வாழ்க்கை+வங்கி=வளம்!! (மகளிர் பக்கம்)

Read Time:17 Minute, 12 Second

குறைந்தபட்ச ஆவணங்கள், எளிய செயலாக்கம், அதிகபட்ச நிதியுதவி, உரியநேரப் பயன்பாடு, நியாயமான வட்டி விகிதம், தொழில்நுட்ப உதவி, சாத்தியமான திரும்பிச் செலுத்தும் காலம் ஆகியவைதான் ஒரு கடன் பயனாளி எதிர்பார்க்கும் சிறந்த வங்கிச் சூழலாகும். குறிப்பாக விவசாயக் கடனில் வங்கிகளின் சட்ட திட்டங்களையும் தெரிந்து கொள்வது அவசியம்.

கடன் நிதியளவு (Scale of Finance)

பயிரிடுவதற்கு, பராமரிப்பதற்கு, அறுவடை செய்ய, தானியங்கள் அல்லது விளைபொருளை சந்தைப்படுத்த, சந்தையில் விற்க ஆகிய அனைத்திற்கும் ஆகும் செலவுத் தொகைதான் விவசாயி கடன். இடம், சுற்றுச்சூழல், தேர்ந்தெடுக்கும் பயிர், நிலத்தின் பரப்பளவு, பயிரிடுவதற்கான காலம் மற்றும் சந்தைப்படுத்தும் காலம் ஆகியவைதான் கடன் தேவையை நிர்ணயிக்கின்றன. நெல், மரவள்ளி, கேழ்வரகு, கம்பு, கரும்பு, சோளம், தானியங்கள், சாமை, வரகு, தினை, பருப்பு வகைகள், நிலக்கடலை, சூரியகாந்தி, எள், சோயாபீன்ஸ், மல்பரி, பருத்தி, நிலக்கடலை, மஞ்சள், காய்கறிகள், பூக்கள், காபி, தேயிலை, ரப்பர், மா, பலா, வாழை, தென்னை, அரிகானட், பூண்டு, இஞ்சி, ஏலக்காய், மிளகு, கிராம்பு மற்றும் இதர பணப்பயிர்கள் ஆகியவற்றிற்கு ஒரு ஏக்கருக்கு எவ்வளவு நிதி தேவை என்பதை ஒவ்வொரு பருவ காலத்திற்கு மாவட்ட வாரியாகக் கணக்கிட்டு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுடன் அந்தந்த மாவட்டத்தின் முன்னணி வங்கி அறிவிக்கும். அந்த கணக்குப்படிதான் வங்கிகள் விவசாயிகளுக் கடன் வழங்கவேண்டும். மேலும் விவசாய பயிர்க்கடன் வழங்கும்போது முதலில் மொத்த கடன் தொகையை கணக்கிட்டு அதில் விதைகள், உரம், பூச்சிகொல்லி வாங்க கடன் வழங்குவதில் அளவீடுகள் உள்ளன. அதன் அடிப்படையில்தான் விவசாயி கடன் பெறமுடியும். இந்த அளவீடுகள் அந்தந்த வங்கியின் கடன் திட்டத்தின் மூலம் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

நெல் பயிரிடும் விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும் கடன் தொகை மழைநீர் பாசனம் அதிகமுள்ள இடங்களில் குறைவாக நிர்ணயிக்கப்படுகின்றன. நெல் பயிரிட பயிர்க்கடன் தோராயமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.32550/-, திருச்சியில் ரூ.34100/-, ராமநாதபுரத்தில் ரூ.20550/- என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தந்த காலச்சூழலுக்கு ஏற்ப இந்த அளவீடுகள் மாறும். ஒரு ஏக்கர் மஞ்சள் பயிரிட ஈரோட்டில் ரூ.83300/-, கடலூரில் ரூ.34,500/- வழங்கப்படுகிறது. வணிகப்பயிரான ஏலக்காய் பயிரிட திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஒரு ஏக்கருக்கு ரூ.51100/-திருநெல்வேலியில் ரூ.11550/- என்றும் கணக்கிட்டு வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மேற்குத் தொடர்ச்சி மலையில் பயிரிடப்படும் ஏலக்காயின் தரம், தன்மைக்கு ஏற்ப கணக்கிட்டு கடனாக வழங்கப்படுகின்றன. பூக்களைப் பயிரிடும் விவசாயிகளின் அனுபவத்தில் ஒரு ஏக்கர் மல்லிகை பயிரிட வேலூர் மாவட்டத்தில் அதிக செலவும், விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்த செலவும் ஆகிறது. வங்கி வழங்கும் பயிர்க்கடன் பயிரிட ஆகும் செலவுகளுக்கு ஏற்ப நிர்ணயித்து வழங்கப்படுகிறது. காபி பயிரிட மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைவிட நீலகிரி மாவட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.9000/- கூடுதலாக செலவாகிறது. எனவே அதற்குரிய செலவுகளை கணக்கிட்டுதான் வங்கிகள் கடன் வழங்குகின்றன.

