எல்லை தாண்டும் பயங்கரவாதம்!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தைத் தாண்டி ஓர் உறவு உருவாகும் உளவியல் பின்னணி என்ன? இதுபோன்ற உறவுகள் தவறுதான் என்று சுட்டிக்காட்டப்பட்டாலும் ஆண்களும் பெண்களும் இதில் விழவே செய்கிறார்களே… அது ஏன்? மன உளைச்சல், விவாகரத்து, திக்கற்று நிற்கும் குழந்தைகள் என எத்தனையோ மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் இந்த பிரச்னைக்குத் தீர்வே இல்லையா? பலருடைய மனதிலும் அலைபாயும் மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில் காணும் முயற்சியாகவே இந்த அத்தியாயத்தைப் பயன்படுத்திக் கொள்வோம்…
எப்போது வெடிக்கும் பிரச்னை?
பெரும்பாலும் ஒரு கணவன் அல்லது மனைவியின் முறையற்ற உறவு, அவரது துணைக்குத் தெரிவதற்கு முன்பே மற்றவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. ஆரம்பத்தில் துணைக்கு இலைமறை காயாகவும் ஜாடைமாடையாகவும் சுட்டிக்காட்டப்பட்டாலும் ஏதேனும் ஒரு தருணத்தில் இதற்குமேல் பொறுக்க முடியாது என்ற சூழ்நிலையிலேயே பிரச்னை வெடிக்கிறது. இல்லை எனில் நெருங்கிய உறவினர்கள் நேரடியாக விஷயத்தை சம்மந்தப்பட்டவரிடமே போட்டு உடைப்பார்கள். இல்லாவிட்டால் அந்த கள்ளக்காதலன்/காதலியையே நேரடியாக வீடு தேடி வந்து பிரச்னை செய்வார்கள்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படும் துணையின் அவஸ்தையை வேதனையை, அவமானத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது. எப்படி என்னை ஏமாற்றலாம்? எப்பேர்ப்பட்ட துரோகம் இது என்று அதிர்ச்சி அடைவார். கோபம், பொறாமை, வலி, வெறுப்பு என்று பல உணர்ச்சி கட்டங்களை தாண்டி தனது துணையை எல்லா வகையிலும் எதிர்க்கத் துணிவர். இறுதியில் பிரச்னை நீதிமன்றம் வந்து நிற்கிறது.
என்ன காரணம் சொல்கிறார்கள்?
ஆண்களைப் பொறுத்தவரை அவர்களிடம் துருவி கேட்ட வகையில் தன் மனைவியை மனதார நேசிப்பதாகவும், கள்ளத்தொடர்பு என்பது கூடுதல் உணர்ச்சிகளுக்கு வடிகாலாக அமைகிறது என்றும் அப்பாவித்தனமாக(!) கூறுகிறார்கள். சில கணவர்களோ ‘எனக்கு அவளையும் பிடிக்கும்; இவளையும் பிடிக்கும்’ என்கிறார்கள். இதைவிட இன்னும் கொடுமை, சிலர் சொல்வது -‘ஒரு சேஞ்சுக்குத்தான் சார்…’ என்பார்கள்.
என்ன ஒரு திமிர் இது?!
பெண்களைப் பொறுத்தவரை, செக்ஸில் திருப்தியின்மையை மட்டுமே பிரதான காரணமாக சொல்கிறார்கள். அதேசமயம் 40 வயதின் தொடக்கங்களில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற பிரச்னைக்கு அதிகமாக ஆளாவதை பார்க்கிறோம். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. அப்போது அவரது கணவர் 40-களின் இறுதியில் இருப்பார். தொழில் மற்றும் சம்பாத்தியத்தில் அவர் மும்முரமாக இருக்கும் காலகட்டம் அது. பெண்ணுக்கோ மாதவிடாய் நிற்கும் ‘மெனோபாஸ்’ காலகட்டம் இது. பலத்த உணர்ச்சி குழப்பங்களுக்கு ஆளாகும் காலமும் இதுதான். இதுபோன்ற குழப்பங்களும் கள்ளக்காதலில் விழச் செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்திவிடுகிறது.
கள்ளக்காதல் எத்தனை வகை?
ஒன்றிரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டபிறகு தாய்மையின் பரவசத்தில் மனைவி திளைத்திருப்பார். இந்த கால கட்டத்தில்தான் செக்ஸ் ரீதியாக வடிகால் தேடி கணவன் வெளியே போகிறான். குறிப்பாக, குழந்தை பிறப்புக்காக மனைவி புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது இதுபோன்ற சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன. கணவன் அல்லது மனைவிகளின் அதிகப்படியான பற்றுதலும் துணைகள் வெளியே போவதற்கான காரணமாக சில நேரங்களில் அமைந்துவிடுகிறது. அன்புக்கும், பாசத்துக்கும்கூட எல்லை உண்டு. திகட்டத் திகட்ட துணையை கவனித்து அனைத்து நேரமும், அனைத்து சூழ்நிலையிலும் அவர் தன்னுடன்தான் இருக்க வேண்டும்; தான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்.
