மெனோபாஸ் அசௌகர்யங்களும் விளைவுகளும்!! (மருத்துவம்)

Read Time:7 Minute, 25 Second

நம்மில் பல பெண்களுக்கு, ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கிறது…. ஏன் மாதவிடாய் நிற்கிறது… அதனால் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்ற விவரங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை. அதே போல ‘மெனோபாஸ்’ என்றாலே, வியாதிகள் வரும் நேரம் என்றும் சிலர் பயந்து போவதுண்டு. இந்த பயங்களும் தேவையில்லை.

குழந்தை பருவம், டீன்ஏஜ் பருவம், குழந்தை பெற்றுக்கொள்ளும் பருவம் போல இதுவும் ஒரு பருவம். இந்தச் சமயங்களில் எதிலெதில் கவனமாக இருக்க வேண்டும்

மெனோபாஸ் என்றால் என்ன?

நாற்பத்தைந்து வயதுக்கு மேல், பெண்ணின் ஓவரியின் செயல்பாடு குறைந்து, பீரியட்ஸ் முறையற்றதாகி, கடைசியாக சுமார் ஐம்பது வயதில் பீரியட்ஸ் சுத்தமாக நின்று விடுவதற்குப் பெயர்தான் மெனோபாஸ். அதாவது மாதவிடாய் நின்றுவிடும் நிலைக்குப் பெயர்தான் மெனோபாஸ்.

மெனோபாஸ் ஏற்பட்டதற்குப் பிறகு கருத்தரிக்க முடியுமா?

மெனோபாஸிற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது. ஏனென்றால் கருத்தரிக்கத் தேவையான கருமுட்டையின் உற்பத்தி குறைந்துவிடும்.

எந்த வயதில் மெனோபாஸ் வரலாம்?

சாதாரணமாக ஐம்பது வயதைக் கடந்தாலே மெனோபாஸ் வந்துவிடும். சிலருக்கு முப்பத்தைந்து வயதுக்கு முன்னாலும்கூட மெனோபாஸ் வரலாம். அதற்கு ப்ரீமெச்சூர் மெனோபாஸ் (Premature Meno Pause) என்று பெயர்.

என்னென்ன காரணங்களால் ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வருகிறது?

ஓவரியில் ஏதேனும் கட்டி இருந்து, ஓவரியை ரிமூவ் பண்ணியிருந்தாலோ, கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்ற ட்ரீட்மென்ட் எடுத்தாலோ, இல்லையென்றால் வைரஸ் இன்ஃபெக்ஷனாலோ, ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வரலாம்.

அசௌகர்யங்கள் அதிக வியர்வை (ஹாட் ஃப்ளஷ்)

ஏ.சி.யில் இருக்கும்போதும் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வியர்த்துக் கொட்டும். இதை ஹாட் ஃப்ளஷ் என்போம்! மெனோபாஸ் அவர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியே இந்த வியர்வை எல்லாம்… நம் பாட்டி காலத்திலேயே நாற்பதைக் கடந்த பெண்களுக்கும் கூட இப்படித்தான் வியர்த்துக் கொட்டியிருக்கும்… இதில் சங்கடப்பட என்ன இருக்கிறது. பாட்டி காலத்தில், பெண்கள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, காற்றோட்டமாகத் திண்ணையில் அமர்வார்கள்.

அவர்களுக்கு, இது ஒரு பெரிய விஷயமாக இருக்காது! ஆனால் நாற்பதைக் கடந்த இன்றைய பல பெண்கள், அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வியர்த்துக் கொட்டினால் அத்தனை நன்றாக இருக்காது. ஆனால் இது போன்ற அசௌகர்யங்களே, மனத்தளவில் அவர்களுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. அதனால் அதிக வியர்வையால் பாதிக்கப்படும் பெண்கள் சிகிச்சைகூட எடுத்துக்கொள்ளலாம்.

இரவுநேரப் படபடப்பு (நைட் ஸ்வெட்ஸ்)

இரவில் திடீரென வியர்த்துக் கொட்டும். மிகவும் படபடப்போடு காணப் படுவார்கள். இதனால் அமைதியான தூக்கம் போய், ஒரு வித சோர்வுக்கு ஆளாவார்கள்.

அடிக்கடி மாறும் மூட் (மூட் ஸ்விங்ஸ்)

அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும்.வெஜைனா உலர்ந்து போதல் ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால், வெஜைனாவின் பாதையை வழுவழுப்பாக வைத்திருக்கும் சுரப்புகள் குறைய ஆரம்பிக்கும். அதனால் வெஜைனா உலர்ந்து போய், தாம்பத்திய உறவின் போது அசௌகர்யமும், வலியும் உண்டாகலாம். தவிர, வெஜைனா பாதையில் வழுவழுப்பு ஏற்படுத்தும் இந்த திரவம்தான், அந்தப் பகுதியின் மென்மையான திசுக்களில், இன்ஃபெக்ஷன் ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரஜன் குறைவால் இந்த சுரப்பும் குறையும்போது அங்கே இன்ஃபெக்சன் ஏற்பட ஏதுவாகிறது.

மெனோபாஸிற்குப் பிறகு வரும் நீண்ட கால விளைவுகள் என்னென்ன?

பல பெண்களுக்கு எலும்புகள் தேய்ந்து போகலாம்.. இதற்கு, ‘போஸ்ட் மெனோபாசுவல் ஆஸ்டியோ போரோஸிஸ்’ என்று பெயர்.உங்களுக்கு ஒன்று தெரியுமா? மெனோபாஸிற்குப் பிறகு, பெண்களின் எலும்புகள் தேய்மானமடைந்துவிடுவதால், லேசாக அவர்கள் தடுக்கி விழுந்தாலோ அல்லது குண்டுங் குழியுமான இடங்களில் ஆட்டோவில் சென்றாலோ கூட, எலும்புகள் உடைந்து ஃப்ராக்சர் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அதனால் எலும்புத் தேய்மானத்திற்கு அவர்கள் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டால், இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். எலும்புகள் தேய்மானம் அடைவதற்கு முன்பே, டாக்டரின் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்த்து விட முடியும் பெண்களின் பிரத்யேக ஹார்மோனான ஈஸ்ட்ரஜன், இருதய பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க ஒரு பாதுகாப்புக் கவசம் போல் செயல்பட்டு வந்தது. மெனோபாசுக்குப் பிறகு ஈஸ்ட்ரஜன் சுரப்பு நின்றுவிடுவதால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மெனோபாஸ் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சேலை கட்ட கத்துக்கலாமா? (மகளிர் பக்கம்)
Next post ஃபிட்னெஸ்-சித்தி இத்னானி!! (மருத்துவம்)