கிசான் கடன் அட்டை திட்டம்

விவசாயிகள் பயிரிடும் முன்பும், பின்பும் என்று இரண்டு கால நிலைகளில் கடன் தேவைப்படும். அதனை கருத்தில் கொண்டு 1998ம் ஆண்டு இந்திய அரசு அனைத்து வங்கிகளிலும் கிசான் கடன் அட்டைத் திட்டம் என்ற பயனுள்ள திட்டத்தை அறிமுகப்படுத்தியது. விவசாய உற்பத்திப் பெருக்கத்திற்கும் ஊரக வளர்ச்சிக்கும் பயன்தரும் வகையில் தேசிய வங்கியான நபார்டு வங்கி இத்திட்டத்தை அறிமுகம் செய்தது. பயிர் செய்வதற்காக மூன்று லட்சம் ரூபாய் வரை குறுகிய அல்லது நீண்ட காலக்கடனாக இத்திட்டத்தில் விவசாயிகள் பணம் பெறலாம்.

விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவை வாங்குவதற்கும், நிலத்தை உழுவதற்கு மற்றும் இதர விவசாயப் பணிகளுக்கு ஊதியம் தருவதற்கு, விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பதற்கு, விவசாயத்தின் இணைத் தொழில்களான கால்நடைகள் வளர்ப்பதற்கு, மின் மோட்டார் மற்றும் அதன் உபகரணங்கள், வேளாண் சாதனங்கள் வாங்குவதற்கு கடன் பெறலாம்.

கிசான் கடன் அட்டை வைத்துள்ள விவசாயிக்கு இலவச காப்பீடு வசதியும் உள்ளது. விபத்தினால் உடல் செயலிழத்தல், இறப்பு ஆகிய சூழல்களில் 50 ஆயிரம் ரூபாய் வரை விவசாயியின் குடும்பத்துக்கு காப்பீட்டுப் பணம் கிடைக்கும். இந்த அட்டையினை பெறுவதற்கு கடன் தொகை 1.60 லட்சம் ரூபாய் வரை எந்தவொரு உத்தரவாதமும் தேவையில்லை. குறுகிய காலக்கடனாகவே இந்தக் கடன்தொகை வங்கிகளால் வழங்கப்படுகிறது.

சில வங்கிகள் 5 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் கால அளவில் நீண்டகாலக் கடன் வழங்குகின்றன. அதற்குரிய உத்தரவாதத்தை வங்கியின் கடன் திட்டத்தின்படி செலுத்த வேண்டும். குறுகிய காலைக்கடனை கடன் பெற்றவர் விளைவித்த பயிர் அறுவடை முடிந்து, சந்தைப்படுத்திய பிறகு பெற்ற கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து வங்கியில் செலுத்த வேண்டும்.

ஒரு விவசாயிக்கு இரண்டு ஏக்கர் நிலமுள்ளது என்றும் அவர் முதலில் ஒரு ஏக்கரில் நெல்லும், சிறிது காலத்திற்குப் பிறகு மற்றொரு ஏக்கரில் கரும்பும் பயிரிடுகின்றார் என்றால் அந்தந்த பயிர்களுக்கான ஆகும் பயிர் செலவினை பயிரிடுவதற்குமுன் தனித்தனியாக கடனாகப் பெறலாம். இரண்டு பயிர்களுக்கும் மொத்தமாக கடன் பெற வேண்டியதில்லை. தேவை இருந்தால், இரண்டு கடன் கணக்குகளை தனித்தனியாகத் தொடங்கி கிசான் கடன் அட்டைத் திட்டத்தின் மூலம் பெறலாம். அந்தந்த பயிர்களின் வளர்ச்சி மற்றும் சந்தைப்படுத்தும் காலத்திற்கு ஏற்ப கடனை திருப்பிச் செலுத்தும் காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

