அவள் நானில்லை… வைரலான சிம்ரன் வீடியோ!! (மகளிர் பக்கம்)
கடந்த இரு வாரங்களுக்கு முன் ஜெயிலர் படத்தில் வெளியான “காவாலா” பாட்டுக்கு நடிகை சிம்ரன் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி சற்று நேரத்திற்குள் மில்லியனைத் தாண்டி வைரலானது. வீடியோவை பார்க்கும் நமக்கோ நடிகை சிம்ரன்தான் காவாலா பாடலுக்கு ஆடி ரீல்ஸ் வெளியிட்டு இருக்கிறார் எனத் தோன்றும். சத்தியமா இது நான் கிடையாதுங்கோ எனக் கற்பூரத்தை அடித்து அவர் சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப முடியாத அளவுக்கு எஃபெக்டை தந்தது அந்த வீடியோ. வீடியோவைப் பார்த்த நடிகை தமன்னா ‘ரொம்பவே பிரில்லியன்டாக இருக்கு, நானும் சிம்ரன் ஃபேன்தான்’ என ட்விட் செய்திருந்தார்.
ஜெயிலர் படத்தின் “காவாலா” பாட்டிற்காக நடிகை தமன்னா டான்ஸ் ஸ்டுடியோவில் பிராக்டீஸ் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோதான் மேலே குறிப்பிட்டிருப்பது. வீடியோவை தமன்னா சோஷியல் மீடியாவில் பதிவேற்ற, அடுத்த நொடியே பற்றிக்கொண்டது AI ஃபயர்.என்னடா இவ்வளவு ரியலா இருக்கு. எப்படிடா இதை செய்யுறீங்க என ஆச்சரியப்படுகிறீர்களா? உங்களைச் சுற்றி AI உலகம் என்ற ஒன்று சுழன்று கொண்டிருக்கிறது. செந்தில் நாயகம் என்பவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI பயன்படுத்தி சிம்ரன் புகைப்படத்தை வைத்து இந்த வீடியோவை உருவாக்கி அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்ற… அடுத்த நொடியே சிம்ரன்தான் டான்ஸ் ஆடி ரீல்ஸ் வெளியிட்டிருக்கிறார் என சோஷியல் மீடியாக்களில் அந்த வீடியோ பற்றிக்கொண்டது.
ஆம்! ஸ்டுடியோவிலே வைத்து நேரடியாக ஷூட் செய்தால் எப்படி இருக்குமோ அப்படியாக லைட்டிங், ஃபேஸ் மூவ்மென்ட்ஸ் என மாற்றியிருந்தார் AI தொழில்நுட்ப பிரியரான செந்தில் நாயகம். வீடியோவை பார்த்த நடிகை சிம்ரன், செந்தில் நாயகத்தைப் பாராட்டி ஒரு வாய்ஸ் நோட்ஸ் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார். சிம்ரனின் இந்த வீடியோ மெஷின் லெர்னிங்(Machine learning) மூலமாக டீப் பேக் டெக்னாலஜி பயன்படுத்தி உருவானது என்கின்றனர் டெக்கிகள் சிலர். அதாவது, GAN மற்றும் VAE என்கிற இரண்டு டெக்னாலஜிகள் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதாம்.
சமீபத்தில் நடிகர் கமலஹாசன் காட்ஃபாதர் கெட்டப்பில் இருப்பதுபோல் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மிட்ஜர்னி(Midjourney) AI மூலமாக கமலின் புகைப்படங்களில் சிலவற்றை வைத்து உருவாக்கப்பட்டதே கமலின் காட்ஃபாதர் கெட்டப் புகைப்படங்கள். இன்னும் பல டூல்கள் AI தொழில்நுட்பத்தில் இருக்கின்றன. இந்தத் தொழில்நுட்பங்கள் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தாலும், ஆபத்துகள் நிறையவே சூழ்ந்திருக்கிற டெக்னாலஜி எனவும் அலர்ட் செய்கிறார்கள் டெக்கிகள் நம்மை.
முகநூலிலோ அல்லது வாட்ஸ்ஆப்பிலோ நாம் வைக்கும் ஒரு புகைப்படத்தை வைத்தே இந்த மாதிரியான வீடியோக்களை நொடியில் உருவாக்கிவிட முடியும். இதற்கென AI தொழில்நுட்பத்தில் டூல்ஸ்கள் நிறைய இருக்கிறது. நினைவு வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை ஸ்க்ரால் செய்யும்போது பார்க்கும் ரீல்ஸ்களில் AI தொழில்நுட்பத்தின் அல்காரிதம் வேலைசெய்து கொண்டிருக்கிறது என்பதை.
என்ன மேலே உள்ளவற்றைப் படிக்கும்போது சமீபத்தில் வெளியான “லவ் டுடே” படம் உங்கள் நினைவுக்கு வரலாம். ஆம். அந்த படத்தில் வரும் காட்சிகளைப்போல, வேறொரு நபர் பேசியதில் உங்கள் முகத்தை பொருத்தி அதை நீங்கள் பேசியதாக வீடியோக்களை உருவாக்குவது மட்டுமல்ல, பான் மூவியில் (Pon movie) நடித்தமாதிரியோ அல்லது வன்முறையினைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்ட காட்சிகளைக்கூட வித் இன் செகண்டில் உங்கள் முகத்தைப் பொருத்தி உருவாக்கிவிட AI தொழில்நுட்பத்தால் முடியும்.
முள்ளை முள்ளாள் எடுக்க வேண்டும் என்பதைப்போல நாம் காணும் வீடியோ உண்மையா? சித்தரிக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய AI தொழில்நுட்பத்திலேயே DEEPWARE AI, DUCK DUCK GOOSE, SENSITV AI போன்ற சாஃப்ட்வேர்களும் உள்ளன. இவை AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் தவறாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள், ஃபேக் வீடியோக்களை டிடெக்ட் செய்து நம்மை உடனே அலர்ட் செய்யும்.
AI தொழில்நுட்பம் வரமா அல்லது சாபமா எனக் கேட்டால்..? சிம்ரன் நம் எல்லோருக்கும் பிடித்த சிறந்த டான்ஸர். திறமையான நடிகையும்கூட. சிம்ரனுடையது டான்ஸ் வீடியோ என்பதால் பரவாயில்லை. இதுவே வேறுமாதிரியான பிம்பத்தை தோற்றுவிக்கும் காணொளியாக இருந்திருந்தால்?
பொதுதளத்திற்குள் நாம் நுழைந்துபதிவேற்றும் புகைப்படங்களும், வீடியோக்களும் அடுத்த நொடியே நம்முடையது கிடையாது. அதை யார் வேண்டுமானாலும், எதற்காகவும் பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்கிற நிலைதான் இன்று. அதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளுமே இணைய வெளிகளில் கொட்டிக்கிடக்கின்றன. இதைத் தடுப்பதற்கான சட்டங்கள் நம் நாட்டில் இன்னும் முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை என்பதே இதில் கசப்பான உண்மை.நம்மையும் நமது உறவுகளையும் நண்பர்களையும் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு. AI தொழில்நுட்பத்துடன் வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழலில் முடிந்த அளவு நம்மை இதிலிருந்து தற்காத்துக் கொண்டு வாழ முயற்சிப்போம்.