மூலம்… தீர்வு என்ன? (மருத்துவம்)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேருக்கும் மேல் மூலநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது மருத்துவ ஆய்வுகள். பொதுவாக, 45 முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்குத்தான் அதிகளவில் மூலநோய் காணப்படுகிறது. மூலம் ஏன் ஏற்படுகிறது.. அதற்கான நவீன சிகிச்சை முறைகள் என்ன… தீர்வு என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் வயிறு மற்றும் குடலியல் அறுவைசிகிச்சை நிபுணர் ஆர்.கண்ணன்.
மூலம் என்றால் என்ன.. அதன் வகைகள் யாவை
ஜீரணமண்டலத்தின் கடைசிப்பகுதியான ஆசனவாயில் ஏற்படும் மிக முக்கியமான பிரச்னைதான் மூலம் (பைல்ஸ்) ஆகும். மூலம் என்பது ஆசன வாயில் உள்ள ரத்தநாளங்களின் வீக்கம் ஆகும். இதனை உள்மூலம், வெளிமூலம் என வகைப்படுத்தலாம்.
மூலம் எதனால் ஏற்படுகிறது?
ஆசனவாயில் உள்ள ரத்த நாளத்தில் அழுத்தம் ஏற்படுவதால் மூலம் ஏற்படுகிறது. இதற்கு அடிப்படைக் காரணம், பல நாட்களாக சரிவர கவனிக்காமல்விடப்பட்ட மலச்சிக்கல்தான். மேலும், பரம்பரை பரம்பரையாக ஆசனவாய்ப்பகுதியில் உள்ள ரத்தக்குழாயின் துணை மற்றும் இணைப்புத் திசுக்கள் பலவீனமாக இருந்தாலும் சிலருக்கு மூலம் வரலாம். அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தாலோ அல்லது தொடர்ந்து குறைந்த அழுத்தப் பகுதியில்,(விமானத்தில்) பணிபுரிபவர்களுக்கு மூலம் வரலாம். நாள்பட்ட வயிற்றுப்போக்கு, மற்றும் உடல் பருமனால் மூலம் வரலாம். மலக்குடல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோயினாலும் ஆசனவாயின் ரத்தநாளங்களில் அழுத்தம் உண்டாகி மூலம் வரலாம். பெண்களுக்கு கர்ப்பக் காலங்களில் வயிற்றின் கீழ்ப்பகுதியில் அழுத்தம் அதிகமாவதாலும், மலச்சிக்கல் மற்றும் progestrone ஹார்மோன் காரணமாகவும் மூலம் வரலாம்.
நாம் பெரும்பாலும் நின்றுகொண்டே இருப்பதால், ஆசனவாயை நோக்கி உடல் உறுப்புகள் நேரடியாக அழுத்துவதால், ஆசனவாய் ரத்தநாளங்களில் அழுத்தம் அதிகமாகி மூலம் உண்டாகலாம். இதனை This is the penalty paying by the human race for the upright posture என்று கூறலாம். பிராணிகளுக்கு மூலநோய் வருவதில்லை.
மூலத்தை எத்தனை நிலைகளாகப் பிரிக்கலாம்?
மூலத்தை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை;
*முதல்நிலையில் ரத்தப்போக்கு இருக்கும். சதை வெளித்தள்ளாது. வலி இருக்காது.
*இரண்டாம் நிலையில் மூலம் வெளியே வந்து தானாகவே உள்ளே சென்றுவிடும்.
*மூன்றாம் நிலையில் வெளியே வரும் மூலத்தை கையால் உள்ளே தள்ளமுடியும்.
*நான்காம் நிலையில் மூலம் ஆசனவாய்க்கு கீழே தள்ளிய நிலையிலேயே இருக்கும்.
மூலத்தின் அறிகுறிகள்
மலம் கழிக்கும்போது ஆசனவாயில் வலியற்ற ரத்தப்போக்கு ஏற்படுதல், அரிப்பு, எரிச்சல் மற்றும் வீக்கம். ரத்தம் உறைந்து போய் கட்டியாகிவிட்டால் அதனால் வலி வரும்.
மூலநோயை எவ்வாறு அறிந்துகொள்வது?
மேற்கூறிய அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை பெற்று, தேவையான பரிசோதனைகள் மேற்கொண்டு, ( Blood test, procloscopy, sigmoidoscopy and colonoscopy) சரியான சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம்.
சிகிச்சை முறைகள் என்னென்ன?
