தன்னைத்தானே சரிசெய்து உயிர்த்தெழும் கல்லீரல்! (மருத்துவம்)

Read Time:13 Minute, 8 Second

சமீபகாலமாக, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக மக்கள் பல்வேறுவிதமான நோய்களுக்கு ஆளாகிவருகிறார்கள். அவற்றில் கல்லீரல் சார்ந்த பிரச்னைகளும் ஒன்றாகும். நோய் எதிர்ப்புசக்தி, வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை சேமித்தல் தொடர்பான பல முக்கிய பணிகளை கல்லீரல் மேற்கொள்கிறது.

இந்த நிலையில் கல்லீரலை முறையாக பராமரிக்காவிட்டால், அது பாதிப்படைந்து ஒருகட்டத்தில் கெட்டுப்போய்விடுகிறது. இந்நிலையில்தான் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. அந்தவகையில், கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை குறித்தும், கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை சிறப்பு மருத்துவர் மெட்டு னிவாச ரெட்டி.

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை என்றால் என்ன… எந்த சூழலில் மாற்று தேவைப்படுகிறது..பொதுவாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை உலகளவில் 50 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை கடந்த 15 ஆண்டுகளாகத்தான் செய்யப்படுகிறது. அதே சமயம், இந்தியாவில் உள்ள தேர்ந்த சிகிச்சை முறையால், தற்போது, இந்தியா கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் உலகிலேயே 3 -ஆவது இடத்தில் உள்ளது.

முன்பெல்லாம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தால், நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்குத்தான் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், தற்போது அந்த நிலைமாறி, வெளிநாட்டவர்கள் இந்தியா வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அந்தளவிற்கு நாம் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் முன்னேறியிருக்கிறோம்.கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிப்பது என்பது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானதாகும்.

ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்குதல், ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மருந்துகளை வளர்சிதை மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், மது அருந்துதல், ஹெபடைடிஸ் ஏ, பி மற்றும் சி போன்ற வைரஸ் தொற்றுகளாலும் கல்லீரல் பாதிப்படைகிறது. கடந்த பத்து ஆண்டுகளின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மது அருந்துவதனால் ஏற்படும் கல்லீரலில் பாதிப்பே அதிகமாக உள்ளது.

பொதுவாக, கல்லீரல் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அது தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் ஆற்றல் உடையது. அதையும் தாண்டி மேலும்,மேலும் கல்லீரலுக்கு பிரச்னை வரும்போது, அது பழுதடைந்து கெட்டுவிடுகிறது. அப்படி ஒருவருக்கு கல்லீரல் கெட்டுப் போய்விட்டால், அது அவரது உயிருக்கே ஆபத்தாகிவிடும். இந்தக் கட்டத்தில்தான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

கல்லீரல் கெட்டுப்போனால் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்…

கல்லீரல் கெட்டுப் போனால் மஞ்சள் காமாலை,, கால் வீக்கமடைதல், ரத்த வாந்தி எடுத்தல், ஞாபக மறதி , குழப்பநிலை போன்றவை அறிகுறிகளாக தென்
படும். ஆனால், இதில் என்ன பிரச்னை என்றால், கல்லீரல் தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் ஆற்றல் உடையது என்பதால், ஒருவருக்கு நோய்முற்றும் வரை அதன் அறிகுறிகளே தெரியாது. இதில் இன்னொரு வகை உள்ளது, அது, ஹெக்யூட் கல்லீரல் பெயிலியர். அதாவது ஏதாவது தொற்றினாலோ அல்லது அதிக பவர் உள்ள மருந்து மாத்திரைகளை உட்கொள்வதனால் அல்லது விஷம் அருந்துதல் போன்றவற்றால் ஏற்படுவது. இது உடனடியாக கல்லீரலை முழுமையாக பாதித்துவிடும்.

ஓரிரு நாளிலேயே இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். மற்றவர்களுக்கு பத்து, பதினைந்து வருடமாக சிறிது சிறிதாக பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் முழுமையாக பாதிப்படைந்துவிடும்.

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை குறித்து…

நமது உடலில் உள்ள மற்ற அனைத்து உறுப்புகளுடன் ஒப்பிட்டால், கல்லீரல் வேகமாக வளரும் தன்மை கொண்டது. அதனால், அதற்கு தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் ஆற்றல் அதிகமாக உள்ளது. உதாரணமாக, ஒருவருக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளும்போது, கல்லீரலை தானமாக அளிப்பவர், அவரது உடலில் இருந்து பாதியளவு கல்லீரை தானமாக வழங்கினார் என்றால், அவருக்கு மீண்டும் நான்கே வாரத்தில் கல்லீரல் முழுமையாக வளர்ந்து பழைய நிலைக்கு வந்துவிடும். அதாவது, உதாரணமாக 1கிலோ எடையுள்ள கல்லீரலில் அரை கிலோ அளவு வெட்டி எடுத்துவிட்டாலும், கல்லீரல் மீண்டும் வளர்ந்து 1 கிலோ எடைக்கு வந்துவிடும்.

