குடல் இறக்கம் காரணமும் தீர்வும்! (மருத்துவம்)
இன்றைய காலகட்டத்தின் வாழ்க்கை முறைகளாலும், உணவுப் பழக்கங்களாலும் பல்வேறு நோய்கள் சர்வசாதாரணமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஹெர்னியா என்று சொல்லப்படும் குடல் இறக்கமும் ஒன்று. இந்த குடல்இறக்கம் என்பது என்ன, எதனால் ஏற்படுகிறது, அதற்குரிய சிகிச்சை முறைகள் என்ன என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இரைப்பை குடல் சிறப்பு மருத்துவர் பிரசாந்த் கிருஷ்ணா.
குடல் இறக்கம் என்றால் என்ன..
வயிற்றுப் பகுதியில் இருக்கும் குடலானது, அது இருக்கும் இடத்தில் இருந்து சற்று கீழ் நோக்கி இறங்குவதைத்தான் குடல்இறக்கம் என்று சொல்கிறோம். இது வயிற்றின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். இது ஹெர்னியா என்று சொல்லப்படுகிறது.இதில் அதிகமாக வருவது கவட்டை கால்வாய் (Inguinal) குடல்இறக்கம். இதைத்தான் பொதுவாக குடல்இறக்கம் என்று கூறுகிறார்கள். இது ஆண்களுக்கே அதிகமாக வருகிறது. அடிவயிறும் தொடையும் சேருகிற இடத்தில் இது ஏற்படும். பெண்களைப் பொறுத்தவரை தொப்புளில் ஏற்படுவது பொதுவானது (Umbilical Hernia) என்று சொல்லப்படுகிறது.
சிலருக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் குடல்இறக்கம் ஏற்படலாம். இந்த குடல்இறக்கம் ஏற்படும் இடத்தைப் பொறுத்து இதை வெவ்வேறு வகையாகப் பிரிக்கப்படுகிறது. பொதுவாக, வயதாக ஆகத்தான் குடல்இறக்கம் வர அதிக வாய்ப்பு உண்டு.
குடல்இறக்கம் எதனால் ஏற்படுகிறது…
வயிற்றை சுற்றி இருக்கும் சுவர் பகுதியில் பலவீனம் ஏற்படும்போது குடல் இறக்கம் ஏற்படுகிறது. பெண்களைப் பொருத்தவரை, அவர்களுக்கு பிரசவ காலத்தில் வயிற்றுப் பகுதி விரிவடைந்து, சுருங்குவதால் வயிற்று தசைப் பகுதிகள் பலவீனமாகும். இதனால், ஒருசிலருக்கு வயதாக ஆக வயிற்று சுவர் பகுதி மேலும் பலவீன மடைந்து குடல்இறக்கம் ஏற்படுகிறது. ஆண்களைப் பொறுத்தவரை வயது முதிர்வு மேலும், அதிக எடை தூக்கும் பணியில் இருப்பவர்களுக்கு அதிகமாக குடல்இறக்கம் ஏற்படுகிறது.
ஏனென்றால், அவர்கள் பல ஆண்டுகளாக எடையை தூக்கித் தூக்கி அவர்களுக்கு வயிற்றுச் சுவர் பலவீனமடைந்து விடும். இதனால், குடல்இறக்கம் ஏற்படும். இது தவிர, ஆண், பெண் இருவருக்கும் பொதுவான காரணமாக பார்க்கப்படுவது உடல் பருமன். அதிக உடல் எடையினாலும் குடல்இறக்கம் ஏற்படலாம். அடுத்து, மலச்சிக்கல், அதிக இருமல், சளி, மூச்சுக்குழாய் பிரச்னைகள் இருப்பவர்கள் ஆகியோர்களுக்கும் குடல்இறக்கம்(ஹெர்னியா) வரும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு பிறக்கும்போதே ஹெர்னியா இருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
குடல் இறக்கத்திற்கான அறிகுறிகள் என்ன..
வயிற்றுப்பகுதியில், தொப்புள் பகுதியில் வீக்கம் ஏற்படுவது, நீர் வடிதல் போன்றவை அறிகுறிகளாகும். சிலருக்கு நிற்கும் போதும், அதிக எடை கொண்ட பொருளை தூக்கும்போதும் வயிற்றில் ஏதேனும் ஒரு இடத்தில் தசை உருண்டு வீக்கம் ஏற்படும். அதுவே, உட்காரவோ, படுக்கவோ செய்தால் வீக்கம் போய்விடும்.
