குடும்பமாக இயங்கும் அடிசில் உணவகம்!! (மகளிர் பக்கம்)
நமக்கு சமமாக வேலை செய்பவர்களுக்கு அவர்களுக்கான இடமும் மரியாதையும் சுலபமாக கிடைத்து விடும். ஆனால், நமக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு அதே அளவு மரியாதை சரியாக கிடைப்பதில்லை. சம்பளம் கொடுத்தாலும் அவர்களுக்கான மரியாதையையும் சேர்த்து கொடுக்க நினைத்ததோடு அதனை செயல்படுத்தியுள்ளனர் சென்னை மாதம்பாக்கத்தை சேர்ந்த பாரதி மற்றும் கார்த்திக் தம்பதியினர்.
ஆம், இவர்கள் தங்களின் உணவகத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அவர்களின் பெயர்களை பலகையில் எழுதி கடையில் முன்பக்கத்தில் வைத்து, அவர்களை கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கின்றனர். உடன் வேலை பார்ப்பவர்களுக்கு மரியாதை கொடுக்க நினைக்கும் இந்த தம்பதியினர், தங்களின் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியமும் முக்கியம் என்பதில் மிகவும் கவனமாக உள்ளனர்.
அதனால், சிறு தானியம் மற்றும் தினையினால் செய்யும் உணவுகளை மட்டுமே தங்களின் ‘அடிசில்’ உணவகத்தில் வழங்கி வருகின்றனர். இந்த உணவகம் ஆரம்பித்த காரணம் மற்றும் தங்களின் வேலையாட்கள் குறித்து நம்முடன் பகிர்கின்றார் பாரதி.‘‘நான் எம்.பி.ஏ பட்டதாரி. படிப்பு முடிச்ச பிறகு, ஒரு தனியார் நிறுவனத்தில் எச்.ஆராக வேலை பார்த்து வந்தேன். கோவிட் காலக்கட்டத்தில் நான் என் வேலையினை ராஜினாமா செய்துவிட்டேன். அந்த சமயத்தில் எல்லாரும் வீட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், சும்மா இருக்க பிடிக்காமல், புது வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுதான் எங்களின் வேலையாக இருந்தது. என் கணவர் உணவுப் பிரியர். அவருக்கு புதுவிதமான உணவுகளை செய்து சாப்பிட பிடிக்கும். தினமும் இன்று என்ன புதுமையான உணவினை தயாரிக்கலாம்ன்னு நானும் என் கணவரும் ஆலோசனை செய்வோம். அதுபோல நிறைய உனவுகளை புதுசா முயற்சியும் செய்தோம். அப்படி நாங்க செய்த உணவில் அதிகமா சிறு தானியங்களும், தினைகளுமே இடம் பிடித்தது.
என்னதான் புதுவிதமான உணவுகளை சாப்பிட பிடித்தாலும், அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் நாங்க இருவருமே கவனமாக இருந்தோம். சில சமயம் நான் வீட்டில் சமைக்கும் உணவினை என் நண்பர்களுக்கும் கொடுத்து அனுப்புவேன். அவர்கள் சாப்பிட்டு, சுவையாக இருப்பதாக கூறுவது மட்டுமில்லாமல், ஏன் நீங்கள் ஒரு உணவகம் ஆரம்பிக்க கூடாதுன்னு கேட்டாங்க. ஆரம்பத்தில் எங்க இருவருக்கும் ஒரு சின்ன தயக்கம் இருந்தது.
எங்களால் நல்படியாக செய்ய முடியுமானு குழப்பமாக இருந்தது. வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்திடலாம். உணவகம் என்றால் பலருக்கு சமைக்க வேண்டும். சுவையும் தரமும் மாறாமல் கொடுக்க வேண்டும். ஆனால் எங்களால் முடியும் என்று எங்களுக்கு ஊக்கமளித்தது எங்களின் நண்பர்கள் தான். அதன் பேரில் ஆரம்பிச்சதுதான் இந்த ‘அடிசில் உணவகம்’. ஐடியா கொடுத்தது மட்டுமில்லாமல், இன்று வரை எங்களுக்கு மிகவும் ஆதரவாகவும் இருந்து வருகிறார்கள். என் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாலும், உணவகத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவது அவர்தான். மேலும் சமையல் குறித்து எனக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு அளிப்பவர்கள் என் அம்மாவும், மாமியாரும் தான்.
இவர்கள் அனைவரின் ஒத்துழைப்போடு தான் அடிசில் உணவகம் இயங்கிக் கொண்டிருக்கிறது’’ என்றவர் தன் உணவகத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி வருகிறார்.
‘‘பெண்களுக்கு வேலைக்கு போக வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் அதற்கான வாய்ப்போ அல்லது சூழலோ இருக்காது. ஆனால் ஒரு சிலருக்கு அவர்களின் குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கும்.
அதுபோக சிலருக்கு சமையலில் ஆர்வம் இருக்கும். இவர்களை போன்ற பெண்கள்தான் அடிசில் உணவகத்தில் வேலை செய்யறாங்க. இதில் இருந்து கிடைக்கும் வருமானம் அவர்களின் குழந்தைகளின் படிப்பிற்கும், குடும்ப செலவுக்கும் சரியா இருக்கணும்னு யோசிச்சோம். இங்கு ஏழு பெண்கள் வேலை செய்றாங்க. நான்கு பேருக்கு மட்டும் வீட்டில் சமைத்து வந்தவர்கள் இப்போது தினமும் 400 பேருக்கு சமைக்கிறாங்க. இவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கணும்னு முடிவு செய்து தான் எங்க கடையின் வாடிக்கையாளர்களுக்கும் அவர்களைப் பற்றி தெரிய வேண்டும் என்பதற்காகவே அவர்களின் பெயர்களை பலகையில் எழுதி வச்சிருக்கோம். இது என் கணவரின் ஐடியா’’ என பெருமையுடன் கூறினார் பாரதி.
