தண்ணீர் பயிற்சிகள்… தீரும் பிரச்னைகள்!! (மருத்துவம்)
முன்பு போல ஏரி, குளம், ஆறு, கால்வாய், கிணறு, குட்டை, அருவி, ஓடை போன்ற நீர் நிலைகளில் குளிப்பவர்களின் எண்ணிக்கை இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. செயற்கை நீச்சல் குளத்தில் குளிப்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. இவ்வாறான நீர் நிலைகளில் குளிப்பது என்பது இயற்கையாகவே ஒருவருக்கு பல நன்மைகளை தரக்கூடியது. அதைப் போலவே தண்ணிரில் பயிற்சிகள் செய்வது இன்னும் பல பலன்களை நமக்கு வழங்கும்.
எனவே, தண்ணீரில் என்னென்ன பயிற்சிகள் செய்ய வேண்டும், அதை யார் யார் செய்யலாம், அதில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு என்ன என்பது பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
தண்ணீரின் பயன்கள்…
*தண்ணீரில் நம் உடல் எடை குறைவாக இருக்கும் என்பதால் நாம் எளிதாக பயிற்சிகள் செய்ய முடியும்.
*அதேபோல, தண்ணீருக்கு எதிராக நாம் தசைகளை அசைக்கும் போது தண்ணீரின் தடுப்பு விசை (Resistance force) அதிகமாக இருக்கும் என்பதால் நம் தசைகளும் பலம் பெரும்.
*சுடு நீரில் உடற்பயிற்சி செய்யும் போது இறுக்கமான தசைகள், மூட்டுகள், ஜவ்வுகள் என எல்லாம் இலகுவாக (Relaxed) ஆகும்.
*தரையில் செய்வதை விட தண்ணீரில் பயிற்சிகள் செய்யும் போது மன அழுத்தம் குறைகிறது என ஆய்வுகள் சொல்கிறது.
யாரெல்லாம் செய்யலாம்…?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதினர் வேண்டுமானாலும் தண்ணீரில் பயிற்சி செய்யலாம்.
*உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள்.
*கை, கால்கள், முதுகில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்த பின், மீண்டும் இயல்பாக எல்லா உடல் அசைவுகளையும் செய்யவும், குறிப்பாக அறுவை சிகிச்சை செய்த மூட்டினை (joint) அசைக்கவும் உதவும்.
*எலும்பு முறிவு ஆன இடம் கூடுவதற்காக, அசையாமல் வைத்திருக்கச் சொல்வர். இதனால் அந்த இடம் இறுக்கமாக (tightness) ஆகிவிடும். இதனை சரி செய்து மீண்டும் முன்பு போல இயங்க தண்ணீரில் பயிற்சி செய்யலாம்.
*இடுப்பு வலி, மூட்டு வலி என மூட்டுகளில் வலி இருப்பவர்கள்.
*மூட்டு தேய்மானம், பலம் இல்லாத எலும்புகள், தசைகளில் காயம் (injury), ஜவ்வுகளில் காயம் உள்ளவர்கள்.
*டவுன் சிண்ட்ரோம், ஆட்டிசம், துறுதுறு குழந்தைகள்.
*மூளை வாதம், நடப்பதில் நிற்பதில் தாமதம் ஏற்படும் குழந்தைகள்.
*கர்ப்பிணிகள் முதல் மாதம் தொடங்கி பத்தாம் மாதம் வரையில் தண்ணீரில் உடற்பயிற்சிகள் செய்யலாம்.
*குழந்தை பிறந்த பின்பும் மீண்டும் முன்பு போல இயங்க சில பயிற்சிகள் வழங்கப்படும். இதனையும் தண்ணீரில் செய்யலாம்.
*நீண்ட கால முதுகு வலி, கால் மூட்டு வலி உள்ளவர்கள்.
*விபத்தினால் மூளை, தண்டுவடத்தில் அடிபட்டு பாதிக்கப்படுபவர்களுக்கு கை, கால்கள் முன்பு போல அசைக்க முடியாமல் செயலிழந்து விடும். அப்படிப்பட்டவர்களுக்கு.
நீர் பயிற்சி பெரிதும் கை கொடுக்கும்
*விளையாட்டு வீரர்களுக்கு தசைகள், ஜவ்வுகளில் காயம் ஏற்படும் போது பிரத்யேக பயிற்சிகள் தண்ணீரில் செய்வதன் மூலம் முழு பலன் பெறலாம்.
*பக்கவாதம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள்.
குழந்தைகளும் கர்ப்பிணிகளும்…
எல்லா வயதினரும் செய்யலாம் என்றாலும், இப்போது அதிகமாக குழந்தைகளும், கர்ப்பிணிகளும் இயன்முறை மருத்துவர்களின் வழிகாட்டலில் தண்ணீர் பயிற்சிகள் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். இது ஒருவகையில் தண்ணீர் பயிற்சியின் முக்கியத்துவம் பெருவாரியான மக்களை சென்று சேர்ந்திருப்பதை காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.எனவே, நாமும் தண்ணீர் பயிற்சிகள் மேற்கொண்டு, அதன் மூலமாகக் கிடைக்கக்கூடிய நன்மைகளை பெற்றால் இன்னும் இன்னும் ஆரோக்கியமாக வாழலாம்.