மனம் கோணும் மெனோபாஸ் பிரச்னைகள்…!! (மருத்துவம்)
தளராமல் தாண்ட என்ன வழி?
நாற்பத்து ஐந்து வயதைக் கடந்த பெண்மணி ஒருவர் முதுகு வலிக்காக என்னிடம் மருத்துவம் பார்க்க வந்திருந்தார். அவரின் வலிக்கு உரிய மருத்துவம் வழங்கிய பின்னர் அவரிடம் பேசுகையில்தான் தெரிந்தது அவர் மெனோபாஸ் நேரத்தில் இருக்கிறார் என்று. அதனால், வேலை செய்யும் இடத்தில் டென்ஷன், வீட்டில் கோபம், விரக்தி, சரியாக உண்பதில்லை, தைராய்டு மாத்திரைகளை முறையாக எடுத்துக்கொள்வதில்லை என உடல் சார்ந்த பிரச்னைகள் தாண்டி மனம் சார்ந்தும் தன்னை அறியாமலே பெரிதும் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு மெனோபாஸ் பற்றி முழுவதும் எடுத்துரைத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறினேன்.
இவர் மட்டுமல்ல… இவரைப் போன்ற பல பெண்கள் இன்றைக்கு நாற்பதைக் கடந்தவுடன் போதிய விழிப்புணர்வு இல்லாமல் தத்தளிப்பதை பார்க்க முடிகிறது. அவர்களுக்காகவே இந்தக் கட்டுரை.
மெனோபாஸ் என்பது…
பெண்கள் பூப்படைந்தது முதல் ஒவ்வொரு மாதமும் ஒன்று அல்லது இரண்டு எனக் கருமுட்டைகள் வளர்ந்து வெளிவரும். அது விந்தணுக்களுடன் சேரவில்லை எனில் மாதவிடாயாகவும், சேர்ந்தால் கருவாகவும் உருவாகும். அதுவே, நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு என்றால் கருமுட்டைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து, ஒரு சமயத்தில் முற்றிலும் தீர்ந்துவிடும். இதனால் மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்றுவிடும். இதையே மெனோபாஸ் என்கிறோம்.
பொதுவாக மெனோபாஸ் என்பது 45 வயது முதல் 55 வயதுக்குள் நிகழவேண்டும். இதுவே இயற்கை. ஆனால், இன்றைய ஆரோக்கியமற்ற உலகத்தில் இது மாறி 35 வயதிலேயும் நிகழ ஆரம்பிக்கிறது பல பெண்களுக்கு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஹார்மோன் மாற்றங்கள்…
நாம் சிரிப்பது, அழுவது, கோபப்படுவதுஅதிகம் உண்பது எனப் பல உணர்வுகளுக்கு ஹார்மோன்களின் பங்கு மிக முக்கியமானது.அதிலும் குறிப்பாக, கருப்பை சார்ந்த ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜஸ்ட்ரான் போன்ற ஹார்மோன்கள் சரியான அளவில் சரியான நேரத்தில் சுரக்க வேண்டும். இல்லையெனில் மாதவிடாய் தள்ளிப்போவது, வராமல் இருப்பது, பி.சி.ஓ.டி, கருத்தரிக்க சிரமப்படுவது, கருவை தக்கவைத்து வளர்ப்பதில் சிக்கல் என ஒட்டுமொத்த இயற்கை செயல்களும் பாதிக்கப்படும். இவை எல்லாம் இல்லாமல் இயற்கையிலேயே மெனோபாஸ் நேரத்தில் ஹார்மோன் உற்பத்தி சுழற்சியில் மாறுபடும் என்பதால் உடல் மற்றும் மன அளவிலும் மாற்றங்கள் ஏற்படும்.
என்னென்ன அறிகுறிகள்…?
