குடிநோய் உருவாக்கும் பாதிப்பு!! (மருத்துவம்)
ஓர் அலெர்ட் ரிப்போர்ட்!
கல்யாணம் என்றாலும் குடி, கருமாதி என்றாலும் குடி, வேலை கிடைத்தாலும் குடி, வேலை போனாலும் குடி… இப்படிக் குடித்துக் குடித்து, தமிழ்க்குடியே பெருங்குடிகாரக் கூட்டமாகி இருக்கிறது இன்று. ஊருக்கு ஒதுக்குப்புறமாக யாருக்கும் தெரியாமல் குடித்த காலம் மலையேறிவிட்டது. ஊருக்கு உள்ளேயே கோயில்களுக்கும் பள்ளிகளுக்கும் நடுநாயகமாக மதுக் கடைகள் வீற்றிருக்கின்றன. இதனால், டீன் ஏஜ் வயதினர் மட்டும் அல்ல, 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்கூட குடிக்கின்றனர். மது அருந்துவது ஒழுக்கக்கேடான செயல் என்ற நிலைபோய், குடிக்கவில்லை எனில் கிண்டல் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, 60 முதல் 70 சதவிகித ஆண்கள் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். மது அருந்துபவர்கள் எல்லோரையும் குடி நோயாளிகள், குடிக்கு அடிமையானவர்கள் எனச் சொல்ல முடியாது. எந்த நேரமும் குடி பற்றியே சிந்திப்பவர்கள், ஏற்கெனவே அதிகமாகக் குடித்தும், போதை ஏறவில்லை எனக் காரணம் சொல்லி, மீண்டும் மீண்டும் குடிப்பவர்கள், குடிப்பழக்கத்தால் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமுதாயத்தால் ஓரங்கட்டப்படுபவர்களை, `குடி நோயாளிகள்’ என வரையறுக்க முடியும். மது அருந்தினால் கல்லீரல் பாதிக்கப்படும் என்பது மட்டுமே பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், மதுவால் உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டுமே பாதிக்கப்படுவதோடு எண்ணற்ற நோய்களும் ஏற்படுகின்றன.
உடல்நலம் சார்ந்த பிரச்னைகள்
வயிற்றுப் புண்
மது அருந்தும்போது, அதில் உள்ள நச்சுக்கள் இரைப்பையை நேரடியாகத் தாக்கிப் புண்ணாக்கும். இதனால், ஒட்டுமொத்த செரிமான மண்டலமே பாதிக்கப்படும்.
கல்லீரல் வீக்கம் மற்றும் சுருக்கம்
ஒரு சிலர் மதுவை கடகடவென வேகமாகக் குடிப்பார்கள். அதிக அளவு மதுவை மிகக் குறைந்த நேரத்தில் அருந்துபவர்களுக்கு ஃபேட்டி லிவர் பிரச்னையும், அதிக அளவு மதுவை நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து அருந்துபவர்களுக்கு , கல்லீரல் சுருக்கம் (சிரோசிஸ்) பிரச்னையும் வரும். கல்லீரல் சுருக்கம் முற்றிய நிலையில், கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலை ஏற்படலாம்.
சர்க்கரை நோய் மற்றும் கணைய அழற்சி
ஆல்கஹால் கணையத்தில் இருக்கும் பீட்டா செல்களை அழிக்கும். இதனால், இன்சுலின் செயல்பாடு குறையும்போது, சர்க்கரை நோய் வரும். கணைய அழற்சி ஏற்படும்.
ஊட்டச்சத்துக் குறைபாடு
வைட்டமின்கள் கிரகிக்கப்படுவதை, ஆல்கஹால் தடுக்கிறது. தயமின் பற்றாக்குறை ஏற்படுவதால், மூளையில் இருக்கும் நரம்புகள் பாதிக்கப்பட்டு சிந்திக்கும் திறன் குறைதல், மறதி போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கப்படுவது, பாதிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், மது அருந்துபவர்களின் உணவுப் பழக்கம் ஆரோக்கியமாக இருக்காது என்பதால், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்படும்.
நரம்புத் தளர்ச்சி (Peripheral neuropathy)
நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டைப் பாதித்து, கை, கால்களில் ஒருவித மதமதப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும்.