கிசான் கடன் அட்டை விண்ணப்பதாரர்கள்

கிசான் கடன் அட்டை பெறுவதற்கு நிலத்தின் உரிமையாளர்கள், குத்தகை ஒப்பந்தம் செய்து கொண்டு நிலத்தின் பொறுப்பேற்றுப் பயிரிடும் விவசாயிகள், சுயஉதவிக் குழுக்கள், கூட்டுறவு விவசாயக் குழுக்கள், இறால், மீன் பண்ணையாளர்கள், கால்நடை / கோழிப் பண்ணையாளர்கள் தகுதியுள்ளவர்கள் ஆவர். வங்கியின் திட்டப் பரிசீலனையின்படி கடன் பெறும் நபர் வங்கியால் தேர்வு செய்யப்படுவார். 18 வயது முதல் 75 வயதுக்குட்பட்ட விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

75 வயதைக் கடந்துவிட்ட விவசாயியும் கிசான் கடன் அட்டையைப் பெறமுடியும். அவரின் பெயரில் விவசாய நிலம் பதிவாகி இருப்பதால் கடன் பெறுவதற்கு அவரின் சட்டப்பூர்வ வாரிசு ஒருவர் அவருடன் விண்ணப்பதாரராக இணைய வேண்டும்.

கிசான் கடன் அட்டை திட்டத்தின் மூலம் வங்கியிலிருந்து பெறும் கடனுக்கு வட்டி வீதம் ஆண்டொன்றுக்கு 7%. கடனை குறிப்பிட்ட காலத்தில் திருப்பிச் செலுத்தினால் அதற்கான மானியம் உண்டு. வங்கிகளின் கடன் திட்டப்படி 3% வரை வட்டி குறைப்பு செய்யப்படுகிறது. கடனுக்கான செயலாக்க கட்டணம் கிடையாது. வங்கிக் கிளைக்கு நேரிடையாகச் சென்றோ அல்லது இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்

(1)இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்கள்

(2) தனிநபர் அடையாள அட்டை (ஆதார் அட்டை / வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை / ஓட்டுநர் உரிமம்

(3)இருப்பிடச் சான்று (ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம்)

(4)விவசாயிக்கான வேளாண் நில உடைமை ஆவணங்கள் / வருவாய்த் துறை அலுவலரால் சான்றளிக்கப்பட்ட குத்தகைதாரரின் பற்று – வரவு குறிப்பேடு.

(5) விவசாயி குடியிருக்கும் மற்றும் நிலம் பயிரிடும் பகுதியில் இயங்கும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் வழங்கிய ‘கடன் நிலுவையில் இல்லை’ சான்றிதழ்.

விவசாயிகள் வேளாண் கடன் பெறுவதற்கு ஒவ்வொரு நிலையிலும் கிசான் கடன் அட்டைத் திட்டம் பெருமளவு உதவுகின்றது.

நிலம் வாங்க

சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு நிலம் வாங்குவதற்குக் கடன் வழங்குகின்றன. இத்திட்டத்தை நபார்டு வங்கி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் நிறைவேற்றி வருகிறது. விண்ணப்பதாரர் 2 முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். கடனைப் பெறுவதற்கு சிறு அல்லது குறு விவசாயி என்ற வரையறைக்குள் விண்ணப்பதாரர் இருக்க வேண்டும்.

நிலமற்றவராகவோ அல்லது 2.5 ஏக்கருக்குள் அளவீடுள்ள நில உரிமையாளராகவோ விண்ணப்பதாரர் இருக்க வேண்டும். வருட வருமானம் ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் கடன் மூலம் நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம். வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கடன் வழங்கப்படும். விண்ணப்பதாரர் மற்ற எந்த திட்டத்தின் மூலமும் மானியம் பெற்றவராக இருக்கக் கூடாது.

