அன்புடன் அந்தரங்கம்!!(அவ்வப்போது கிளாமர்)

Read Time:8 Minute, 34 Second

வெகு நாட்களாக கடிதம் எழுத வேண்டும் என்று யோசித்த பின், இதை எழுதுகிறேன். எனக்கு அம்மாவோ, அப்பாவோ கிடையாது. திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். என் கணவர் ரொம்ப நல்லவர்; அவருக்கு, துரோகம் செய்து விட்டேன்.
என் கணவரின் நண்பரிடம் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. 15 வருடங்களாக இந்த தொடர்பு நீடித்து கொண்டிருந்தது. என்னிடம் மிகவும் அன்பாகவும், எல்லா விதத்திலும் உதவியாகவும் இருந்து வந்தார்.
“உனக்கு அம்மாவாகவும், அப்பாவாகவும் இருப்பேன்; கடைசி வரை உற்ற துணையாக இருப்பேன்…’ என்று சத்தியம் பண்ணினார். இதையெல்லாம் நம்பி, அவரை என் கணவரை விட அதிகமாக நேசித்தேன்.

அவருடன், பல இடங்களுக்குச் சென்று, சுகத்தை அனுபவித்தேன். என்னிடம் “உனக்குதான் எல்லா விதத்திலும் முதலிடம்…’ என்று கூறி, அனுபவித்தார். இப்போது, மூன்று வருடங்களாக என்னை தவிர்க்கிறார்.
“யாருடனாவது தொடர்பு இருக்குமோ…’ என்று, சந்தோகப்படுகிறேன். என்னிடம் பேசுவதும் இல்லை. “உன்னை பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது…’ என்று கூறியவர், இப்போது, என்னை பார்ப்பதும் இல்லை. இதையெல்லாம் நினைக்கும் போது, “எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டாரோ… எல்லா சராசரி ஆண் போல் இவரும் நடந்து கொண்டாரோ…’ என்று வருத்தமாக இருக்கிறது.

இதையெல்லாம் நினைக்கும் போது, தூக்கமே வரவில்லை அம்மா. தெரிஞ்சே தப்பு செய்தும், நான் இதை எல்லாம் மறக்க கடவுளிடம் வேண்டுகிறேன். அப்போதும் என் மனம் ஆறவில்லை.
இது பற்றி, அவர் குடும்பத்துக்கு எதுவும் தெரியாது. தெரியாதது மாதிரி நடந்து கொள்வார். அவர் மேல் தவறில்லை என்பதை போல் காட்டிக் கொள்கிறார். இதையெல்லாம், அவர் மனைவியிடம் சொல்லி விடலாமா என்று ஒரு சமயம் தோன்றுகிறது. அவரை பழி வாங்க வேண்டும் என்று துடிக்கிறேன். அம்மா எனக்கு தெளிவாக பதில் சொல்லுங்கள்.
— இப்படிக்கு, உங்கள் அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. கடிதம் முழுக்க, முழுக்க சுயநலத்தால் நனைந்திருந்தது.
நீ அதிகம் படித்தவள் போல் தெரியவில்லை; எந்த வேலையிலும் இருப்பதாகவும் தெரியவில்லை. உன் கையெழுத்தை ஆராயும்போது நீ சுயநலமானவள்; குறுக்கு புத்தி உடையவள்; நம்பிக்கைத் துரோகம் செய்கிறவள் என தெரிகிறது. இந்த யூகத்துக்கு என்னை மன்னித்து விடு. தவறுகள் செய்வது உன் பிறப்புரிமை. அதே தவறை பிறர் செய்தால், மரணதண்டனை விதிக்க வேண்டும் என கூவுகிறாய்.

உன்னுடைய பழிவாங்கும் எண்ணத்தில் லட்சம் சதவீதம் சுயநலம் இருக்கிறது. திருடி வந்த பொருளுக்கு, கேரண்டி கார்டு கேட்டு, கன்ஸ்யூமர் கோர்ட்டில் கேஸ் போடுகிறாய்.
“உன்னுடைய அம்மா, அப்பாவாக கடைசி வரை துணையாக இருப்பேன்…’ எனக் கூறி, கணவரின் நண்பர் உன்னுடன் தொடர்பு வைத்துள்ளார். உனக்கும், உன் கணவருக்கும் திருமணமாகி, 17 ஆண்டுகள் ஆகின்றன என நினைக்கிறேன். முதல் பெண் குழந்தைக்கு ஒரு வயதாகும் போது, உனக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். உன் கணவரும், உன் முதல் குழந்தையும், உனக்கு துணையாக இருக்கும்போது, கணவரின் நண்பருடைய ஆதரவுக் கரம் எதற்கு?