தோல் நோய்கள் (Facial Erythema)
கண்களைச் சுற்றி எப்போதும் கருவளையம் இருக்கும். முகம் ஆங்காங்கே சிவந்து காணப்படும். சொரியாசிஸ் வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் மது அருந்தும்போது எளிதில் சொரியாசிஸ் வந்துவிடும். சொரியாசிஸ் சிறிய அளவில் இருந்தாலும், அதனை உடல் முழுவதும் பரவச் செய்யும் ஆற்றல் மதுவுக்கு உண்டு.
தசைகள் பாதிப்பு
தசைச் சுருக்கம், தசைவலி, தசைப்பிடிப்பு போன்றவை ஏற்படும். இதனால்தான் மது அருந்துபவர்களால் ஒழுங்காக எழுந்து நடக்கக்கூட முடிவது இல்லை.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம்
ஆல்கஹால் ரத்தக் குழாய்களைப் பாதிக்கும். இதனால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு, பக்கவாதம் வரலாம். மது, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
இதய நோய்கள்
ஆல்கஹால் இதயத் தசைகளையும் பாதிக்கும். இதனால், இதயச் செயல்திறன் பாதிக்கப்படும்.ஆல்கஹாலிக் கார்டியோமயோபதி எனும் இந்தப் பிரச்னையால் இதயச் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படலாம்.
ரத்தசோகை
ஆல்கஹால் ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களைக் குறைக்கும் ஆற்றல்கொண்டது. இதனால், ரத்தசோகை ஏற்படுகிறது. சிலருக்கு மயக்கம் ஏற்படும். மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.
மூட்டு நோய் (Gout)
ஆல்கஹால் ரத்தத்தில் யூரிக் அமிலத்தை அதிகரித்துவிடும். இதனால், மூட்டுகளில் ஏற்படும் பிரச்னையான கவுட் வரும். பாதத்தில், மூட்டு இணைப்புகளில் திடீரென கடுமையான வலி ஏற்படும்.
தொற்று நோய்கள்
ஆல்கஹால் உடலில் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் செயலிழக்கவைக்கும். இதனால், காசநோய், நிமோனியா, உடலுறவின் வழியாகப் பரவும் நோய்கள் எளிதில் தாக்க, ஆல்கஹால் முக்கியக் காரணம்.
புற்றுநோய்
ஆல்கஹாலில் அசிட்டால்டிஹைடு எனும் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணி இருக்கிறது. இதனால், உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல் புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
வலிப்பு நோய் (Seizer Disorder)
மூளையில் இருக்கும் நரம்புகளில் திடீரென மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்படும். ரம் குடிப்பதால் வலிப்புப் பிரச்னை வர வாய்ப்பு உள்ளது.
மனப் பிரச்னைகள்
தாம்பத்தியப் பிரச்னைகள்
மது அருந்தும்போது உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே தூண்டப்படும். ஆனால், உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியாது. தொடர்ந்து மது
அருந்தும்போது, விறைப்புத்தன்மைக் குறைவு, சீக்கிரம் விந்து வெளியேறுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மேலும், விந்தணுக்களின் தரமும் எண்ணிக்கையும் குறையும்.
மன ஊசலாட்டம் (Mood swings)
மது அருந்துவதால் மன அழுத்தம், தவறான எண்ண ஓட்டங்கள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை குறையும். இதனால், திடீரென பரபரப்பாகுதல், கோபப்படுதல், சோம்பலாக இருத்தல் போன்ற மன ஊசலாட்டங்கள் ஏற்படும்.
தீவிர மனநோய் (Psychosis syndrome)
ஹாலுசினேஷன் எனச் சொல்லப்படும் மனபிரமை, திடீரென ஏதாவது உருவம் கண்ணுக்குத் தெரிவது, டெலூஷன் எனப்படும் யாரோ தன்னை மறைவாகக் கவனிப்பது போன்ற உணர்வு, அடிக்க வருவது போன்ற உணர்வு, துரத்திக் கொலைசெய்ய வருவது போன்ற உணர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
மனப்பதற்றம் (Anxiety)
மனப்பதற்றம் அதிகரிக்கும். அடிக்கடி கோபம் வரும். சின்னச்சின்னப் பிரச்னைகளுக்குக்கூட எரிச்சல் அடைவார்கள். தனக்கு யாரும் இல்லையோ எனப் பதற்றம் வரும்.