இத்திட்டத்தின் கடனுதவி மூலம் வாங்கிய நிலத்தை நிலம் பதிவான தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்கு வேறு பெயருக்கு மாற்றவோ அல்லது விற்கவோ கூடாது. நிலம் வாங்கியவுடன் விவசாயம் செய்வதைத் தொடங்கவேண்டும். விவசாயம் தவிர வேறு எதற்கும் வங்கிக்கடன் மூலம் வாங்கிய நிலத்தைப் பயன்படுத்தக் கூடாது. நிலமில்லாத மக்கள் கூட்டுப் பொறுப்புக் குழுவாக இணைந்து நிலம் வாங்கி அல்லது குத்தகை ஒப்பந்த அடிப்படையின் மூலம் பயிரிடுவதற்கு பயிர்க்கடன் பெறலாம். வங்கியின் திட்ட அங்கீகரிப்பின்படி ரூ. 5 லட்சம் வரை விவசாயம் அல்லது அதனைச் சார்ந்த பணிகளுக்கு கடன் பெறமுடியும்.

இதர வேளாண் பணிகள்

விவசாய பொருளாதார உயர்வுக்கு மிகவும் உதவுபவை விவசாயம் தொடர்புடைய இணைப் பணிகள். கால்நடை, பறவைகள் மற்றும் மீன் / இறால் வளர்ப்பு ஆகியவை விவசாயத்தின் பெரும் கிளைத் தொழில்களாகும். நாட்டில் பல கோடிக்கணக்கான விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இப்பணிகளை நம்பி இயங்குகின்றனர். இவர்களின் பணத்தேவைகளைப் பூர்த்தி செய்ய வங்கிகள் பல்வேறு கடன் திட்டங்களை அமைத்துள்ளன. கால்நடைகள் மேய்த்தல் தொழிலுக்கும், சாண உரத்திற்கும் மட்டுமின்றி இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகிறது. அவை பெருமளவில் லாபம் தருகின்றன. வங்கிக்கடன் மட்டுமில்லாமல் மத்திய மற்றும் மாநில அரசுகள் சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்குகின்றன.

கோழிப்பண்ணை

கோழி வளர்ப்பில் போதுமான அனுபவம் மற்றும் கோழி கொட்டகைகளை அமைப்பதற்கான நிலம் உள்ள விவசாயிகள் இந்த கடனுக்கு தகுதியானவர்கள். கோழிகள் வாங்குவதற்கும், கொட்டகை மற்றும் அதற்குத் தேவையான தாழ் விளக்குகள் முதல் இதர தேவையான உபகரணங்கள், நீராதாரம் அமைப்பதற்கும், கோழித்தீவனம் வாங்குவதற்கும், வளர்ந்த கோழிகளை சந்தைக்கு அல்லது விற்பதற்கு வாகனம் வாங்குவதற்கும் வங்கிகள் கடன் வழங்குகின்றன. ஒருவர் அமைக்கும் கோழிப்பண்ணை மற்றொரு கோழிப்பண்ணையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். குடிநீர் ஆதாரம் மிகவும் அவசியமானதாகும். குறைந்த பட்சம் 5000 கோழிகள் முதல் 15000 கோழிகள் கொண்ட கோழிப்பண்ணைகள் லாபகரமாக இயங்குகின்றன.

மொத்த செலவில் 75% வரை வங்கியிலிருந்து கடன் பெறலாம். கடன் தொகை குறைந்தபட்சம் ரூ. 3 லட்சம் அதிகபட்சம் ரூ.9 லட்சம் என்று செலவினங்களுக்கு ஏற்ப வங்கிகள் நிர்ணயித்துள்ளன. பிணையமாக சொத்து அடமானம் வங்கிக்கடனில் 50% அளவிற்கு இருக்க வேண்டும். கடன் தொகையை தவணை முறையில் வங்கியில் திருப்பச் செலுத்தும் காலம் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளாகும். சில வங்கிகள் சூழலுக்கு ஏற்ப மேலும் ஆறு மாதங்கள் கால நீட்டிப்பு வழங்குகின்றன.

விண்ணப்பதாரர் தனது வாக்காளர் அடையாள அட்டை / பான் கார்டு / பாஸ்போர்ட் / ஆதார் அட்டை, / ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து வங்கி அலுவலரிடம் வழங்க வேண்டும். பிராய்லர் கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு சில வங்கிகள் சலுகை வட்டியில் கடன் வழங்குகின்றன. விவசாயம் சார்ந்த இதர தொழில்கள் குறித்து மேலும் பார்ப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 100+ பெண்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டிய மருத்துவர்! (மகளிர் பக்கம்)
Next post உறவு சிறக்க உன்னத சிகிச்சைகள்!! (அவ்வப்போது கிளாமர்)