எண்டோமெட்ரியல் பயாப்ஸி ஏன்… எப்படி… யாருக்கு? (மருத்துவம்)
எண்டோமெட்ரியம் என்பது கருப்பையின் புறணி. இதனை கருப்பையகம் என்பார்கள். பெண் உள் இனப்பெருக்க உறுப்பு. ஒருவரின் மாதந்தோறும் அளவு மாறுபடும் உடல் கட்டமைப்பிற்குள் உள்ள சில உறுப்புகளில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும், சுழற்சியின் ஒரு பகுதியாக, உடல் கருவைப் பொருத்துவதற்கு சளி சவ்வைத் தயாரிக்கிறது. எண்டோமெட்ரியம் தடிமன் அதிகரிக்கும் மற்றும் பின்னர் குறையவும் செய்யும்.
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டோஜென் என்ற இரண்டு ஹார்மோன்கள் எண்டோமெட்ரியம் வளர்ச்சி மற்றும் சுழற்சிகளுக்கு உதவுகின்றன. கர்ப்பம் போன்ற உடலியல் நிலை உருவாகாவிட்டால் அது மாதவிடாய் ஓட்டம் மூலம் மாதந்தோறும் வெளியேறும். மாதவிடாய் சுழற்சியில் பிரச்னைகள் இல்லாத பெண்களைப் பார்ப்பது அரிது. குறிப்பாக 35 வயதுக்குப் பிறகு அதுவரை சந்தித்திராத பல பிரச்னைகளையும் எதிர்கொள்கிறவர்கள் அதிகம். ஆரம்பகட்ட சிகிச்சைகளில் குணமடையாதவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது `எண்டோமெட்ரியல் பயாப்ஸி.’ (Endometrial Biopsy) அந்தப் பரிசோதனையின் தேவை என்ன… யாருக்குச் செய்யப்படுகிறது… எப்படிச் செய்யப்படுகிறது என்று பார்ப்போம்.
முட்டையும் விந்தும் சேர்ந்தால் கரு. இந்தக் கரு ஒட்டி வளர்வது கர்ப்பப்பையில். அப்படி அந்தக் கரு வந்து ஒட்டுவதற்காக, கர்ப்பப்பையில் மெத்தை போன்ற அமைப்பு உருவாகும். அதற்கு, ‘எண்டோமெட்ரியல் லைனிங் லேயர்’ என்று பெயர். இந்த லேயர் வளர்வதற்கு, சினைப்பை முட்டைகளிலிருந்து வரும் ஈஸ்ட்ரோஜென் துணைபுரியும். இந்த எண்டோமெட்ரியல் லைனிங், கரு ஆக்கத்துக்கு ஆரம்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரான் ஆகிய இரண்டு ஹார்மோன்களும் கர்ப்பப்பையின் உட்சுவரில் இதை வளரவைக்கின்றன. அதனால், இந்த லைனிங், ஹார்மோன்களின் சீர் இயக்கத்தின் வெளிப்பாடும்கூட என்று சொல்லலாம்.
பெண்கள் சிலருக்கு இந்த லேயர் அளவுக்கு அதிகமாக தடிமனாகும்போது, அது புற்றுநோய்க்கான ஆரம்பமாக இருக்கலாம். நாளடைவில் அது கர்ப்பப்பைப் புற்றுநோயாக வளரலாம். எனவே, எண்டோமெட்ரியல் திசுவை பரிசோதனை செய்து, அது நார்மலாக இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும், ஒருவேளை அது மிகவும் தடிமனாக இருந்தால், அது புற்றுநோய்க்கான அறிகுறியா என்று கண்டறியவும்.
பரிசோதனை
சீரற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு, குறைந்த ரத்தப்போக்கு போன்ற பிரச்னையுள்ள பெண்களுக்கு ஸ்கேன் செய்யப் பரிந்துரைப்போம். அதில் லைனிங் திக்காக இருப்பது தெரியவந்தால், மேற்கொண்டு பயாப்ஸி எடுப்போம். இதற்கு மயக்க மருந்து கொடுக்கவேண்டிய அவசியமில்லை. `Pipelle Catheter’ என்ற மருத்துவச் சாதனம் மூலமாக எண்டோமெட்ரியம் திசுவை எடுத்து, அதை டெஸ்ட்டுக்கு அனுப்பிவைப்போம். இந்தப் பரிசோதனைக்காக பெண்கள் மருத்துவமனையில் தங்கவேண்டியதில்லை. வழக்கமான கன்சல்டேஷன்போலவே வந்து செல்லலாம்.
பரிசோதனை முடிவுகள்
எண்டோமெட்ரியல் பயாப்ஸி பரிசோதனை மூலம், மூன்று விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். ஒன்று, மாதவிடாயின் சுழற்சியில் இது எத்தனையாவது நாள் என்று அறிந்துகொள்ளலாம். இரண்டு, கர்ப்பப்பையில் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறி இருக்கிறதா என்பதை அறியலாம். மூன்று, எண்டோமெட்ரியல் லைனிங் லேயர் மெலிதாக இருக்கிறதா, தடிமனாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம். லேயர் சரியாக வளராமல் மெலிதாக இருந்தால், ரத்தப்போக்கு குறைவாக இருக்கும். அதுவே, வளர்ச்சி தடிமனாக இருந்தால், ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். இந்த எண்டோமெட்ரியல் லைனிங்கின் தடிமன்தான் மாதவிடாயின் ரத்தப்போக்கின் அளவைத் தீர்மானிக்கிறது.
சிகிச்சை
பயாப்ஸியின் ரிசல்ட்டில், லைனிங்கின் வளர்ச்சியும் ஹார்மோன்களின் அளவும் வித்தியாசப்படும் பெண்களுக்கு அவற்றுக்குரிய சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். சம்பந்தப்பட்ட பெண்களுக்கு முட்டை சரியாக வளராதது, சரியாக வெளியேறாதது போன்ற பிரச்னைகளுக்கான சிகிச்சைகள் தேவைப்படலாம். அடுத்ததாக, புற்றுநோயோ, அதன் ஆரம்பநிலையோ கண்டறியப்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக சிகிச்சை தொடங்கப்படும்.
யாருக்குத் தேவை?
*குறைந்த வயதுப் பெண்களுக்கு எண்டோமெட்ரியல் பரிசோதனை தேவைப்படாது. 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே தேவைப்படும்.
*சினைப்பையில் நீர்க்கட்டிகள் (பிசிஓடி) உள்ள பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு போன்றவை இருக்கும். இவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் இருக்கும் என்பதால், லைனிங் லேயரில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கலாம். அவர்களுக்கு இந்தப் பரிசோதனை அவசியம்.
*சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், பிசிஓடி போன்ற பிரச்னைகளுள்ள பெண்கள் வருடத்துக்கு ஒருமுறை எண்டோமெட்ரியல் பயாப்ஸி பரிசோதனை செய்துகொள்வது நலம்.