தவறான உறவு தேடிக் கொண்டதற்கு நீயும், உன் கள்ளக் காதலனும் பொய் சென்டிமென்ட் காரணம் சொல்கிறீர்கள். உனக்கு பெற்றோராக இருக்க விரும்புபவன், உன்னுடன் கலவி புரிவானா? கணவனின் நண்பனை, பெற்றோராய் பாவிக்கும் பெண், அவனுடன் கள்ள உறவு வைத்துக் கொள்ளலாமா? உன்னை நேர்மையானவள் என நம்பி, உன் கணவர், தன் நண்பனை வீட்டுக்கு அழைத்து வந்து, உனக்கு அறிமுகம் செய்து வைத்தது மகா தப்பு. இது, நிறைய ஆண்கள் செய்யும் தவறு. நாலு விஷயங்கள் யோசித்து பார்க்காமல், தெருவில் போகும் நாய்களை, நரிகளை எல்லாம் நண்பன் என, வீட்டுக்கு அழைத்து வந்து சோறு போடுகின்றனர், குடிக்கின்றனர், சினிமாக்களுக்கு ஜோடி சேர்ந்து போகின்றனர்.

கல்யாணமான ஆண் நண்பர்களிடம், ஆரோக்கிய இடைவெளி மெயின்டெய்ன் பண்ணுவது மிக நல்லது. “என் மனைவி மிக நேர்மையானவள், மிக நேர்மையானவள்…’ எனக் கூறி, அவள் மீது சபல ஆண்களை அள்ளி வீசாதீர்கள். நூறு பாம்புகளில் 99 தண்ணீர் பாம்பு, சாரைப் பாம்புகளாகவும், ஒன்று நல்ல பாம்பாக இருந்து, விஷத்தை கக்கி விடும்.

இப்போது, உன் மகள்களுக்கு முறையே 16, 12 வயதிருக்கலாம். மூத்தவள் ப்ளஸ் ஒன்றும், சிறியவள் ஏழாம் வகுப்பும் படித்துக் கொண்டிருப்பர். அவர்களின் எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல், கள்ளக் காதலனை பழி வாங்க துடித்துக் கொண்டிருக்கிறாய். ஒரு பெண்ணின் கணவனை நீயும், ஒரு ஆணின் மனைவியை அவனும் திருடினீர்கள். இப்போது அவன் விலகுகிறான் என்றால் நல்லதுதானே?

வாலிபத்தில் தவறு செய்தோம், இப்போது தவறு செய்யும் சூழல் விலகி விட்டது. இனியாவது கணவனுக்கு, குழந்தைகளுக்கு விசுவாசமாய் இருப்போம் என நினைக்காமல், வேறெதோ நினைக்கிறாயே… சரிதானா? “பதினைந்து வருடங்களாக பிக்பாக்கெட் பண்ணிக் கொண்டிருந்தேன். கடந்த மூன்று வருடங்களாக பிக்பாக்கெட் அடிக்க, மக்கள் ஒத்துழைக்க மாட்டேன் என்கின்றனர். அவர்களின் மேல் இ.பி.கோ.,வின் எந்த பிரிவுகளின் படி வழக்கு தொடர்ந்து, மரணதண்டனை பெற்று தரலாம்…’ என கேட்கிறாய். அசடே… அசடே!
கல்வியறிவின்மையும், அறியாமையும் தான் உன் துர் எண்ணங்களுக்கு அடிப்படைக் காரணம். நடந்தது கெட்ட கனவாய் போகட்டும்; இனி, நடப்பவை நல்லவையாக அமையட்டும். கள்ள உறவு தொடர்பான அனைத்து எண்ணங்களையும் தலை முழுகு.

உன் மூத்த மகள் பெரிய மனுஷி ஆகியிருப்பாள்; சின்னவள் இன்னும் இரு வருடங்களில் ஆகி விடுவாள். இனி, உன் நடத்தை அவர்களை பாசிட்டிவ்வாகவோ, நெகடிவ்வாகவோ பாதிக்கும். நீ நல்ல மனைவி இல்லை… நல்ல தாயாகவாவது இரு. உனக்கு தற்சமயம் வயது 42 இருக்கும். மீதி வாழ்நாளை கண்ணியமுள்ளதாக, நேர்மையுள்ளதாக ஆக்கு. பெற்றோரின் அன்பை பிற ஆண்களிடம் தேடாதே… என்னை போன்று வயதான, அனுபவமிக்க அம்மா வயது பெண்களிடம் தேடு. நாங்கள் ஒரு துளி அன்புக்கு, ஒரு கிலோ மாமிசம் கேட்க மாட்டோம்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்த விஷயங்களில் பெண்களை பற்றிய எண்ணங்களை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்! (அவ்வப்போது கிளாமர்)
Next post மனவெளிப் பயணம்-தாம்பத்யம் எனும் பந்தம்! (PHOTOS)