அதேபோன்று தானம் பெற்றவருக்கும் வளர்ந்து முழுமையான நிலைக்கு வந்துவிடும். ஆனால், அவர் ஆறுமாதங்கள் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அறுவை சிகிச்சை முடிந்த 2 வாரங்களில் அவரது உடல் தேறிவிடும். ஆனால் கல்லீரலின் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும். ஏனென்றால், அவரது உடல் அந்த மாற்று உறுப்பு தனது சொந்த உறுப்பு இல்லை என்பதால் ஏற்றுக் கொள்ள மறுக்கும். எனவே, அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்த உடனேயே ஆன்டி ரிஜெக்ஷன் மருந்துகளை கொடுத்துதான் மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்ள வைப்போம்.

அதற்குதான் 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும். அதற்குள் கல்லீரல் முழுமையாக வளர்ந்துவிடும். அதன்பின் அவருக்கு, அவர் உயிரோடு வாழும் காலம்வரை எந்த பிரச்னையும் ஏற்படாது. அதற்கு தகுந்தவாறு அவர் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவேண்டும். உதாரணமாக, சமீபத்தில் 4 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தோம். அந்த குழந்தையுடைய தந்தையின் கல்லீரலில் இருந்து சிறிதளவே எடுத்து பொருத்தியுள்ளோம். ஆனால், அந்த குழந்தை வளர வளர கல்லீரலும் வளர்ந்து தேவையான வளர்ச்சியை அடைந்துவிடும். அந்த குழந்தை 70 வயது வாழ்ந்தாலும் அதற்கு கல்லீரல் நன்றாகவே வேலை செய்யும்.

தற்காத்துக்கொள்ளும் வழிகள்…

தற்போது அதிகமாக காணப்படும் கல்லீரல் பிரச்னை என்றால் அது ஃபேட்டி லீவர் பிரச்னைதான். அதற்கு, அதிக பருமனை குறைத்து கட்டுக்குள் கொண்டு வந்தால் ஃபேட்டி லீவர் நன்றாக கன்ட்ரோலாகும். அதற்கு, உடல் உழைப்பு, ஆரோக்கிய உணவு முறை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

ரசாயனம் நிறைந்த இடங்களில் பணிபுரியும்போது பாதுகாப்பான உடைகளை அணிந்துகொள்ள வேண்டும் புகை பிடித்தல் மற்றும் புகை பிடிக்கும் இடங்களில் இருப்பதை தவிர்த்தல் சுத்தமான தண்ணீரை குடித்தல் ஜாகிங் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். ஹெபடைடிஸ் ஏ, பி மற்றும் சி போன்ற வைரஸ் தொற்றுகள் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க.. தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்கிய மகள்!

கேரளம் மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் பிஜி பிரதீஷ். 48 வயதான இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சிகிச்சை பெற்று வந்த எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள, ராஜகிரி மருத்துவனை மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் இல்லை என்றால் அவர் உயிருக்கே ஆபத்து என்று அறிவுறுத்தினர். இதையடுத்து, குடும்பத்தினரும், மருத்துவ நிர்வாகமும் கல்லீரல் தானம் குறித்து விசாரித்து வந்தனர்.

ஆனால், பிரதீஷிற்கு தகுந்த நன்கொடையாளர் கிடைக்கவில்லை.மேலும் வறுமை மற்றும் மருத்துவச் செலவு அதிகரிக்கும் என்பதால் அவரது குடும்பத்தினர் பரிதவித்தனர். அப்போது அவரது 17 வயது மகள் தேவானந்தா தனது தந்தைக்கு கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க முடிவு செய்தார். எனினும் அதில் ஒரு சிக்கல் இருந்தது.அதாவது இந்திய உடல் உறுப்பு தான சட்டத்தின்படி, 18 வயது நிரம்பியவர்கள் மட்டும்தான் உடல் உறுப்பு தானம் செய்ய முடியும்.

தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என துடித்த தேவானந்தா, கேரள உயர் நீதிமன்றத்தில் இதற்காக அனுமதி வேண்டி மனுதாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி அளித்ததோடு, தேவானந்தா நடத்திய இடைவிடாத போராட்டம் வெற்றியடைந்துள்ளது என பாராட்டியுள்ளது.

அதன் அடிப்படையில், கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி, பிரதீஷ்க்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. தற்போது தந்தை மற்றும் மகள் இருவரும் உடல்நலம் தேறிவருகின்றனர். தேவானந்தாவின் செயலைப் பாராட்டி மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை செலவுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது.

இதன்மூலம், நாட்டிலேயே மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை தேவானந்தா பெற்றுள்ளார்.மகள் தந்தைக்கு கல்லீரலைத் தானமாக வழங்கி, அவருடைய உயிரைக் காப்பாற்றியிருப்பது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மாதவிடாய் சீராக உதவும் மலைவேம்பு!! (மருத்துவம்)
Next post காமம் என்பது என்ன? (அவ்வப்போது கிளாமர்)