பெண் தொழில்முனைவோர்களை மேம்படுத்தும் FLO!!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 19 Second

பெண்கள் வேலைக்கு மட்டுமில்லை வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கவும் செய்றாங்க. குறிப்பாக கொரோனா காலத்திற்கு பிறகு பலருக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போனது. அதை ஈடுகட்ட தங்களுக்கு ஒரு சம்பாத்தியம் வேண்டும் என்பதற்காகவே சிறிய அளவில் ஒரு தொழிலை துவங்கி அதனை மிகவும் திறமையாக செய்து வருகிறார்கள். என்னதான் நம்முடைய தொழில் லாபத்தில் இருந்தாலும், அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வதுதான் புத்திசாலித்தனம்.

அதற்கு சரியான ஆலோசனை மட்டுமில்லாமல், கடனுதவி மற்றும் அதை சமாளிக்கவும் தெரிந்து கொள்வதுதான் ஒரு தொழிலில் மிகவும் முக்கியமான அம்சம். அதற்கான வழியினை குறிப்பாக பெண் தொழில்முனைவோருக்கு வழிகாட்டி வருகிறது ஃப்ளோ (FLO – FICCI Ladies Organisation) என்ற அமைப்பு. 30 வருடங் களாக செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் சென்னை கிளையின் தலைவரான ராஜி ராஜு இதன் செயல்பாடு மற்றும் இதன் மூலம் பெண் தொழில்முனைவோர்கள் எவ்வாறு பலன் பெறலாம் என்பதை விவரிக்கிறார்.

‘‘நான் அடிப்படையில் ஒரு ெதாழிலை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கி வருகிறேன். என் கணவர் ராஜு வெங்கட்ராமன் ஒரு தொழிலதிபர். நாங்க வெளிநாட்டில்தான் இருந்தோம். தற்போது ஃப்ளோ அமைப்பின் தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு சென்னையில் செட்டிலாயிட்டோம். காரணம், இந்த அமைப்பு மூலம் பலதரப்பட்ட பெண்களுக்கு ஒரு தலைவராக என்னால் முடிந்த உதவியினை செய்ய விரும்பினேன்.

குறிப்பாக தொழில் முனைவோர்களாக வலம் வரும் பெண்கள். இந்த அமைப்பு 1993ம் ஆண்டு இந்திரா தத் என்பவரால் துவங்கப்பட்டது. புது தொழில் செய்பவர்கள், வீட்டில் இருந்தபடியே தொழில் செய்பவர்கள். அதிலும் குறிப்பாக பெண்களுக்காகவே இந்த அமைப்பு அமைக்கப்பட்டது. ஃப்ளோ அமைப்பு ேதசிய அளவில் இயங்கக் கூடியது. அதாவது இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் (Federation Of Indian Chambers Of Commerce and Industry) கீழ் பெண்களுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

இதன் முக்கிய நோக்கமே பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது. தில்லியில் தலைமை இடமாக இருந்தாலும், 19 மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. அதில் சென்னையும் ஒன்று. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள அமைப்பின் கிளையில் பெண் தொழில் முனைவோருக்கு தங்கள் துறையில் மேலும் உயர என்ன செய்யலாம், அவர்களின் தொழில் விருத்தி அடைய நிதி உதவி, பள்ளிப் படிப்பினை பாதியில் விட்டவர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சி மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு என அனைத்துக்காக உதவியினையும் செய்து தருகிறோம்.

FICCIயில் உறுப்பினர்களாக இருக்கும் ஆண் தொழிலதிபர்களுக்கு மட்டுமே கவனம் செலுத்தி வந்தது. ஆனால் பெண்களுக்கு என தனிப்பட்ட கவனம் அளிக்கவில்லை. அந்த சமயத்தில் FICCIயின் ஆண் உறுப்பினர்களின் மனைவிகள் பெண்களுக்கு என தனிப்பட்ட அமைப்பினை அமைக்க விரும்பினர். பெண் தொழில் முனைவோர்களுக்கும் ஒரு வழிகாட்டுதல் வேண்டும் என்று நினைத்தனர். அதன் அடிப்படையில் சென்னையில் முதன் முதலில் இந்திரா தத் ஃப்ளோவினை துவங்கினார்.

அதன் பிறகு அது மற்ற மாநிலத்திற்கும் தங்களின் கிளையினை பரவ துவங்கியது. பெண்களின் தொழில் மேம்பாடு குறித்து என்னெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் நாங்க செய்ய துவங்கினோம். ஸ்டார்டப் நிறுவனம் துவங்கும் பெண்களுக்கு மென்டார் ஷிப், அரசு சலுகைகள் குறித்த விவரங்கள், அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள், எப்படி தொழிலினை செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்படும். ஆரம்பத்தில் உறுப்பினர்களின் மனைவிக்காக மட்டுமே செயல்பட்டு வந்த இந்த அமைப்பு நாளடைவில் மற்ற பெண்களுக்கும் அமைப்பின் உதவி கரம் நீண்டது’’ என்றவர் அதன் செயல்பாட்டினைப் பற்றி விவரித்தார்.