அவர் முழுக்க முழுக்க எனக்கு மட்டும்தான் என்கிற ஆக்கிரமிப்பான அன்பின் வெறித்தனமான வெளிப்பாடும் உறவுகளை சிறைபோல உணரச் செய்துவிடும். இப்போது இயல்பாகவே சிறையிலிருந்து தப்பிக்க நினைக்கும் உணர்வே இன்னொரு முறையற்ற உறவுக்கு வித்திடுகிறது. இப்படியே வெளியே கிடைக்கும் அந்த முறையற்ற உறவு பேரழகியாக/பேரழகனாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அங்கே உருவ மதிப்பீட்டுக்கு பெரும்பாலும் இடம் இல்லை. ஆரம்பத்தில் பேச்சுத் துணைக்கு என்று ஆரம்பித்து அதுவே முறையற்ற உறவில் சென்று முடியும். அதாவது, ஒரு நூலிழையின் தவறுதலில் பிறக்கும் உறவு அது. சில சமயங்களில் மேற்படி கள்ளக்காதலில் சிக்குபவர்கள் தனிமையில் வசிப்பவர்களாக இருக்கலாம்.
அவருடைய துணையிடமிருந்து போதுமான அரவணைப்பு கிடைக்காதவராக இருக்கலாம். அதேசமயம் இந்த இணைப்பானது, எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்ற நிச்சயமற்ற உறவாகவே பெரும்பாலும் இருக்கிறது. சரியான தருணம் வரும்போது இரட்டைக் குதிரை சவாரி சலித்துப்போய் மேற்கொண்டு அதை கொண்டு செல்ல இயலாத சூழ்நிலையில், கள்ளக்காதலுக்கு குட்பை சொல்லிவிட்டு தன் குடும்பத்துடன் நிரந்தரமாக ஐக்கியமாகும் வகையினரும் இருக்கிறார்கள். ஒருவர் இதுபோல், திடீர் முடிவு எடுக்கும் சூழலில் கைவிடப்பட்ட அந்த முன்னாள் கள்ளத் துணை கடுமையாக பாதிக்கப்படுகிறார்.
முறையற்ற உறவுக்கு உளவியல் சொல்லும் தீர்வுகள்
செக்ஸில் திருப்தியின்மை
பெரும்பாலானோர் சொல்லும் காரணம் இது. தாம்பத்திய உறவில் கணவனோ, மனைவியோ பரஸ்பரம் திருப்தியடையாத நிலை தொடர்ந்து வருடக்கணக்காக நீடித்தால் வேறு துணை தேட விழைகின்றனர். திருமணமான ஆரம்பத்தில் தீவிரமாக இருப்பவர்கள், கொஞ்ச நாட்களில் சம்பாத்தியத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை தாம்பத்திய உறவுக்குக் கொடுப்பதில்லை. பசி, தூக்கம்போல செக்ஸும் ஓர் அடிப்படைத் தேவை என்பதை பலரும் புரிந்துகொள்வதில்லை.
தம்பதிகளிடையே ஏற்படும் பெரும்பாலான உளவியல் பிரச்னைகளின் ஆணிவேரைப் பார்த்தால் போதுமான தாம்பத்திய உறவு இல்லாததே முக்கியக் காரணமாகத் தெரிய வரும்.
தீர்வு
செக்ஸில் கணக்கு வழக்கு எல்லாம் கிடையாது. அதிகம் முறை செக்ஸ் வைத்துக்கொண்டால் உடல் நலம் கெடும் என்பது தவறான கருத்து. தனது துணை
யுடன் மேற்கொள்ளும் ஆரோக்கியமான உறவினால் ஏற்படும் புத்துணர்ச்சி வேறு எதிலும் கிடைக்காது. தினமும் என்று இல்லாவிட்டாலும் வாரத்துக்கு இருமுறை உறவு வைத்துக்கொள்ளலாம் என்பது உசிதம்.
உணர்வுப்பூர்வமான பற்றுதல் இல்லாமை
துணையுடன் வெறுமனே வசித்தல் நிலை எனக் கொள்ளலாம். ஆதரவாக ஒரு வார்த்தை பேசுவதில்லை. வாழ்வின் நளினமாக நேரங்களை இணையுடன் சேர்ந்து ரசிக்க தவறுவது. வேலை முடிந்து வந்தால் களைப்பு, தூக்கம் என்று காலங்கள் கழிவது. இந்த இடத்தில் மூன்றாம் நபர் உள்ளே புகுந்தால் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்.
