மனவெளிப் பயணம்!! (மருத்துவம்)
பாலினத் தேர்வைப் புரிவோம்… LGBTQ+ சில அறிதல்கள்!
காபி ஷாப்பில் உட்கார்ந்து இருந்த போது, சோசியல் மீடியாவில் என்னுடைய பதிவுகளை தொடர்ந்து பார்ப்பதாக கூறிக்கொண்டு ஒரு பெண் அருகே வந்து தன்னை அறிமுகப்படுத்தினாள். உங்களிடம் கொஞ்சம் பேசலாமா என்றதும், டாம் பாய் கணக்கா அவள் கேட்ட தோரணை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. சரி பேசலாம் என்றேன். டாம் பாய் கணக்கா ஒரு இளம்பெண் மிக நேர்த்தியாக அரசியலில் இருந்து பேச ஆரம்பித்தவள், அதன் பின் தன்னை ஒரு எ செக்சுவல் என்று அறிமுகப்படுத்தினார். உண்மையில் ஒரு காபி ஷாப்பில் உட்கார்ந்து இருக்கும்போது, காலேஜ் படிக்கும் பெண் தன்னுடைய பாலினத்தில் ஏற்பட்ட வித்தியாசத்தைப்பற்றி புரிந்து வைத்திருப்பதை பார்க்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
இதேபோல் ஆண் நண்பர் ஒருவர், தான் ஒரு ஆணை நேசிப்பதாகவும், அவருக்காக அவர் விரும்பும் தொழிற்துறையைத் தேர்ந்தெடுத்து பொருளாதார ரீதியாக வளர்ந்த பின், வேறு நாட்டில் போய், அதாவது ஓரினச் சேர்க்கையாளர் பற்றிய எந்த குழப்பமும் இல்லாத நாடாகவும், சட்ட ரீதியான பாதுகாப்பை அளிக்கும் நாடாகவும் இருக்கும் போது, அங்கு போய் குடியேறப் போவதாக கூறினார்.
திருமணமான ஒரு ஆண் போன் செய்து தான் ஒரு ஹோமோசெக்சுவல் என்றும், அதனால் திருமண வாழ்வில் மனைவி மீது ஈர்ப்பு வரவில்லை என்றும் கூறினார்.மிகச்சிறந்த பதவியில் இருக்கும் பெண் ஒருவர் வந்து தான் ஒரு லெஸ்பியன் என்றும், தனக்கு திருமணத்திற்கு வரன் பார்க்கிறார்கள் என்றும் கூறினார். தன்னால் திருமணம் செய்ய முடியாது, ஆனால் அவரின் துறையில் இருக்கும் திறமை, அழகு, பொருளாதாரம் அனைத்தும் சமூகத்துக்கு சிறந்த மணப்பெண் என்ற அடிப்படையில் வரன்கள் வந்து குமிகிறது.
மேலே சொன்னவை எல்லாம் ஒரு சிறு துளிதான். இவர்களுக்கான மாதமாக தான் ஜூன் மாதத்தை விழிப்புணர்வு மாதமாக அமைத்து இருக்கிறார்கள். பொதுவாக மனிதர்கள் மாற்றுப்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்தால், அவர்கள் அனைவரும் மனநலத்தால் பாதிக்கப்பட்டவர்களாக கருதுகிறார்கள். இவர்களுக்கான சட்டப் பாதுகாப்பும், விழிப்புணர்வும் கடந்த அறுபது ஆண்டுகளாக தான் பல்வேறு நாடுகள் பங்கேற்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். அதன்பின் தான் ஓரளவு பால் புதுமையினர் பற்றிய புரிதல் சமூகத்திற்கு வர ஆரம்பித்தது.
நம் இந்திய நாட்டிலோ 2018ம் ஆண்டு பல முயற்சிகளுக்கு பின் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377ஆவது பிரிவின் ஒரு பகுதியில், சமுத்துவத்திற்கு எதிரானது என்பதால், ஓரினச் சேர்க்கை குற்றமற்றது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.உண்மையில் LGBTQ+ மாற்றுப்பாலின ஈர்ப்பாளார்களின் நடத்தை மனநலக் கோளாறாகவோ, குற்றமாகவோ நாம் கருதக்கூடாது என்பதே அடிப்படை விழிப்புணர்வாக இன்னும் ஆழமாக நம் மனதில் பதிய வேண்டும்.