* மாதவிடாய் சுழற்சியில் மாறுதல் ஏற்படுவது (உதாரணமாக, உதிரப்போக்கு குறைவாவது, அதிகமாவது அல்லது விட்டுவிட்டு வருவது என ஒவ்வொருவருக்கும் மாறுபடும்).
* மிகுந்த கோபம், விரக்தி, படபடப்பு உண்டாவது.
* உடல் வலி அதிகமாய் தெரிவது.
* ஞாபக மறதி மற்றும் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது.
* சுண்ணாம்புச் சத்து குறைபாட்டினால் எலும்புகள் பலவீனம் ஆவது.
* அடிக்கடி தோன்றும் உடல் மற்றும் மனச்சோர்வு.
* ஏ.சி அறையில் இருந்தாலும் திடீரென வேர்ப்பது மற்றும் உடல் வெப்பம் அதிகரிப்பது.
* உடல் எடை மிகுதியாவது.
* முடி உதிர்வு.
* தைராய்டு ஹார்மோன் சுரப்பில் மாற்றம் உண்டாவது.
* பசியின்மை மற்றும் சில நேரங்கள் துரித உணவுகள் மீதான நாட்டம் (Cravings) அதிகரிப்பது.
தீர்வுகள்…
பெண்கள் கருத்தரிப்பதை வேண்டுமானால் தவிர்க்கலாமே தவிர, பூப்படைவதையும், மாதவிடாய் சுழற்சி நிற்பதையும் ஒருபோதும் தடுக்க முடியாது. ஆனால், இதனால் வரக்கூடிய
அறிகுறிகளுக்கு தீர்வு காணலாம்.
இயன்முறை மருத்துவம்
* தினசரி உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்.
* தசைகளை உறுதி செய்ய, உடம்பு இறுக்கமாக இல்லாமல் இலகுவாக மாறுவதற்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் (Stretching Exercises), இதயத்தின் தாங்கும் ஆற்றல் (Cardiac Endurance) அதிகரிக்க உதவும் பயிற்சிகள் என சில வகையானப் பயிற்சிகளை இயன்முறை மருத்துவர் பரிந்துரைத்து கற்றும் கொடுப்பர்.
* யூடியூப், டிவி பார்த்து உடற்பயிற்சிகள் செய்தால் பக்கவிளைவுகள், பாதிப்புகள் ஏற்படலாம். எவ்வளவு எடை, எத்தனை முறை ஒரு பயிற்சியை செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரது உடல் நிலை பொருத்து இயன்முறை மருத்துவர் முடிவு செய்வார்.
* மேலும் அதிக எடை தூக்கும் பயிற்சிகள், நீண்ட நேரம் பயிற்சி செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் மேலே சொன்னவாறு ஹார்மோன் மாறுதல்களால் எலும்புகள் பலவீனமாய் இருக்கும் என்பதால் அளவோடு செய்யும் உடற்பயிற்சிகளே பலன் கொடுக்கும்.
* உயரத்திற்கேற்ற உடல் எடையே நல் ஆரோக்கியத்திற்கான வெளிப்பாடு என்பதால், தொடர்ந்து இயன்முறை மருத்துவரின் ஆலோசனைப்படி உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
வேறு சில தீர்வுகள்
* உடற்பயிற்சி தவிர்த்து யோகா, நீச்சல் பயிற்சி, நடனப் பயிற்சி என தங்களுக்குப் பிடித்தவாறு தேர்வு செய்து கொள்ளலாம்.
* சரியான உணவுகள் எடுத்துக்கொள்வது மிக முக்கியம் என்பதால், உரிய உணவு நிபுணரிடம் ஆலோசனை பெற்று அதன்படி உணவுகளை சாப்பிடலாம்.
* பொதுவாக காய்கள், பழங்கள், பருப்பு வகைகள் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. அதேநேரம் பேக் செய்யப்பட்ட உணவுகளையும், துரித உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் கலக்கும் கெமிக்கல்கள் ஹார்மோன்களின் சுழற்சியை நேரடியாக பாதிக்கும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் தயாரிக்கும் உணவுகள்தான் எப்போதும் சிறந்தது.