முதல்நிலை மூலம் : மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டும். அதிக நார்சத்து உள்ள உணவை(காய்கறிகள், பழங்கள் மற்றும் கோதுமை) அதிகமாகவும் மாவுச்சத்து உள்ள உணவை குறைவாகவும். மேலும் அதிகளவு தண்ணீர் உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம். Laxatives எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கலை தடுக்கலாம். வீங்கி முடிச்சு போல் உள்ள ரத்தக் குழாய்களை Sclerotherapy அல்லது Laser மூலம் சுருங்கச் செய்யலாம்.
இரண்டாம்நிலை: மலச்சிக்கலை தவிர்த்து, மலமிளக்கிகளை (Laxatives) எடுத்துக்கொள்வதன் மூலமும் சரிசெய்யலாம். மேலும், வீங்கிய நிலையில் உள்ள ரத்த நாளங்களை 5 Laser, infrared coagulation, sclerotherapy, rubber band ligation technique மூலமாகவும் சுருங்கச்செய்யலாம். மூன்றாம் மற்றும் நான்காம் நிலை மூலம். இதனை மருந்தால் குணப்படுத்த முடியாது. அறுவைசிகிச்சை மூலமாகவும் லேசர் மூலமாகவும் மற்றும் அதிநவீன stapler சிகிச்சை மூலமாகவும் குணப்படுத்தலாம்.
லேசர் சிகிச்சை என்றால் என்ன.. அதன்சிறப்பு என்ன…
லேசர் மூலமாக எல்லா நிலை மூலத்தையும் குணப்படுத்தமுடியும். ஆரம்பநிலை மூலத்திற்கு ( முதல் மற்றும் இரண்டாம்நிலை) லேசர் கதிரை மூலத்தின் மேல் செலுத்தி, உள்ளிருக்கும் ரத்தத்தை உறையச்செய்வதே சிறந்த சிகிச்சை முறையாகும். முற்றியநிலை மூலத்தை (மூன்றாம் மற்றும் நான்காம் நிலை) லேசர் சிகிச்சை மூலம் சிகிச்சை செய்வதால், ரத்தஇழப்பு இருக்காது. வலியோ மிக மிகக் குறைவு. மருத்துவமனையில் ஒருநாள் மட்டும் இருந்தால் போதுமானது. விரைவில் பழைய நிலைக்கு திரும்பி நாம் அன்றாட வேலைகளை கவனிக்கலாம்.
பொதுவாக லேசர் சிகிச்சைக்குப் பிறகு கடைப்பிடிக்க வேண்டியவை எவை?
கடினமான வேலைகள் செய்வதை சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டாப்ளர் சிகிச்சை என்றால் என்ன? அதன்சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
மற்ற அறுவைசிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் ஸ்டாப்ளர் போன்று அல்லாமல், மூலத்திற்காகவே, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன கருவிதான் PPH03 எனப்படும் Haemorrhoids stapler ஆகும். இந்தக் கருவி மூலமாக ஆசனவாயில் உள்பகுதியில் Dentate Lineக்கு மேல் மூலத்துடன் கூடிய சதையை எடுத்தபிறகு அந்த இடத்தை ஸ்டாப்ளர் பின்னால் இணைப்பதுதான் இதன் சிறப்பு அம்சமாகும். இந்த சிகிச்சையின்போது ஆசனவாய்க்கு மேலுள்ள தசைகளை அதிகம் வெட்டாமல் வேண்டிய அளவு மட்டுமே வெட்டுவதால், மலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் சக்தி ஆசனவாய்க்கு அப்படியே இருக்கும்.
இந்த முறையில் சிகிச்சை மேற்கொண்டால் ரத்த இழப்பு இருக்காது. வலியோ மிகமிகக் குறைவு. ஒருநாள் மட்டுமே மருத்துவமனையில் இருந்தால் போதும். உடனடியாக பழைய நிலைக்குத் திரும்பி அன்றாட வேலைகளைச் செய்யலாம்.சிகிச்சைக்கு பிறகு டிரஸ்ஸிங், Sitz bath மற்றும் நீண்ட நாட்களுக்கு மருந்து மாத்திரைகள் தேவையில்லை. எனவே இதனை மூலநோய்க்கான மிக நவீன சிகிச்சை முறை என்றே சொல்லலாம்.‘நோய்நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச்செயல்’ என்ற குறளுக்கேற்ப. மலச்சிக்கலைத் தவிர்ப்போம். மூலத்தைத் தடுப்போம்.