மாடர்ன் உடைகளின் பெஸ்ட் காம்போ டெரக்கோட்டா நகைகள்! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 38 Second

டெரக்கோட்டா நகைகள் பெண்களின் நாகரீக மற்றும் அலங்கார பொருளாக மாறியுள்ளது. சொல்லப்போனால் இன்றைய தலைமுறையினர் இந்த நகைகளை அனைத்து ரக உடைகளுக்கும் அணிவதை டிரண்டாக விரும்புகின்றனர். உடைக்கு ஏற்ப மேட்சிங் நகைகளை நம் விருப்பம் போல் வடிவமைத்துக் கொள்ளலாம் என்பதால் டெரகோட்டா நகைகள் பாரம்பரியம் மட்டுமில்லாமல் வெஸ்டர்ன் உடைகளுக்கும் கவர்ச்சியான தோற்றத்தினை அளிக்கிறது. எல்லா வயதினரும் விரும்பும் வண்ணம் இதனை வடிவமைத்து வருகிறார் கோவையை சேர்ந்த ரம்யா நவீன். இவர் ‘வியாஷ் கிரியேஷன்’ என்ற பெயரில் அழகான டெரக்கோட்டா நகைகளை ஆர்டரின் பெயரில் வழங்கி வருகிறார். தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆன்லைன் முறையில் விற்பனை செய்து வருகிறார்.‘‘என் சொந்த ஊர் ஈரோடு. பிறந்தது படிச்சது எல்லாம் அங்கதான். கல்யாணத்திற்கு பிறகு சில காலம் நாங்க கரூரில் இருந்தோம். அங்கு ஒரு கல்லூரியில் பேராசிரியரா வேலைப் பார்த்து வந்தேன். அதன் பிறகு என் கணவரின் ெதாழில் காரணமாக நாங்க கோவையில் செட்டிலாயிட்டோம். இதற்கிடையில் குழந்தைகள், அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் நான் என் வேலையை ராஜினாமா செய்திட்டேன்.

குழந்தைகளை பார்த்துக் கொண்டாலும், எனக்கு வீட்டில் சில மணி நேரம் ஃப்ரீயா இருக்கும். வேலைக்கு சென்று வந்த எனக்கு வீட்டில் இருக்கும் அந்த சில மணி நேரங்கள் ஏதாவது செய்யலாம்னு எண்ணம் இருந்தது. ஆனால் என்ன செய்வதுன்னு அப்ப தெரியல. அந்த சமயத்தில் என்னுடைய தோழி ஒருவர் டெரக்கோட்டாவில் நகை அணிந்திருந்தார்.

அது பார்க்கவே ரொம்ப அழகா இருந்தது. விசாரித்த போதுதான் தெரிந்தது. அந்த நகை களிமண்ணால் செய்யப்பட்டது என்றும், அதை நாமே நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்துக் கொள்ளலாம் என்று. எனக்கு அதைப் பார்த்தஉடனே ரொம்பவே பிடித்து போனது. இப்ப எல்லாரும் கவரிங் நகைகளைதான் அதிகம் விரும்புறாங்க. அதற்கு ஒரு மாற்றாக நாம இதை செய்யலாம்ன்னு நினைச்சேன்’’ என்றவர் இதில் எவ்வாறு தன்னை ஒரு தொழில் முனைவோராக மாற்றிக் கொண்டார் என்பதைப் பற்றி விவரித்தார்.

‘‘நான் ஆரம்பத்தில் எனக்கான நகைகளை மட்டுமே தான் செய்து கொண்டிருந்தேன். என் உடைகளுக்கு ஏற்ப டிசைன்களை எனக்காக செய்ய விரும்பினேன். அதற்காக முறையாக கற்றுக் கொள்ள முடிவு செய்தேன். ஒருவரிடம் பயிற்சிக்காக சென்றேன். ஆனால் அவர் அடிப்படை விஷயம் மட்டும்தான் சொல்லிக் கொடுத்தார். அதைக் கொண்டு சின்னச் சின்ன நகைகளை செய்ய துவங்கினேன். ஆனாலும் எனக்கு அதில் பெரிய திருப்தி ஏற்படவில்லை. அதனால் மீண்டும் இதற்கான பயிற்சியை எடுக்க விரும்பினேன். அப்ப எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது. அவனை வீட்டில் என் கணவரைப் பார்த்துக் கொள்ள சொல்லி நான் தினமும் இதற்கான பயிற்சியினை எடுத்துக் கொண்டேன். அவர் சொந்தமாக தொழில் செய்து வந்ததால், எனக்கு பயிற்சிக்கு செல்ல வசதியாக இருந்தது. அங்குதான் டெரக்கோட்டா நகைகள் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டேன். டெரக்கோட்டாவிற்கான தனிப்பட்ட களிமண் மற்றும் அதனை வேக வைக்கும் முறை எல்லாம் கற்றுக் கொண்ேடன். அதன் பிறகு நானே ஒவ்வொரு டிசைன்களை எனக்காக வடிவமைக்க ஆரம்பித்தேன். நான் அணிந்திருப்பதை பார்த்து என் தோழிகள் மற்றும் உறவினர்கள் அவர்களுக்கும் செய்து தரும்படி கேட்டார்கள். அவர்கள் மூலமாக அவர்களின் நண்பர்கள், தெரிந்தவர்கள்னு எனக்கு என தனிப்பட்ட கஸ்டமர்கள் வர ஆரம்பித்தார்கள்.