பொதுவாகவே நம் மக்களுக்கு தனிப்பட்ட நபர்களின் காதலைப்பற்றியோ, அந்தரங்கமான விஷயங்களை பற்றியோ யாரிடமும் பேச விரும்பமாட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையில் இருக்கும் கலாச்சார சமுதாயத்தில் மாற்றுப்பாலின ஈர்ப்பாளர்கள் எளிதாக மனம் விட்டு பேசக்கூடிய சூழல் நாம் அமைத்துக் கொடுக்கவில்லை என்பதே நிதர்சனம். நம்முடைய மதம் சார்ந்த தத்துவங்களில் ரகசியங்களை யாரிடமும் பகிராதே என்றும், காதலைப் பற்றி வெளியே பேசாதே என்றும், நேர்த்தியான நம்பிக்கையை ஆழமாக விதைத்து விட்டிருக்கிறது.
அந்த நம்பிக்கையை உடைத்து தன்பாலினத்தில் ஏற்படும் உயிரியல் வளர்ச்சியில் உள்ளாகும் பிம்பத்தை தெளிவுப்படுத்துவதுதான் பகுத்தறிவின் சிறந்த வேலையாக இருக்கும் என்பதே இந்த மாதத்தின் சிறந்த கருவாக இருக்கிறது.இங்கு எல்லாருக்கும் தான் யார், தன்னைப்பற்றிய அடையாளம் என்பது பெரும்பாலும் தெரியும். ஆனால் இவர்களின் அடிப்படை மாற்றமே தன்னுடைய உடலால் தான் யார் என்றும், மனதால் யார் என்றும் புரிந்துகொள்வதற்கே பெரிய குழப்ப நிலைக்கு உள்ளாவார்கள். நம்முடைய பதற்ற நிலை ஒரு மடங்கு இருந்தால், இவர்களின் பதற்ற நிலை 2.4 மடங்கு அதிகமாக இருக்கிறது என்று மனநல மருத்துவர்களின் பகிர்வாக இருக்கிறது.
சில மணி நேரம் மட்டுமே நமக்கு பதற்றம் இருந்தாலே அந்த நாளை உருப்படியாக வைத்திருக்க முடியாது. உடலில் ஏற்படும் சில மாற்றங்களுக்கு அவர்களின் மனநிலையை என்றுமே பதற்றத்துடன், கேலி கிண்டலுடன், பாவ, புண்ணியத்துடன் பேசும் சமூகத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் கடந்துபோவதுதான் அவர்களின் தலையாய பிரச்சனையாக இருக்கிறது.
Indian Psychiatric Society (IPS) இந்தியாவில் இயங்கும் இந்த அமைப்பில் உளவியல் மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் என்று பலரும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றாக கூறுவது, LGBTQIA+ மக்கள் யாரும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்கிறார்கள்.
LGBTQIA + மக்கள் திருமணம் புரிந்தாலோ, அவர்கள் குழந்தையை தத்துஎடுத்துக் கொண்டாலோ இந்தியக் கலாச்சாரம் சீரழிந்து போய்விடும் என்று கூறும் நபர்களின் வார்த்தைகள் அத்தனையும் கட்டுக்கதை என்று IPS அமைப்பு ஒரு ஆய்வை சுப்ரீம் கோர்ட்டுக்கு சமர்ப்பித்து இருக்கிறது. இரண்டு மாதத்திற்கு முன், அதாவது LGBTQIA+ மக்கள் திருமணம் செய்யலாம் என்று அனுமதித்திருந்த நாடுகளில் அவர்களின் திருமணஉறவு மற்றும் குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பதால் ஏற்படும் குழப்பங்கள் பற்றிய 24 பன்னாட்டு ஆய்வுகளை சமர்ப்பித்து இருந்தார்கள்.
உண்மை என்னெவென்றால் LGBTQIA+ பெற்றோருக்கும், மற்ற பெற்றோர்களுக்கும் உறவில் ஏற்படும் பிரச்சனைகள் போல்தான் இருக்கிறது. குழந்தை வளர்ப்பிலும் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை என்று தான் ஆய்வு நம்மிடம் கூறுகிறது என்கிறார்கள் மருத்துவக்குழுவும், அதனை ஏற்றுக்கொண்ட நம் இந்தியச் சட்டமும். LGBTQIA+ மக்களுக்காக இந்தியாவில் அறிவியல் பூர்வமாக வெளியிட்ட முதல் ஆய்வு அறிக்கை இதுதான்.
