ஒரு தெய்வம் தந்த பூவே! (மருத்துவம்)
முதல் ஆறு மாதங்கள்
நீங்கள் உங்கள் குழந்தையை முதன் முதலில் கையில் ஏந்திய அந்தத் தருணத்திலிருந்து உங்கள் குழந்தையின் மன ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும். ஆரம்பத்திலிருந்தே, உங்கள் குழந்தை அன்பு, கற்றல் மற்றும் பாதுகாப்பிற்காக உங்களைத் தேடும். நீங்கள் உங்கள் பிள்ளைக்கு ஒரு அன்பான மற்றும் மென்மையான உறவை வழங்கினால், அவர்கள் பாதுகாப்பாக உணருவார்கள். குழந்தை அழும்போது அவர்களுக்கு ஆறுதல் அளித்து, பாதுகாப்புடனும், நம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்ள உதவுங்கள், அதுவே வாழ்நாள் முழுவதும் மன ஆரோக்கியத்திற்கான அடித்தளத்தை இடுகிறது.
முதல் ஆறு மாதங்களைப் பொறுத்தவரையில், மன ஆரோக்கியம் மிக அவசியம். பெரும்பாலும் பெரிய குழந்தைகள் அளவிற்கு நடத்தைகளில் பெரிய மாற்றம்
இல்லாவிட்டாலும், அவர்களுடைய உணர்வு மற்றும் சமூக தொடர்பைப் பொறுத்து வளர்ச்சி அமைகிறது. குழந்தையின் எதிர்கால மன ஆரோக்கியத்திற்கு முதல் ஆறு மாதகால உணர்வு பிணைப்புகள் வாழ்நாள் முழுவதுமான சமூகத் தொடர்புக்கு அடிப்படையாக கருதப்படுகிறது.
உணர்ச்சிப்பிணைப்பு (Emotional bonding)
முதல் அம்சமாக குழந்தையிடம் உணர்ச்சிப்பிணைப்பை ஏற்படுத்த வேண்டும். அப்பா, அம்மா, பாட்டி அல்லது குழந்தை பராமரிப்பாளர் என குழந்தை யாரிடம் அதிக நேரம் இருக்கிறதோ, யார் அதை அதிகம் பார்த்துக் கொள்கிறார்களோ அவர்களிடம் உணர்ச்சிப்பிணைப்பு வளர ஆரம்பிக்கிறது. இது குழந்தையின் மனதில் நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் மேம்படுத்தும். குழந்தையின் மனதில் நம்பிக்கையும், பாதுகாப்பு உணர்வும் அதிகரிக்க அதிகரிக்க எதிர்காலத்தில் எந்தவொரு முடிவையும் நம்பிக்கையோடும், பாதுகாப்போடும் அணுக முடியும். அந்த நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் ஆரம்ப கட்ட நிலையில் குழந்தையின் முதல் ஆறுமாத காலம் அமைகிறது.
வேலைக்கு போகும் பெண்கள் தங்கள் குழந்தையை ஒரு நாள் பாட்டி வீட்டிலும், மறுநாள் தன் வீட்டிலும் விட்டுச் செல்வார்கள். அப்படி இல்லாமல், குழந்தையின் அருகில் அப்பாவோ, அம்மாவோ யாரோ ஒருவர் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். இருவரும் குழந்தையுடன் இருக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். அது குழந்தைக்கும் பாதுகாப்பு உணர்வை கொடுப்பதோடு, உங்கள் இருவருக்குள்ளும் பிணைப்பை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ள அனைவருமே குழந்தைக்கு அந்த வீடு பாதுகாப்பானது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
உணர்ச்சிகள் (Different emotions)
இந்த பருவத்தில்தான் குழந்தைகள் உணர்ச்சிகளை கற்றுக் கொள்கின்றன. சோகம், சந்தோஷம், பயம் என எல்லா உணர்ச்சிகளை அனுபவிக்க ஆரம்பிக்கின்றன. பெரும்பாலும் குழந்தையின் உணர்ச்சி வெளிப்பாடு அழுகையாக இருந்தாலுமே தாய்க்கு அதன் அழுகையை வைத்தே பசிக்கு அழுகிறதா? தூக்கம் அல்லது இயற்கை வெளியேற்றம் என எதற்கு அழுகிறது என கண்டுபிடிக்கத் தெரிய வேண்டும். நம்முடைய சிரிப்பு, கோபம் போன்ற உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு பதில் அளிக்க ஆரம்பிக்கும். பெரிய குழந்தையாக இருந்தால் தன்னுடைய வலியை வெளிப்படுத்தும். அதற்கு உடனே நாம் அதற்கு மருந்து கொடுத்து சரி செய்வோம்.