‘‘இந்த உணவகம் ஆரம்பிச்சு, ஒரு வருஷமாகுது. இந்த உணவகம், இங்க இருக்கிற அத்தனை பேரின் உழைப்பு. நம்மை நம்பி சாப்பிட வர்றவங்களுக்கு நல்ல உணவா கொடுக்கணும் என்பதால் அவங்க வீட்டில் சமைப்பது போலவே உணவை தயாரிக்கிறாங்க. அது மட்டுமில்லாமல் நாங்க தயாரித்த புது வகையான உணவுகளையும் அவர்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறோம். இங்குள்ள அனைவருக்கும் சமையல் மேல் ஆர்வம் இருப்பதால், அவர்களும் எங்களின் பக்குவத்தை புரிந்து கொண்டு எளிதாக கற்றுக் கொண்டுவிட்டனர்.
மேலும் இவர்களின் வீட்டுச் சூழலுக்கு ஏற்ப காலை மற்றும் மாலை என இரண்டு ஷிப்ட்டுகளில் வேலைக்கு வருவாங்க. உணவகம் ஆரம்பித்த காலத்தில் வெறும் டேக்கவே மட்டும் தான் கொடுத்து வந்தோம். இப்போது உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு எங்களின் கடையினை அமைத்திருப்பதால், பார்சல் மட்டுமில்லாமல் சாப்பிடவும் வருகிறார்கள்’’ என்ற பாரதி தங்களின் உணவகத்தில் உள்ள சிறுதானிய உணவுகள் குறித்து விவரித்தார்.
‘‘கருங்குருவை, காட்டுயானம், கருப்பு கவுனி, பூங்கார், மணகத்தை, குதிரை வாலி இதுபோல நிறைய சிறுதானியங்கள் வைத்து தான் சமைக்கிறோம். இட்லி, தோசை கூட தினை மற்றும் சிறு தானியங்களில் தான் கொடுக்கிறோம். பெரும்பாலான ஓட்டல்களில் தினமும் ஒரே வகையான சாப்பாடு தான் இருக்கும். வீட்டிலும் அப்படித்தான் நாம் சமைப்போம். அதனால் தினமும் ஒரு வகை சிறு தானியத்தை பயன்படுத்தி, பொங்கல், தோசை, இட்லி, பணியாரம் என விதவிதமாக கொடுத்து வருகிறோம்.
சாம்பார், சட்னி, காய்களும் மாறுபடும். ஏதாவது ஒரு கீரை கண்டிப்பாக இருக்கும். உதாரணத்துக்கு தேங்காயில் மட்டுமில்லாமல் சுரைக்காய், குடை மிளகாய், கேரட் பயன்படுத்தியும் சட்னி செய்வோம். ஆரம்பத்தில் சிறுதானியம் மட்டுமே உணவு என்பதால், சாப்பிட யோசிச்சாங்க. அதனால் முதலில் அவர்கள் உணவினை சுவைத்து பார்க்கலாம். அது பிடித்திருந்தால், அந்த உணவினை அவர்கள் ஆர்டர் செய்யலாம். இப்போது அவர்களுக்கு எங்களின் உணவு பிடித்துவிடவே எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் வர ஆரம்பிச்சிட்டாங்க.
சிறு தானிய உணவுகள் வயதானவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரொம்ப நல்லது. ஒவ்வொன்றும் ஒரு வியாதிக்கு நன்மையை செய்யும். அதுமட்டுமில்லாது, உடலை கட்டுக்கோப்பாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இட்லி, தோசைக்கான மாவுகள் தினமும் புதுசா அரைக்கிறோம். நேற்றைய மாவுகளை பயன்படுத்துவதில்லை. வெள்ளை அரிசி பயன்படுத்துவதில்லை.
மதிய உணவுகளிலும் சிறுதானியம் உண்டு. சட்னி தீர்ந்தாலும் அதே சட்னியை திரும்ப செய்வதில்லை. வேறு வகை செய்வோம். இங்கிருக்கும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையான உணவுகளில் ஸ்பெஷலிஸ்ட். நாங்க புதுசா ஒரு உணவை தயாரிச்சா என் கணவர்தான் அதன் சுவையை முதலில் பார்ப்பார். அவர் உணவுப் பிரியர் என்பதால், அதன் நிறை குறைகளை சொல்வார்.
அதற்கு ஏற்ப நாங்க சரி செய்வோம். அதன் பிறகு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவோம். அப்படி நாங்க தயாரித்த புது டிஷ் மாம்பழ கேசரி. தற்போது நாங்க ெடலிவரி செய்வதில்லை. சிலர் டன்சோ மூலமாக பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் கூடிய விரைவில் அனைத்து ஏரியாக்களிலும் டெலிவரி செய்யும் எண்ணம் உள்ளது. ஒரு பெண்ணா, பல வேலைகளை செய்யும் போது வரும் கஷ்டங்களையும் அதை சமாளிக்கும் வழியும் தெரியும். சில சமயம் வேலைக்கு ஆட்கள் இல்லை என்றாலும் எல்லாரும் வேலையினை பகிர்ந்து கொண்டு செய்திடுவோம். காரணம், நாங்க இவங்களை எங்களுடைய குடும்பமாகத் தான் பார்க்கிறோம்’’ என்றார் பாரதி புன்னகையுடன்.