சிலருக்கு வயிற்றை இழுத்துபிடிப்பது போன்ற உணர்வு உண்டாகும். அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களாக இருந்தால் தையல் போட்ட இடத்தில் நீர் போன்ற திரவம் வெளியேறுவது அறிகுறிகளாகும்.சிலருக்கு வலி இல்லாமல் கட்டியாகத் தோன்றும். பிறகு அடிவயிறு, இடுப்பு போன்ற பகுதியில் கடுமையான வலி இருக்கும். மேல்புற வயிற்றில் வலி உண்டாவதும் இதன் அறிகுறிகளில் ஒன்றுதான். இது தவிர, இருமும் போதும், மலம் கழிக்க சிரமப்படும் போதும் தசைப்பகுதியில் சிறிய வீக்கம் உண்டாகும். பெரும்பாலும் இதன் அறிகுறிகள் வலியற்ற வீக்கத்தோடுதான் இருக்கிறது.
வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக்குழாயில் சேர்வதால் நெஞ்செரிச்சல் உண்டாவது, வாந்தி, குமட்டல் போன்றவையும் இதன் அறிகுறிகள். அதிதீவிரமாகி கடைசி கட்டத்திற்கு போகும்போது, அந்த குடலுக்கு போகும் ரத்த ஓட்டம் நின்று, குடல் அழுகிவிடும். இது உயிருக்கே ஆபத்தான நிலையைக் கூட உருவாக்கக்கூடும்.
சிகிச்சை முறைகள்..
குடல்இறக்கத்திற்கான சிகிச்சை முறைகள் என்றால், அது அறுவை சிகிச்சை மட்டுமே. அறுவை சிகிச்சையின் மூலம் புடைத்து வெளியே வரும் பகுதியை உள்ளே தள்ளுவது அல்லது அதை மொத்தமாக நீக்கிவிட்டு தையல் மூலம் மூடுவது போன்றவை செய்யப்படும்.அறுவை சிகிச்சையும் இரண்டு விதங்களில் உள்ளது. ஒன்று ஓபன் சர்ஜரி மற்றொன்று துளைகள் வழியாக செய்யப்படும் லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை ஆகும்.
பல ஆண்டுகாலமாக, முதல் வகையான ஓபன் அறுவைசிகிச்சைமட்டும்தான் செய்யப்பட்டுவந்தது. தற்போது சுமார் 20 ஆண்டுகாலமாகத்தான் லேப்ராஸ்கோபி முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இரண்டுமே நல்ல பலனைத் தருகிறது. லேப்ராஸ்கோப்பி முறையைப் பொறுத்தவரை, வலியும் தழும்பும் குறைவாக இருக்கும். மேலும் இந்த முறையில் தொற்று உண்டாகும் வாய்ப்பு குறைவு. வேகமாக குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பமுடியும்.
குடல்இறக்க நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகள் தற்காத்துக் கொள்ளும் வழிகள் என்றால், வயிற்றுப் பகுதியை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான். வயிற்றுப் பகுதிகளுக்காக உள்ள உடல் பயிற்சிகளை மேற்கொண்டு தசைப்பகுதிகளை இறுக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.புகைப்பிடிக்கும் பழக்கம் கூட ஹெர்னியா வர ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. எனவே, புகைக்கும் பழக்கத்தை கைவிடுவதும் நல்லது.
கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள்
மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் பிரிய தடை செய்யாத உணவுகள் எதுவாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். இது தவிர்த்து, ஆரோக்கியமான உணவுமுறைகளை கடைப்பிடித்தாலே பெரும்பாலான நோய்களில் இருந்து விடுபடலாம்.மேலும், குடல்இறக்கத்தைப் பொருத்தவரை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். விரைவில் அந்த நோயிலிருந்து மீண்டுவிடலாம்.
தற்போது, லேப்ராஸ்கோப்பி முறையில் செய்யப்படும் அறுவைசிகிச்சை சுலபமானதாக இருப்பதால், ஒரே நாளில் அறுவைசிகிச்சை முடிந்து வீடு திரும்பும் அளவு நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டது. எனவே, பிரச்னை உள்ளது என்பது தெரிந்துவிட்டால், சிகிச்சைகளை தள்ளிப் போடுவதையோ, தட்டிக் கழிப்பதையோ செய்யாமல், உடனடியாக உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால், எந்த நோயாக இருந்தாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால், பெரிய பிரச்னைகளில் சிக்கலாகாமல் விரைவில் நலம் பெறலாம்.