ஒரு தெய்வம் தந்த பூவே!! (மருத்துவம்)

Read Time:13 Minute, 5 Second

பிரசவ கால மனநிலைசந்தோஷமான கர்ப்ப காலம் முடிந்ததும் அதைவிட பெருமகிழ்ச்சியை கொடுக்கக்கூடியது பிறந்த குழந்தை. கர்ப்ப காலத்தைக் காட்டிலும் இன்னும் கூடுதலாக கவனிக்கப்பட வேண்டியவர்கள் பிரசவித்த தாய்மார்கள். பிரசவம் வரை, கர்ப்பவதிக்கு பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்த குடும்பத்தினர் அனைவருமே குழந்தை வந்த சந்தோஷத்தில், அதனை கஷ்டப்பட்டு ஈன்றெடுத்த தாயை மறந்துவிடுவோம். தாயின் உடல்நிலையிலும் சரி, மனநிலையிலும் சரி, குடும்பத்தினர் முன்பையும் விட அதிகமாக அக்கறை காட்ட தவறக்கூடாது.

குழந்தை பிறந்த ஆறுமாதம் கழித்து, தாய் மனரீதியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரையிலுமான தாயின் கவனிப்பை பிரசவத்திற்கு பிந்தைய கால பராமரிப்பு (Postnatal care) என்று சொல்லுவோம். பொதுவாக குழந்தை பிறந்தவுடன் உற்றார் உறவினர்களின் வாழ்த்துக்களால் தாய்மார்கள் அனைவருமே சந்தோஷமான சூழ்நிலையில்தான் இருப்பார்கள். ஆனால், கர்ப்பகாலம் முழுவதும் மற்றும் பிரசவம் வரையிலும் தேவைப்படுகின்ற ஈஸ்ட்ரோஜன், ப்ரொஜஸ்ட்ரோன் போன்ற சில ஹார்மோன்களின் சுரப்பு குறைவு, மற்றும் பெண்களின் உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன்கள் மாற்றங்களினால் சில தாய்மார்களுக்கு மனநிலையில் சின்னச் சின்ன மாறுதல்கள் முதல் பெரிய அளவிலான மனப்பதட்டம் (Anxiety) மற்றும் பிரசவகால மனஅழுத்தம் (Postnatal Depressiion), பிரசவகால மனநோய் (Postpartum psychosis) வரை ஏற்படக்கூடும்.

பிரசவகால மனக்குழப்பம்(Postpartum blues)

மனஅழுத்தம் அளவுக்கு இல்லாமல், அதே நேரத்தில் இயல்பு நிலையிலும் இல்லாமல் இருக்கும் நிலைக்கு ‘பிரசவகால மனக்குழப்பம்’ (Postpartum blues) அல்லது ‘பேபி ப்ளு’ என்று பெயர். இது பொதுவாக எல்லா தாய்மார்களுக்கும் வரக்கூடியது. வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தைத் தரக்கூடிய ஒரு புதிய உறுப்பினரின் வருகை அதாவது குழந்தை பிறப்பு என்பது எல்லா தாய்க்கும் பெருமையையும், மகிழ்ச்சியையும் தருவதற்குப் பதிலாக, பெரும்பாலான அம்மாக்கள் சோகத்திற்கும், அதிகப்படியான உணர்வுப் போராட்டத்திற்கும் உள்ளாகிறார்கள்.

ஒரு நிமிடம் தன்னைப்பற்றி பெருமையாக நினைத்து மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பார்கள். அடுத்த நிமிடமே தான் குழந்தையை சரியாக கவனிப்பது இல்லையோ என இனம்புரியாத சோகம் வந்துவிடும். இப்படி அடிக்கடி உணர்வு மாற்றம் ஏற்படும். சரியாக சாப்பிடாமல், தன்னை கவனித்துக் கொள்ளாமல் மிகவும் சோர்வாகிவிடுவார்கள். எல்லோரிடமும் எரிந்து விழுவது, எரிச்சலடைவது, அழுவது என ஒரு முரண்பாடான மனநிலையில் இருப்பார்கள்.