ஆனால், பச்சிளம் குழந்தைக்கு தனக்கு வலி என்று சொல்லத் தெரியாது. அழுகையாகத்தான் வெளிப்படுத்தும். நாம் குழந்தையின் அழுகையை அசட்டையாக நினைக்காமல் உடனே அதற்கு பதில் அளித்தால், அதற்கு ஒரு உணர்வு பிணைப்பு வளரும். எனக்கு வலித்தது; நான் அழுதேன். அதனால் அவர்கள் உடனே என்னை கவனித்தார்கள் என உணர்ச்சிகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்கின்றன. இதுவே குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது.
இந்த ஆறு மாத கால நிலையில் குழந்தை உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் திறன் பெற்றவர்களாக இருப்பதால், பெற்றோரின் மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியம் இரண்டுமே முக்கியம். குழந்தைக்கு நம்முடைய மனநிலை எங்கே தெரியப்போகிறது? என்று நினைப்போம். நாம்தான் நம் குழந்தையின் முதல் ஆசான். நம்மிடம்தான் உணர்ச்சிகளை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். நாம் எதை வெளிப்படுத்துகிறோமோ அதுவே அவர்களிடமிருந்து திரும்ப வெளிப்படும். நம்முடைய மகிழ்ச்சி, துயரம், கோபம், சலிப்பு எல்லாமே குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உணர்வுகள் (Sensories)
இந்த நிலையில் குழந்தையின் பார்வைத்திறன், கேட்கும் திறன், தொடு திறன் என அனைத்து உணர்வு உறுப்புகளும் மேம்பட ஆரம்பிக்கின்றன. அருகில் உள்ள பொருட்களை பிடித்துக் கொள்வார்கள். அவர்கள் அருகில் கிலுகிலுப்பை போன்ற பிடித்த பொருட்களை கொண்டு சென்றால் அவற்றின் திசையில் தலையைத் திருப்பி பார்க்கத் தொடங்குவார்கள். உடலை பக்கவாட்டில் திருப்பி குப்புற கவிழ்ந்து கொள்வார்கள். குழந்தையிடம் பேச்சுக் கொடுத்தால் அதற்கு ஆ, ஊ என ஒலி எழுப்பி பதில் கொடுப்பார்கள். தன் கைகள் மற்றும் விரல்களோடு விளையாடுவார்கள்; பொம்மைகளை ஒரு கையிலிருந்து மற்ற கைக்கு மாற்றி பிடித்துக் கொள்வது. பொம்மைகளை வாயில் வைத்துக் கொள்வது, இதுபோன்ற உணர்வுகளைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பெற்றோர் செய்து கொண்டிருந்தால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக இருக்கும்.
குழந்தையின் தூக்கம் (Sleeping)
வளர்ந்தவர்களின் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கே தூக்கம் அவசியம் எனும்போது, ஒரு குழந்தை மூளை, உடல், நடத்தை மற்றும் உணர்ச்சிகள் என பல மைல்கற்களை கடக்க வேண்டியிருப்பதால் தூக்கம் அதன் வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சொல்லப்போனால் இந்த வளர்ச்சிகள் அனைத்துமே குழந்தை தூங்கும்போதுதான் நிகழ்கிறது. குழந்தைகள் நன்றாக தூங்கவேண்டும்.
தரமான தூக்கம் கிடைக்கவில்லையெனில், குழந்தையின் வளர்ச்சியை தடுக்கும். நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன் (NSF) ஆய்வுப்படி முதல் 3 மாதக் குழந்தைக்கு 14 முதல் 18 மணிநேர தூக்கமும் 4 முதல் 11 மாதங்கள் நிறைந்த குழந்தைக்கு 12 முதல் 15 மணி நேரத் தூக்கமும், புதியதாக நடக்கத் தொடங்கிய குழந்தைக்கு 11 முதல் 14 மணிநேர தூக்கமும் தேவை. ஒரு சில குழந்தைகளை பொறுத்து நாளுக்கு நாள் சற்றே ஏறக்குறைய தூக்க அளவு மாறுபடலாம்.
