Over Thinking உடம்புக்கு ஆகாது…!! (மருத்துவம்)
ஒரு சிலர் அளவுக்கு அதிகமாக சிந்தித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்து இருக்கலாம். அவ்வாறு அளவுக்கு அதிகமாக சிந்திப்பது என்பது ஒரு பொதுவான பிரச்னை ஆகும். அதீத சிந்தனை என்ற பழக்கம் நம்மை அறியாமல் நாம் குழந்தைகளாக இருக்கும்போதே நம்மோடு ஒட்டிக் கொள்கிறது.நாம் அளவுக்கு அதிகமாக சிந்திக்கிறோம் அல்லது அதீத சிந்தனையில் இருக்கிறோம் என்பதை பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. ஆனால் அளவுக்கு அதிகமான சிந்தனையின் விளைவாக நமது வளர்ச்சி தடைபடும் நேரத்தில் அல்லது நமது வாழ்க்கைப் பாதையில் அதீத சிந்தனை குறுக்கிடும்போது, நாம் அதை உணர்ந்து கொள்கிறோம்.
அதீத சிந்தனை என்பது ஒரு தீய பழக்கம் அல்ல ஆனால், அளவுக்கு அதிகமாக சிந்திக்கும் போது நமது மூளை குழம்பி, நாம் தேவை இல்லாத செயல்களைச் செய்து கொண்டிருப்போம். ஆகவே, அதித சிந்தனை அல்லது அளவுக்கு அதிகமாக சிந்திக்கும் பழக்கத்தை எவ்வாறு களையலாம் என்பதை பார்ப்போம்:
அதீத சிந்தனை என்றால் என்ன..
செய்து முடிக்காத ஒரு செயலைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதுதான் அதீத சிந்தனை என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் அதீத சிந்தனை என்பது நமது கவலை, நமக்கு ஏற்படும் புற தூண்டுதல்கள், நம்மைச் சுற்றி இருக்கும் சூழல்கள் மற்றும் நமது வாழ்க்கைநிலை ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அதுவே, நம்மை மீண்டும் மீண்டும் சிந்திக்க வைக்கிறது.
அதுமட்டும் அல்லாது, ஓய்வாக இருக்கும்போது அல்லது தனியாக இருக்கும்போது, மக்கள் எந்தவித காரணமும் இல்லாமல் சிந்திக்க தொடங்குகின்றனர். இவ்வாறு ஏதாவது ஒன்றைப் பற்றியே அளவுக்கு அதிகமாக சிந்திக்கும்போது மக்களின் மன நலம் பெரிதாகப் பாதிக்கப்படுகிறது என்று 2013 ஆம் ஆண்டு, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அதீத சிந்தனையை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்.
நமது சூழ்நிலைகளைப் பற்றி நாம் அதிகமாக சிந்திக்கும்போது, நம் மனம் அவற்றிற்கு பலவித பதில்களை தருகிறது. அவை எவ்வாறு இருக்கிறது மற்றும் எவற்றுக்கு எல்லாம் பதில் தருகிறது என்பதைக் கண்காணிக்க வேண்டும். அந்த பதில்கள் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக இருந்தால், அவை நமது நேரத்தை வீணடித்துவிடும். ஆகவே அப்படிப்பட்ட பதில்களைத் தருவதில் இருந்து விடுபட வேண்டும். எனினும் நேர்மறையான சிந்தனைகள் நமக்கு நல்ல முடிவுகளைத் தரும். எனவே, நாம் சுய விழிப்புடன் இருந்தால், நமது மனநிலையை மாற்ற முடியும்.
கவனச் சிதறல்களைக் கண்டுபிடித்தல்
அதீத சிந்தனை தானாகவே முடியாது. அதை நாம்தான் கட்டுப்படுத்த வேண்டும். எனவே, ஆக்கப்பூர்வமான செயல்திறன் கொண்ட வேறு ஒன்றிற்குள் மனதை செலுத்த வேண்டும். அவ்வாறு கவனத்தை திசை திருப்ப பின்வரும் வழிகளைப் பின்பற்றலாம்.புதிய தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்வதில் ஈடுபடலாம்.
ஏதாவது ஒரு பொழுதுபோக்கு அம்சத்தைத் தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்தலாம்..
நமது ஓய்வு நேரங்களை, அருகில் இருக்கும் தொண்டு நிறுவனங்களில் செலவிடலாம். தினசரி தியானப் பயிற்சி மனதை கட்டுப்படுத்தும் நல்வழியாகும். மேலும், தியானமானது பதற்றத்தைத் தனிக்க உதவுகிறது. நம்மோடு சேர்ந்து வெளியில் வருவதற்கு மற்றும் நம்மோடு தனது நேரத்தை செலவழிப்பதற்குத் தயாராக இருக்கும் ஒரு நல்ல நண்பரைக் கண்டுபடிப்பது நல்லது. அது நமது அதீத சிந்தனையை நிறுத்துவதற்கு ஒரு சிறந்த வழியாக இருக்கும்.
இயல்பாக வரும் எதிர்மறை சிந்தனையை அறிந்து கொள்ளுதல் அதீத சிந்தனை சில நேரங்களில் நல்லதுதான். ஆனால், நம்மிடம் இருக்கும் எதிர்மறையான சிந்தனைகள் நமது மனதில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி, பலவகையான மனநல பிரச்னைகளை ஏற்படுத்தும். அதுபோன்று, இயல்பாக வரும் எதிர்மறை சிந்தனைகள் என்பவை நம்முடைய பயம், கோபம் அல்லது நம்முடைய அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளை உள்ளடக்கியவை ஆகும். இவை நமது வாழ்க்கைச் சூழலை மாற்றி தூங்கா இரவுகளை வழங்கிவிடும். ஆகவே அதீத சிந்தனையைக் கைவிடுவதற்கு, நேர்மறை சிந்தனைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
நிகழ்காலத்தில் கவனம் செலுத்துதல்
தியானம் செய்வதற்கும் மற்றும் இருக்கின்ற சூழலில் நலமோடு வாழ்வதற்கும், நிகழ்காலத்தில் வாழவேண்டியது அவசியம் ஆகும். அதற்கு நாம் இசையையோ அல்லது பாடல்களையோ கேட்டு அதை அனுபவிக்கலாம். நமக்குப் பிடித்த சுவையான உணவுகளை உண்ணலாம். அவை நமது அதீத சிந்தனையில் இருந்து விடுபட உதவி செய்யும்.