காரணம், பிரசவத்திற்குப்பின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தூக்கம் கெடுவது போன்றவற்றால் மனச்சோர்வு, மனப்போராட்டங்கள் இருப்பது இயல்பான ஒன்று. இது உங்களுக்கு மட்டும் நடப்பதாக நினைத்து கவலைப்பட வேண்டாம், பிரசவத்திற்குப்பின் இரண்டு நாட்கள் முதல், பின்னர், இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இந்நிலை மாறி, உங்களின் பழைய மகிழ்ச்சி நிலைக்கு வந்துவிடுவீர்கள்.

பிரசவகால மன அழுத்தம் (Postpartum Depression)

பிரசவகால மன அழுத்தம் உள்ள தாய்மார்கள் நம்பிக்கையற்றவர்களாகவும், தான் எதற்கும் லாயக்கற்றவராகவும் கற்பனை செய்து கொள்வார்கள். அல்லது எப்போதும் சோகமாகவும், தன்னைப்பற்றிய தாழ்வு மனப்பான்மை அதிகரித்தும் காணப்படுவார்கள். நான் என் குழந்தையை சரியாக பார்த்துக் கொள்வேனா? என்னுடைய நடவடிக்கையால் குழந்தைக்கு ஏதேனும் வந்துவிடுமோ? என்ற பயம் மிகுந்தவர்களாகவும், குழந்தையைக்கூட சரியாக பராமரிக்காமல், குழந்தையோடு ஒரு பிணைப்பு இல்லாமல், சரியாக சாப்பிடாமல், தன்னையும் சரியாக பார்த்துக் கொள்ளாமல் எப்போதும் ஒருவித பதட்டத்தோடும், தனிமையில் எப்போதும் அழுதுகொண்டும் அடிக்கடி மயக்கம் வருபவர்களாகவும் இருப்பார்கள். தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டோ அல்லது தற்கொலை எண்ணம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

குழந்தையை பார்த்துக் கொள்ளப் பிடிக்காமல், வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல், குழந்தையை பார்க்க வரும் உறவினர்களிடத்தில் எரிந்து விழுவது, பசியின்மை, தூக்கமின்மை, அன்றாட வேலைகளில் கவனமின்மை. இவையெல்லாம் பிரசவகால மன அழுத்தத்தின் அறிகுறிகள். ஆரம்பகாலம் சிறியதாகத் தோன்றும் இந்த அறிகுறிகள் போகப்போக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வரை கொண்டு போகும்.

குடும்பத்தில் உள்ளவர்கள் இது எல்லோருக்கும் இருப்பது சகஜம் என எளிதாக எடுத்துக்கொண்டு அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். தாய்மார்களும் இது இயல்பான ஒன்றுதான் என்று அதை சகித்துக் கொண்டு வாழ பழகிவிடுகிறார்கள். அப்படி இல்லாமல் குடும்பத்தினர் அவர்களோடு அமர்ந்து ஆறுதலாகப் பேசி அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து அவர்களின் மனநிலையிலிருந்து வெளிவர உதவி செய்ய வேண்டும்.

தாய்மார்களும் தனக்கு உள்ள பிரச்னைகளை கணவனிடமோ, தன் தாயிடமோ மற்றவர்களிடமோ மனம்விட்டு பேசி தன்னை சரிப்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும். இவர்களின் மனநிலை இயல்புக்கு மாறாக மிக மோசமாக இருப்பதாக குடும்பத்தினர் உணர்ந்தால் தயங்காமல் வழக்கமாக அவர்கள் காண்பிக்கும் மகளிர்நல மருத்துவரிடமோ அல்லது ஒரு மனநல நிபுணரிடமோ காண்பித்து அந்நிலையிலிருந்து அவர்கள் மீண்டு வர உதவ முன்வரவேண்டும்.