ஆனால் இன்னமும் நம் நாட்டில் மதத்தில் தீவிரமாக பங்கேற்கும் மக்கள் மதத்திற்கு எதிராக செயல்படும் பாவம் போல் எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் 2009ம் ஆண்டில் மாற்றுப் பாலின அறுவகை சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ஒரு வார்டு ஒதுக்கி இருக்கிறார்கள். உண்மையில் மாற்றுப்பாலின அறுவை சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதற்கட்டமாக மனநல ஆலோசனைதான் வழங்குகிறார்கள். ஒரு பாலினத்தில் இருந்து மற்றொரு பாலினமாக மாறும்போது முதலில் உடை தான் அடிப்படையான விஷயமாக மாறியிருக்கும்.
புதுப்பாலினமாக மாறி புதுவகையான உடையை அவர்கள் அணிந்து பழகுவது, அதில் ஏற்படும் தடுமாற்றங்கள், புதிதாக மாறிய பாலினத்தவரின் நடவடிக்கையை பழகுதல், இந்தச் சமூகம் அவர்களை பார்க்கும்போது பேசுவதில் உள்ள கேலி, கிண்டல்களை சமாளிக்கும் விதமும் என்று இவற்றில் இருந்து முதலில் அவர்களை தயார் செய்வதற்கு மனநல ஆலோசனை வழங்குகிறார்கள் நம் ராஜிவ்காந்தி மருத்துவமனையில். அவர்கள் மன தளவில் எல்லாவற்றுக்கும் தயாரான பிறகுதான் மாற்றுப்பாலின அறுவைசிகிச்சை செய்கிறார்கள்.
இவ்வாறாக நம் நாட்டில் மருத்துவர்களும், சட்ட நிபுணர்களும் LGBTQIA + சாதாரணமானது என்று நமக்கு தெளிவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் தான் PRIDE MONTH என்று கோலாகலமாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். பிரைட் மாதமான ஜூன் ஒன்றில் இருந்து முப்பது வரை பால் புதுமையினர் தங்கள் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு விதமான கூட்டங்கள், நிகழ்வுகள், பேரணிகள் என்று ஒரு அமைப்பாக சேர்ந்து டெல்லி, சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற மெட்ரோ சிட்டிகளில் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை ஓரளவு புரிதல் இருக்கிறது என்றே பால்புதுமையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பால்புதுமையினர் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் ஓரளவு வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பால்புதுமையினரை எந்த வார்த்தைகளில் அழைக்க வேண்டும் என்று ஒரு புது தமிழ்அகராதியை தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கிறது.இந்த மாதத்தில் இவர்களின் கூட்டங்களில் மனநலம் பற்றிய தெளிவும் இருக்க வேண்டும். பெரும்பாலும் மாற்றுப்பாலின சிகிச்சை, அதில் ஏற்படும் வலிகள், படிப்பதற்கான சூழல், வேலைவாய்ப்பு, தங்குவதற்கான இடங்கள், காதல், காமம் பற்றிய அனைத்து விஷயங்கள் சார்ந்து பேசுகிறார்கள். ஆனால் இதில் ஏற்படும் பிரச்சனைகளால் அவர்களின் மனஅழுத்தம், மனச்சோர்வு, தூக்கமின்மை, சாப்பிடாமல் இருப்பது, தனிமை, மனம் விட்டு எளிதாக பேசாமல் இருப்பது என்று இவர்களும் மனப்பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மனப்பாதிப்பில் ஏற்படும் சிகிச்சை பற்றியும், அதற்கான விழிப்புணர்வும் அவசியம் பேசப்பட வேண்டும்.
சட்டமும், மருத்துவமும் இவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. ஆனால் நம் சமூக மக்கள் இன்னும் அவர்களின் வாழ்வைப்பற்றிய ரகசியங்களை மூடநம்பிக்கைகளுடன் பேசுவதைத்தான் மாற்ற வேண்டும் என்று பால்புதுமையினர் விரும்புகிறார்கள். அவர்களுக்காக நாம் சிறப்பு சலுகை செய்யவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்களின் வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்றாற்போல் வாழக்கூடிய சூழல் இருந்தாலே போதும் என்பது தான் ஒரே குரலாக தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.