இதற்கிடையில் நான் செய்யும் நகைகளை என்னுடைய முகநூலில் பதிவிட ஆரம்பித்தேன். அதன் மூலமாகவும் எனக்கு கஸ்டமர்கள் வந்தார்கள். சொல்லப்போனால் வெளிநாட்டில் இருந்தும் எனக்கு ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இப்போது, பெரும்பாலும் முகநூல் மற்றும் இன்ஸ்டா மூலம் ஆன்லைனில் ஆர்டர்கள் எடுத்து செய்து தருகிறேன். டெரக்கோட்டா நகைகள் பொறுத்தவரை அதனை அணிந்தால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். மேலும் நான் இதில் எந்தவித ஆர்டிபிசியல் நகைகளை சேர்ப்பதில்லை. சிலர் முத்துக்களுக்கு கவரிங் நகை
களில் வரும் முத்துக்களை இணைப்பார்கள். நான் அப்படி செய்வதில்லை. பாரம்பரியமாக கொடுக்கப்படும் நகைகளை அதன் மதிப்பு மாறாமல் கொடுக்க விரும்பினேன்.

அதனால் அந்த முத்துக்களைக் கூட நான் களிமண்ணில் தான் செய்கிறேன். இது முழுக்க முழுக்க மண் சார்ந்தது என்பதால் சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. ெபாதுவாக ஒரு சிலருக்கு கவரிங் நகைகள் அணியும் ேபாது அது சருமத்தில் எரிச்சல் மற்றும் அரிப்பினை ஏற்படுத்தும். சில சமயம் சருமத்தின் நிறம் கருமையாக மாறும். அந்த பாதிப்பு இதில் முற்றிலும் இருக்காது. சருமம் பிரண்ட்லி என்பது மட்டுமில்லாமல், உடைக்கு ஏற்ப டிரண்டியாகவும் இதனை வடிவமைக்கலாம் என்பதால், அனைத்து வயது பெண்களும் இதனை விரும்புகிறார்கள்’’ என்றவர் இதனை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பது குறித்து விவரித்தார்.

‘‘டெரக்கோட்டா நகைகள் செய்ய மிகவும் முக்கியமானது அதில் பயன்படுத்தப்படும் களிமண் வகைதான். இதற்கான களிமண் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி சப்பாத்தி மாவு போல் நன்கு பிசைய வேண்டும். காரணம், இது மண் என்பதால் உள்ளே சின்னச் சின்ன காற்று குமிழிகள் இருக்கும். சரியாக பிசையாமல் நகைகளை வடிவமைத்தால், அதனை சுடும் போது உடைந்துவிடும். அதனால் முதலில் நன்கு பிசைந்து பிறகு நாம் விரும்பும் டிசைன்களில் வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு மூன்று நாட்கள் நிழலில் காயவைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வெயிலில் காயவைக்கக்கூடாது. களிமண் என்பதால் உடைந்துவிடும். மூன்று நாட்கள் கழித்து எவ்வாறு செங்கல் சூளையில் செங்கல் உறுதியாக இருக்க அதை சுடுகிறார்களோ அதேபோல் இதனை சுட வேண்டும். சிலர் அதற்கு மைக்ரோ அவன்களை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு இல்லாமல், இதனை தீயில்தான் சுட வேண்டும். அதனையும் நேரடியாக சுடக்கூடாது.

அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. அதாவது, ஒரு பானையில் மரத்தூள் பரப்பி அதன் மேல் இந்த நகைகளை வைத்து மீண்டும் அதன்மேல் மரத்தூள்களை பரப்பி, அடுப்பில் வைக்க வேண்டும். எல்லாம் நன்கு எரிந்து பிறகு எடுத்தால் நகைகள் அழகான வடிவத்தில் கிடைக்கும். தற்போது இதற்காகவே தனிப்பட்ட கருவி உள்ளது. க்ளென் என்று அழைக்கப்படும் அந்த கருவி பார்ப்பதற்கு பழங்கால மண் அடுப்பு போல் இருக்கும், இந்த கருவி இரண்டு டிசைன்களில் உள்ளது. ஒன்று பழங்கால அடுப்பு போல இருக்கும். இதனை கேஸ் அடுப்பில் வைத்து பயன்படுத்தலாம்.

மற்றொன்று மின்சாரத்தில் இயங்கக்கூடியது. இரண்டிலும் மரத்தூள்கள் போட்டு நகைகளை வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் சுமார் ஒரு கிலோ முதல் ஐந்து கிலோ எடை கொண்ட நகைகளை தயார் செய்ய முடியும். நகைகளை தீயில் சுட்ட பிறகு அதன் நிறம் கருப்பாக மாறும். சிகப்பாக வேண்டும் என்றால் மரத்தூளுக்கு பதில் மணல் பயன்படுத்தலாம். அதன் பிறகு நன்கு குளிர்ந்ததும், நாம் விரும்பும் வண்ணங்கள் கொண்டு அலங்கரிக்கலாம். தண்ணீர் பட்டாலும் கரையாது. சீக்கிரம் உடைந்தும் போகாது. உறுதியாக இருக்கும். டெரக்கோட்டா நகைகளை பொறுத்தவரை எல்லாவிதமான டிசைன்களிலும் வடிவமைக்கலாம்.

சோக்கர் முதல் ஆரம் வரை அனைத்து வகை நகைகளும் இதில் செய்யலாம். எல்லாவற்றையும் விட உடையின் நிறத்திற்கு ஏற்ப மேட்சிங் நிறங்களில் நகைகளை டிசைன் செய்யலாம். எல்லாம் கைகளால் செய்யக்கூடியது என்பதால் நாம் விரும்பும் டிசைன்களில் வடிவமைக்கலாம்.இதில் நகைகள் மட்டுமில்லை, ஃபிரிட்ஜின் மேல் ஒட்டக்கூடிய மேக்னெட் கூட செய்யலாம். மேலும் பிள்ளையார் சிலை மற்றும் நமக்கு பிடித்த கடவுளின் சிலைகளை வடிவமைக்கலாம். இவை எல்லாம் சிலிக்கான் மோல்ட் வடிவங்களில் கிடைப்பதால், நாம் விரும்பும் சிலைகளை அதன் மூலம் மோல்ட் செய்வதால், நாம் விரும்பும் கடவுளின் சிலைகளை வைத்துக் கொள்ளலாம்.

மேலும் மேஜை மேல் வைக்கக்கூடிய பெயர் பலகையும் இதில் வடிவமைக்கலாம்’’ என்றவர் டெரக்கோட்டா நகைகள் மட்டுமில்லாமல் டீகோபேஜ், டாட் பெயின்டிங், மண்டல் ஆர்ட், கேன்வாஸ் பெயின்டிங் போன்றவற்றையும் செய்து வருகிறார்.‘‘கோவையில் பெரிய அளவில் டெரக்கோட்டா நகைகள் கடைகள் கிடையாது. அதே சமயம் இதற்காக மட்டுமே நான் கடை ஒன்றை அமைக்கவும் முடியாது. காரணம், இவை அனைத்தும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்படும் நகைகள். ஆர்டரின் பேரில் தான் செய்து தருகிறேன்.

அதனால் இதற்கென தனிப்பட்ட இணைய பக்கம் ஒன்றை துவங்கி அதன் மூலமும் விற்பனை செய்யும் எண்ணம் உள்ளது. மேலும் இரண்டு மூன்று பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை என்னுடன் சேர்ந்து இணைந்து செயல்படுத்தும் எண்ணம் உள்ளது. தற்போது இதற்கான பயிற்சியும் அளித்து வருகிறேன். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பல பெண்களுக்கு ஒரு வாழ்வாதாரமாக அமையும்’’ என்றவர் , தோழியுடன் இணைந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக சோப், கிரீம் மற்றும் ஷாம்பூக்களையும் தயாரித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரபலமாகி வரும் வாக்-இன் திருமணங்கள்!! (மகளிர் பக்கம்)
Next post அழகு சாதனப் பொருட்கள்! (மருத்துவம்)