பிரசவத்திற்கு பிந்தைய மனநோய் (Postpartum psychosis)

ஆரம்பகால சிகிச்சை அளிக்காமல் கவனக்குறைவாக விடப்படும் பிரசவகால மனஅழுத்தப் பிரச்னை பல மாதங்களுக்கோ அல்லது அதற்கு மேற்பட்டும் தொடரக்கூடிய பிரச்னையாக இருக்குமானால் பிரசவத்திற்கு பிந்தைய மனநோய் (Postpartum psychosis) ஆக மாற வாய்ப்புள்ளது என்பதை குடும்பத்தார் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிரசவத்திற்கு பிந்தைய மனநோயின் அறிகுறிகள்

*மனக்குழப்பம் மற்றும் எதையோ இழந்த உணர்வு
*குழந்தையைப் பற்றிய அதீத கவலைகள்
*யாரோ தன்னை பின்தொடர்வது போல மாயத்தோற்றம் மற்றும் பிரமைகள்
*அதிகப்படியான சுறுசுறுப்பு அல்லது சோகம்
*சித்தப்பிரமை பிடித்ததுபோல் இருப்பது
*தன்னையோ அல்லது தன் குழந்தையையோ துன்புறுத்திக் கொள்ள முயல்வது.

இந்த மனநோயானது உயிருக்கு ஆபத்தான எண்ணங்கள் அல்லது நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இதற்கு உடனடி சிகிச்சை தேவை.

பிரசவத்திற்கு பிந்தைய மனப்பதட்டம் (Postpartum Anxiety)

குறிப்பாக தன்னுடைய முதல் பிரசவத்தை அனுபவிக்கும் தாய்மார்களில் 20 சதவீதம் பேருக்கு பிரசவத்திற்கு பிந்தைய மனப்பதட்டம் வருகிறது. முதல் பிரசவ தாய்க்கு, குழந்தையின் வளர்ச்சி, அதன் ஆரோக்கியத்தைப்பற்றிய அதிகமான கவலைகள் வருகிறது. இதுவே நாள் முழுக்க பதட்டத்தையும், இயல்பான வேலைகளை செய்யமுடியாமலும், தூக்கமில்லாமலும் சிரமப்படுபவர்களாக இருப்பார்களேயானால் கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேற்சொன்ன அனைத்து பிரசவத்திற்கு பிந்தைய மனநலப் பிரச்னைகளுக்கும் ஒரு தகுந்த மனநல நிபுணரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நான் இங்கு பதிவு செய்ய விரும்புவது என்னவென்றால், தாய்ப்பால் கொடுக்கும் தாயானவள், தான் மனநலப் பிரச்னைகளுக்காக மருந்துகள் உட்கொள்வதினால், தங்கள் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சுகிறார்கள். கண்டிப்பாக இந்த பயம் தேவையற்றது. மனநலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டோ, மருந்துகள் எடுத்துக் கொண்டோ குழந்தைக்கு தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கலாம். தங்களுடைய மனநலப் பிரச்னைகளை சகித்துக் கொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஏன் இதை குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால், ஒரு தாயானவள் தன் தாய்மையையும், அது கொடுக்கும் சந்தோஷத்தையும், அணு அணுவாக ரசிக்க வேண்டியவள். தன் சேயின் ஒவ்வொரு அசைவையும், நடவடிக்கையையும், வளர்ச்சிப் படிநிலையையும் ரசிக்கக்கூடிய நிலையில் இருக்கும் ஒரு தாய் தன் மனநலப் பிரச்னைகளுக்காக தன் வாழ்நாளில் பிறகு கிடைக்க இயலாத மகிழ்ச்சியை இழக்கக்கூடாது. ஒரு தாயின் மகிழ்ச்சியான மனநிலைதான் ஒரு குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தாய், தந்தையின் சந்தோஷமான அரவணைப்பில் வளரும் குழந்தையே எதிர்காலத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருக்கும்.

கணவர், பெண்ணின் தாய் மற்ற உறுப்பினர்கள் என, குடும்பத்தில் உள்ள அனைவருமே, குழந்தை பிரசவித்த தாய்க்கு பக்க பலமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு போதிய உறக்கத்திற்கும் ஓய்விற்கும் நேரம் கொடுத்தும், ஆறுதலான வார்த்தைகளாலும் உதவ வேண்டும்.

அதே நேரத்தில், குழந்தை வளர்ப்பைப்பற்றிய சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் அதீத தகவல்களாலும் இளம் தாய்மார்கள் தங்களை குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. நம்பகமான மருத்துவர்களின் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பின்பற்றி குழந்தையை வளர்த்து ஒரு ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்குங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post எப்படி உட்கார வேண்டும்? (மருத்துவம்)
Next post சீரகம் அறிந்ததும் – அறியாததும்!! (மருத்துவம்)