நடத்தைக் குறைபாடு (Conduct Disorder)
அளவுக்கு அதிகமாக மது அருந்தும்போது திருடுவது, பொய் சொல்வது, கடுமையான ஆயுதங்களை எடுத்து வெறித்தனமாகத் தாக்குவது, சம்பந்தேமே இல்லாமல் தகராறில் ஈடுபடுவது போன்ற செயல்களைச் செய்வார்கள்.
நினைவுஇழத்தல் (Hang Over)
இரவில் மது குடித்துவிட்டு செய்யும் ரகளைகள், லூட்டிகள், வாக்குறுதிகள்… அனைத்தையும் மறந்துவிடுவார்கள். மறுநாள் காலை என்ன நடந்து என்றே சுத்தமாக நினைவு இருக்காது.
மயக்கம் (Withdrawal symptoms)
மது அருந்தாவிட்டால் அதீதமாகக் கை நடுங்கும். ஒரு நாள் குடிக்காவிட்டாலும் மயக்க நிலைக்குக்கூடச் சென்று விடுவார்கள். சிகிச்சை தராவிட்டால், நேரடியாக கோமாவுக்குச் சென்றுவிடுவார்கள்.
மது அருந்தும்போது என்ன நடக்கிறது?
மதுவில் அதிக அளவில் எத்தனால் உள்ளது. இதில் இருந்து அசிட்டால்டிஹைடு உருவாகும். மது அருந்தும்போது அசிட்டால்டிஹைடு ரத்தத்தில் கலந்து, மூளையில் இருக்கும் நியூரான்களைப் பாதிக்கிறது. நியூரான்கள் வழியாகத்தான் சிக்னல்கள் செல்லும். அசிட்டால்டிஹைடு முதலான நச்சுக்கள், நியூரான்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை நிரப்பி, ஒரு நியூரானுக்கும் மற்றொரு நியூரானுக்கும் இடையில் தகவல் பரிமாற்றத்தைப் பாதிக்கிறது. இதனால்தான், உளறுவது, பேசுவது புரியாமல் இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
சிகிச்சை என்ன?
மது அடிமையாக்கும் ஆற்றல்கொண்டது என்பதால், மூளையை மழுங்கடித்துவிடும். மதுவில் இருந்து மீள முதலில் தன்னம்பிக்கை அவசியம். வெறுமனே மாத்திரை மருந்துகளை மட்டும்வைத்து மது அருந்துபவர்களை மீட்க முடியாது. ஒருங்கிணைந்த சிகிச்சை அவசியம். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு முதலில் கல்லீரல் எவ்வளவு பாதிப்பு அடைந்திருக்கிறது என்பதைப் பரிசோதிக்க வேண்டும். டீடாக்ஸ் சிகிச்சைசெய்து கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுக்களை அகற்ற வேண்டும்.
பின்னர், மதுவிலிருந்து மீள்வதற்கான மாத்திரை, மருந்துகள் சாப்பிட வேண்டும். முதலில் மதுவால் பாதிக்கப்பட்டவருடன் மருத்துவர் தனியாக கவுன்சலிங் தருவார். பின்னர், அவரின் குடும்பத்தோடு சேர்த்து உட்காரவைத்து குடும்பத்துக்கு கவுன்சலிங் கொடுக்கப்படும். அதன் பின்னர் மதுவில் இருந்து மீண்டு வருபவர்களுடன் குரூப் கவுன்சலிங் கொடுக்கப்படும். இறுதியாக, மறுவாழ்வு சிகிச்சைகள் அளிக்கப்படும். மதுவில் இருந்து மீண்டுவிட்டால், மீண்டும் உடல் ஆரோக்கிய நிலைக்குத் திரும்ப ஆரம்பித்துவிடும். ஆர்வமும் தன்னம்பிக்கையும் இருந்தால், மது நோய்களை ஒழிப்பது எளிதே!