‘‘இந்த அமைப்பில் பல கிளைகள் இருக்கு. ஒவ்வொரு கிளைகளிலும் தனிப்பட்ட வேலையினை எடுத்து செய்வது வழக்கம். அதில் ஒரு கிளை ஸ்டார்டப். இது மிகவும் முக்கியமான ஒன்று. ஸ்டார்டப் நிறுவனங்களை நடத்தி வரும் பெண்களை சந்தித்து அவர்களை ஊக்குவிப்போம். அவர்களின் தேவைகளை அறிந்து அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி தருவோம். அடுத்து நிதி. இந்த கிளையில் தங்களின் பிசினசை வளர்க்க வங்கி கடன் பெறுவது, லாபத்தினை திறமையாக முதலீடு செய்வது, தங்கள் நிறுவனத்தின் நிதி நிலையை மேம்படுத்தும் முறைகள் குறித்த ஆலோசனை மற்றும் வர்க் ஷாப் நடத்துவோம்.

டிஜிட்டல் கிளையில் சமூகவலைத்தளத்தினை கையாள்வது குறித்த விவரங்கள் அளிக்கப்படும். இப்போது பெரும்பாலான பிசினஸ் வாட்ஸப், இன்ஸ்டா அல்லது முகநூல் பக்கத்தில்தான் நடைபெறுகிறது. அதில் எவ்வாறு தங்களின் பிசினஸ் குறித்து மக்களிடம் மார்க்ெகட்டிங் செய்வது பற்றி விளக்கம் அளிக்கிறோம். இதைத் தவிர டாலி, (Tally) ஜி.எஸ்.டி (GST) என ஒரு தொழில் செய்ய தேவையான அனைத்தும் குறித்து ஆலோசனைகளை அளித்து வருகிறோம்.

இவர்களைப் போல் தானும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பல பெண்களுக்கு விருப்பம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு என்ன செய்வது? எப்படி துவங்குவதுன்னு தெரியாது. குறிப்பாக கிராமத்தில் இருக்கும் பெண்கள். இதில் பெரும்பாலானவர்கள் குடும்ப சூழல் காரணமாக தங்களின் பள்ளிப் படிப்பினைக் கூட தொடர முடியாமல் பாதியிலேயே நிறுத்தி இருப்பார்கள். அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தையல் கலை, ஐஸ்கிரீம் மேக்கிங், பேக்கரி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடு போன்ற பயிற்சி அளித்து அதைக் கொண்டு எவ்வாறு தொழில் செய்யலாம் என்று ஆலோசனை வழங்கி வருகிறோம். அடுத்து கேம்பஸ் டூ கார்ப்பரேட்.

கல்லூரியில் படிச்சிருந்தாலும், வேலைக்கான நேர்காணல் என்று வரும் போது அவர்கள் கொஞ்சம் திணறுவார்கள். சிலருக்கு தங்களின் பயோடேட்டாவை எவ்வாறு வழங்க வேண்டும் என்று தெரியாது. இது போன்ற மாணவர்களுக்கு ஒரு நேர்காணலை எதிர்கொள்ளும் முறை குறித்த வர்க்‌ஷாப் நடத்துவதால், தன்னம்பிக்கை ஏற்படும். தங்களால் எதையும் எதிர்கொள்ள முடியும் என்ற தைரியம் வரும்.

எந்த ஒரு தொழில் செய்பவராக இருந்தாலும் அவர்களுக்கு என வழிகாட்டி இருப்பார்கள். அது அவர்களின் அப்பாவாக இருக்கலாம், அல்லது நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கலாம். அதேபோல் அவர்களுக்கான வழிகாட்டிகளை நாங்க ஏற்பாடு செய்கிறோம். அந்த வழிகாட்டிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். அவர்கள் அந்த பயிற்சியில் நேர்த்தி பெற்றுள்ளார்கள் என்பதற்கு சான்றிதழ்களும் கொடுக்கப்படும். அதன் பிறகு அவர்கள் தொழில் முனைவோர்களின் ெதாழில் மேம்பட வழிகாட்டியாக செயல்படலாம்.

குறிப்பிட்ட காலம் வரைதான் இவர்களின் ஆலோசனைகளை பெறலாம் என்றில்லை. எப்போது எல்லாம் அவர்களின் நிலையில் தடுமாற்றம் ஏற்படுகிறதோ அப்போது எல்லாம் அவர்களின் குழப்பத்திற்கு வழிகாட்டுவார்கள். நான் கடந்த மூன்று வருடமாக ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனை அளித்து வருகிறேன். காரணம், ஆரம்பத்தில் நானும் ஒரு உறுப்பினராகத்தான் இந்த அமைப்புடன் என்னை இணைத்துக் கொண்டேன்.

இப்போது இந்த அமைப்பின் தலைவராக உயர்ந்துள்ளேன். நான் மட்டுமில்லாமல் எனக்கு முன் இருந்த தலைவர்கள் இந்த முப்பது வருடத்தில் பல லட்சம் தொழில் முனைவோர்களை உயர்த்தி இருக்கிறார்கள். அது குறித்து இந்த 30 வருட கொண்டாட்டத்தில் ‘பிரைட் ஆஃப் ஃப்ளோ’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டு அதில் எங்களின் 30 வருட சாதனையினை தொகுத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் மேலும் பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும். அவர்களை பெரிய இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்’’ என்றார் ராஜி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செங்கோட்டையில் மிளிரும் இந்திய வரலாறு!! (மகளிர் பக்கம்)
Next post மண்ணீரல் காப்போம்!! (மருத்துவம்)