொண்டே அழுதாள்.

குழந்தைகளை விட்டுட்டு வந்தால் மட்டுமே திருமணத்திற்கு தயாராக முடியும் என்றானாம். குழந்தைகள் அவனிடம் பேசும் விதம் எதுவுமே அவனுக்கு பிடிக்கவில்லையாம். இதையெல்லாம் காரணம் என்று சொல்லி, அவளிடம் கூறி இருக்கிறான். மகளுக்கோ இது எல்லாம் தெரிந்து தானே பேசினான், பழகினான் என்றெல்லாம் கூற, தன்னுடைய நேர்மைக்கு கிடைத்த அவமானமாக அவள் கருதினாள்.

தன்னுடைய மகள், மகன் முன்னாடி புது அப்பா, தற்போது இல்லை என்றும், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லுவது என்றும் தெரியவில்லை என்றே கதறிக் கதறி அழுதாள்.உண்மையில் என்னதான் தன்னுடைய மகளுக்கு பிரச்சனை, சமூகத்தில் கிடைத்த எல்லா வெற்றியும், ஏன் சொந்த வாழ்வில் தலைகீழாக நடக்கிறது என்று கேட்டார்.

இங்கு எத்தனை சுதந்திரமான பெண்ணாக இருந்தாலும், ஏதோ ஒரு விதத்தில் தனக்குப் பிடித்த ஆணுக்கு கீழ்ப்படிதலுள்ள பெண்ணாக நிரூபிக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் சமூகத்தில் ரொம்ப தைரியமாகவும், சிறந்த பெண்ணாகவும் இருப்பார்கள். அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். காதலிக்கும் போது, தன்னை யாராவது கேள்வி கேட்க வேண்டாம் என்ற எண்ணமே பெரும்பாலான குளறுபடிகளுக்கு காரணமாக இருக்கிறது.

நம் தமிழர்களுக்கு நன்றியுணர்வுக்கும், நேர்மைக்கும் என்றுமே கடமைப்பட்டவர்கள் என்று சொல்லி வளர்த்த தலைமுறைகள் தான் நாம். அதனால்தான் நெருக்கடியான காலக்கட்டத்தில் ஏற்படும் புதிய உறவுகள் மீது தீவிரமான ஒரு பற்று இருக்கும். தன்னை மீட்டு எடுத்து வாழ வைத்தவர்கள் என்ற நன்றியுணர்வே, அன்பாகவும், காதலாவும் கருதி எல்லை மீறி நடந்து கொள்வார்கள்.

அதே மாதிரி தான் உங்களுடைய மகளும் நடந்துகொண்டார். எப்பொழுதுமே பெண் தனியாக இருக்கும் போது, ஒரு தவறை செய்தால் எளிதாக மாற்றிவிடலாம். அதுவே குழந்தைகள் முன் தவறு என்பதை விட, அவள் நம்பிய விஷயம் தவறானது என்பது தெரிய வரும் போது, குழந்தைகள் கிட்ட என்ன மாதிரி பதிலை சொல்லப்போகிறோம் என்பது தான் பெரும்பான்மையான பிரச்சனைகளை சரி செய்ய தாமதமாகி விடுகிறது.

அந்தக் குழந்தைகளும் அவர்களுடைய நண்பர்களிடத்தில், அவர்கள் பார்க்கும் எல்லா இடத்திலும் புது அப்பா என்று கூறி இருப்பார்கள். தற்போதைய காலக்கட்டத்தில் இது இயல்பு என்றாலும், பழைய அப்பாவும் பிரிந்து விட்டார், புது அப்பாவும் பிரிந்துவிட்டார் என்ற இடத்தில் தான் குழந்தைகளின் மனதை புரிய முயற்சி செய்ய வேண்டும். இது அடுத்ததாக உறவுகள் மீது நம்பிக்கையற்ற தன்மையை அவர்களுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது.

பெரும்பாலும் மறுமணம் செய்ய விரும்பும் பெண்கள் முதலில் உங்களிடம் கூடப் பழகும் ஆணை, எத்தனை விருப்பமானவராக இருந்தாலும் நண்பனாக மட்டுமே அறிமுகப்படுத்துங்கள். உங்களுடைய உறவின் நேர்மையை இதில் காண்பிக்க வேண்டாம். இதில் நேர்மையை விட, உறவின் மீதான நம்பிக்கை உங்களுக்கு மட்டுமில்லாமல், உங்க வீட்டினருக்கும் தேவைப்படுகிறது. நாம் அழைக்காமலேயே நம்மை புரிந்துவிட்டவர் மீது பூமாலையை போட வேண்டிய அவசியம் என்றுமே இல்லை. அதனால் உங்களுடைய நேர்மையும், நன்றியுணர்வும் என்றுமே உங்களுக்கானது. EAT PRAY LOVE போல் உங்கள் காதலை கொண்டாடுங்கள். அதே நேரம் காதலுக்கான நம்பிக்கையை உணர கால அளவு கொஞ்சம் அதிகமாகும். அதுவரை நிதானமாக இருக்கப் பழகுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அகம் காக்கும் அகத்தி!! (மருத்துவம்)
Next post குறைவான சுய இன்பம் நிறைவான மகிழ்ச்சி : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!! (அவ்வப்போது கிளாமர்)