* அலுவலக வேலை, வீட்டு வேலை தாண்டி வேறு ஏதேனும் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டால் மன அழுத்தம், கோபம் போன்றவற்றை தவிர்க்கலாம்.
* எட்டு மணி நேரத் தூக்கத்தை ஆரம்பம் முதலே கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். தூக்க நேரத்தில் மாறுதல் ஏற்பட்டாலும் அவை உணவு மற்றும் மனம் சார்ந்த மாற்றங்களை (Mood swings) உண்டுபண்ணும்.
* வீட்டில் உள்ளவர்கள் மெனோபாஸ் நேரத்தில் பெண்களின் உடல் மற்றும் மன நிலையை புரிந்துகொண்டு அனுசரித்து, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
* சில பெண்களுக்கு தைராய்டு பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை ஏற்கனவே இருந்தால், அவற்றை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
* பெரும்பாலான பெண்களுக்கு இந்த நேரத்தில் ரத்தசோகை ஏற்படும் என்பதால், தினமும் இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்வது மிக நல்லது.
* நாள்தோறும் குறைந்தது இருபது நிமிடங்கள் முதுகு, கை, கால்கள் நேரடியாக வெயிலில் படுமாறு நடக்க வேண்டும்.
* அறிகுறிகள் அதிகமாக இருந்தால் சில நேரங்களில் மகப்பேறு மருத்துவர்கள் ஹார்மோன் மாத்திரைகள் வழங்குவார்கள். இதனால், மார்பகப் புற்றுநோய் போன்ற பக்கவிளைவுகள் வரக்கூடும். எனினும், அதன் பலன்கள் கருதி சில மாதங்களுக்கோ, சில வருடங்களுக்கோ பரிந்துரைப்பர்.
மொத்தத்தில், உடலின் அறிவியலை புரிந்துகொண்டு, அதற்கேற்ப நம் வாழ்வியல் வழக்கங்களை மாற்றிக் கொண்டாலே போதும், நாற்பதைக் கடந்தும் நாம் கெத்தாக வாழலாம்.
மெனோபாஸ் கஃபே…
ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி நோக்கி உலகம் சென்று கொண்டிருந்தாலும், பெண்களில் பலரும் பேசத் தயங்கும் விஷயமாக இன்னமும் மெனோபாஸ் இருந்து வருவது யாவரும் அறிந்ததே. அந்தக் குறையை போக்கும் விதமாக, பெண்கள் ஓரிடத்தில் கூடி அவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன மாறுபாட்டையும், சந்தேகங்களையும் பகிர்ந்துகொள்ள இங்கிலாந்து நாட்டில் ‘மெனோபாஸ் கஃபே’ என்ற பெயரில் ஒரு கஃபே அண்மைய ஆண்டுகளில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் பெண்கள் மட்டுமல்லாமல், பெண்களை புரிந்து நடந்துகொள்வதற்காக ஆண்களும் ஆர்வத்தோடு கலந்துகொள்கிறார்கள் என்பது இங்கே கூடுதல் சுவையான தகவல்.
தற்கொலை முயற்சி…
மெனோபாஸ் நேரத்தில் வரும் மன மாறுதல்களாலும், மனச் சோர்வினாலும் பல பெண்கள் தற்கொலை முயற்சிக்கு ஆளாவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் மன மாறுதல்களை வீட்டில் உள்ளவர்களும், சொந்த பந்தங்களும் சரிவர புரிந்துகொள்ளாததால் உறவுகளில் விரிசல் ஏற்படுவதும், குறிப்பாக குழந்தைகளோடு கருத்து வேறுபாடு ஏற்படுவதும், கணவருடன் விவாகரத்து வரை செல்லும் நிலையும் சில பெண்களுக்கு ஏற்படுகிறது.