தீர்வு
தாம்பத்திய உறவை படிப்படியாக, அணுஅணுவாக ரசித்து ஈடுபட வேண்டும். காமத்தின்போது முன் விளையாட்டு எனப்படும் ‘ஃபோர்ப்ளேயை பலரும் பின்பற்றுவதில்லை. இன்றும் அநேக பெண்களுக்கு ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலை என்ன என்பதே தெரியாமல் இருப்பது ஆணின் அலட்சியமே. பெண்
களின் காமத்தை உணர்ந்து புரிந்து, மெல்ல மெல்ல இன்பத்தின் இறகுகளை வருடி அவர்களை இன்பத்தின் உச்ச நிலைக்கு கொண்டு செல்லுதல் என்பது ஒரு கணவனைப் பொறுத்தவரை கடமை என்றே சொல்லலாம்.
பழி வாங்குதல்
‘எனது துணை தவறிழைத்தார். அதனால் அவரை பழிதீர்க்கிறேன்’ என்று கணவன்/ மனைவி இருவருமே தவறான வழியில் செல்வதும் உண்டு.
தீர்வு
வஞ்சகம், குரோதம் என்கிற அழுக்கு மூட்டையை சுமந்துகொண்டு மலை ஏறுவதற்கு சமம் இது. அழுக்கு மூட்டையை தூர தூக்கி எறியுங்கள். தவறுவது மனித இயல்பு. மன்னிப்பே தெய்வ குணம்.
கண்டதும் காதல்
‘பார்க்கும் பெண்களை எல்லாம் காதலிக்கும் ரகத்தினர் இருக்கிறார்கள். இவர்களின் இளம் வயது காதல் தீவிரம் எப்போதும் குறையவே செய்யாது.
எப்போதும் ரொமான்ஸ் மூடிலேயேதிரிவார்கள். அழகான பெண்ணை/ஆணைப் பார்த்ததும் ‘கண்டேன் காதலை’ என்பார்கள். திருமணமே ஆனாலும் இன்னொருவரை காதலிப்பதில் சுய ஆட்சேபணை இவர்களிடம் இருப்பதில்லை. இப்படியாக இரண்டாவது, மூன்றாவது என சங்கிலித் தொடர் தொடர்புகளை சட்டப்பூர்வமாக்கிக்கொள்பவர்களும் உண்டு. கேட்டால் அதற்கும் ஒரு வியாக்கியானம் சொல்வார்கள்.
தீர்வு
உங்கள் இடத்தில் உங்கள் துணையை நிலைநிறுத்திப் பாருங்கள். உங்கள் துணை இதனை செய்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்பதை சிந்தியுங்கள். இன்னொரு ரகத்தினர் இருக்கின்றனர். இவர்களுக்கு செக்ஸில் ஈடுபாடு அதிகம் எனலாம். எத்தனை துணை இருந்தாலும் அடுத்து என்ன என யோசிப்பார்கள்.
இவர்களுக்கு சரியான உளவியல் ஆலோசனை நிச்சயம் தேவை.
சமூக வலைதளங்கள்
சமூக வலைத்தளங்களின் ஆக்கிரமிப்பு சாதாரண குறுந்தகவலில் தொடங்கி கள்ளக்காதலில் முடிகின்றன. இன்னொன்று, கள்ளக்காதல் எல்லாம் சகஜமப்பா
என்கிற ரீதியில் செய்தித்தாள்களில் அன்றாடம் செய்திகள் குவிகின்றன. அப்படி எனில் இதெல்லாம் சாதாரணம் என்று எடுத்துக்கொள்பவர்களும் உண்டு. யார்தான் தவறு செய்யவில்லை; ஊர், உலகில் நடக்காததா? நாமும் செய்தால் என்ன? என்கிற உளரீதியான, தவறாக கற்பிதம் செய்து கொள்ளும் மனநிலையை இப்படியான செய்திகள் ஏற்படுத்தி விடுகின்றன.
தீர்வு
இணைய வழி தொடர்புகளில் கட்டுப்பாடுகள் தேவை. பொதுவாக புதிய ஆட்களிடம் பழகும்போது எச்சரிக்கை தேவை. வார்த்தைகள் சற்றே எல்லை மீறும்போது உடனடியாக அங்கே ஒரு பிரேக் போட்டுவிடுங்கள். தேவைக்கு மட்டும் இணையத்தை பயன்படுத்துங்கள். ஓய்வு நேரங்களை செலவிட குழந்தைகள், புத்தகங்கள் என ஏராளமான வழிகள் உண்டு. இவை தவிர கள்ளக்காதலால் ஏற்படும் தொடர் மன அழுத்தங்கள் நமது வாழ்வியலை பாதித்து நோய்களுக்கும் தள்ளுகின்றன.
மன அழுத்தத்தால் ஏற்படும் சர்க்கரை நோய், விரக்தியால் மது மற்றும் பிற போதை பழக்கங்களுக்கு அடிமையாதல், முறையற்ற உணவு பழக்கங்கள் – இதனால் உடல் நலக்குறைவுக்கு உள்ளாதல் என பிரச்னைகள் நீள்கின்றன. எல்லாவற்றையும்விட கள்ளக்காதல் கொலை உள்ளிட்ட பெரும் வன்முறை
களையும் உருவாக்குகின்றன என்பதையும் நினைவில் நிறுத்துங்கள்.