தடையில்லாத நல்ல தூக்கம் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும், மூளையின் நெட்வொர்க்குகளை உருவாக்குவதற்கும், கற்றல், சிந்தனை ஆற்றல், மொழி வளர்ச்சி மற்றும் நடத்தை உருவாக்கம் ஆகியவற்றை எளிதாக்கும் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.நல்ல ஊட்டச்சத்துடன் இணைந்த நல்ல தூக்கம் ஒரு குழந்தையை அனைத்து உடல் வளர்ச்சி நிலைகளையும் கடந்து செல்ல உதவுகிறது. மோட்டார் திறன்களை கற்றுக் கொள்வது, பொருட்களை சரியாக கண்டுபிடிப்பது, ஒலிகளை உருவாக்குவது, குழந்தையின் உயரம் மேலும் அனைத்து வளர்ச்சி மைல்கற்களும் குழந்தை வளர்ச்சியில் அடங்கும். பகலில் அடிக்கடி குட்டித்தூக்கம் போடும் குழந்தைகளுக்கு சில நினைவுகளை ஒன்றிணைத்து வளரும்போது நினைவகம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
இந்த நினைவாற்றல் கற்றல் மற்றும் செயல் திறனுக்கு முக்கியமானது. குழந்தையின் முதல் வருடத்தில் மூளையின் அளவு இருமடங்காகும். அவர்களின் மன வளர்ச்சியும் உடல்வளர்ச்சியும் விரைவாக நிகழும். பெரும்பாலான கற்றல் திறனானது அவர்களின் தூக்க நேரத்தில்தான் நடக்கிறது. நல்ல தூக்கம் பெற்ற குழந்தைகள் அதிக வளர்ச்சியும் மதிப்பெண்கள் கொண்டவர்களாகவும், குறைவாக தூங்கும் குழந்தைகள் கடினமான குணங்களை கொண்டிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பழக்கமான பொருட்கள் மற்றும் நபர்களை அடையாளம் காண்பது, விழித்திருக்கும்போது கற்றுக்கொண்ட விஷயங்களை வலுப்படுத்தவும் உதவுவதோடு, அவர்களின் சுற்றுச்சூழலை வேகமாக செயலாக்கவும், ஆராயவும் உதவுகிறது. மேலும், குறைவான தூக்கம் உள்ள குழந்தைகள் ஆரோக்கியமற்ற உடல்பருமனுக்கு வழி வகுப்பதாகவும், நோய் எதிர்ப்புத் திறனை குறைப்பதாகவும்
ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே குழந்தைகள் உறங்கும் அறையை அவர்களுக்கு வசதியாக அமைத்து தருவதுடன், தூக்க நேரத்தை வழக்கமான ஒரே குறிப்பிட்ட நேரத்தில் தூங்க வைப்பதும் மிகமிக அவசியம். தாய்ப்பால்குழந்தையின் ஒட்டு மொத்த நலனுக்கு மிக மிக அவசியம் தாய்ப்பால். முதல் ஆறுமாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதும். தாய்ப்பாலில் இருக்கும் பல்வேறு அமிலங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன.
குழந்தைகளின் இயல்பான செயலுக்கும் சீரான புத்தி கூர்மைக்கும் தாய்ப்பால் அவசியமாகிறது. 12 மாதம் வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளிடத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி அவர்களின் அறிவு, புத்திசாலித்தனம், கிரகிக்கும் தன்மை, கவனம் செலுத்துதல், பழக்க வழக்கம், செயலாக்கத் திறமை, முடிவெடுக்கும் திறன், சமூகத்தோடு ஒத்துப்போகும் மனநிலை, குடும்பத்தோடு இணக்கம் ஆகியவை மேன்மையாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
மூளை வளர்ச்சி நன்றாக இருந்தாலே உணர்ச்சிகள், மனநலம், உடல் ஆரோக்கியம் போன்ற எல்லா நலன்களும் கூடவே சேர்ந்து மேன்மை அடையும்முக்கியமான விஷயம் தாய்மார்களுக்கு கூறிக் கொள்ள விரும்புவது, எப்படி ஒவ்வொரு பூவும் மலர்வதில் வேறுபாடு கொண்டிருக்கிறதோ குழந்தைகளும் பூக்களைப் போன்றவர்கள்தான். ஒவ்வொரு குழந்தைக்கும் வளர்ச்சியில் மைல்கற்கள் மாறுபடும்.
சில குழந்தைகள் சரியான நேரத்தில் ஒவ்வொன்றையும் செய்துவிடும். சில குழந்தைகள் மெதுவாக செய்ய ஆரம்பிக்கும். அதனால் கவலை கொள்ள வேண்டியதில்லை. மிகவும் வித்தியாசம் இருந்தால் மட்டுமே மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். மற்றபடி ஒலி, ஒளிகளுக்கு பதில் அளிக்கிறதா? கண் தொடர்பு இருக்கிறதா? நம் முகத்தை பார்க்கிறதா? போன்றவற்றை நன்கு கூர்ந்து கவனிக்க வேண்டும்.