மறைந்து வரும் பழங்குடி காதோலைகள்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 18 Second

‘ஒத்தாரூபையும் தாரேன், ஒரு ஒணப்பத்தட்டும் தாரேன்’ என்ற பாடலை கேட்டிருப்பீர்கள். இதில் ஒணப்பத்தட்டு என்பது காதில் அணியும் கம்மலின் பெயர். ஜிமிக்கி, வளையம், ஸ்டட் என்று கம்மல்களுக்கு பெயர்கள் உள்ளதே அதேபோல் அதில் பல வகைகள் இருந்திருக்கின்றன. பெண்களின் முக்கிய அணிகலனாக கம்மல்கள் பழங்காலத்திலிருந்தே இருந்திருக்கிறது. இதற்கு ஆண்களும் விதிவிலக்கல்ல. உதாரணமாக புத்தர், மகாவீரரின் காதுகள் நீளமாக கீழ் நோக்கி தொங்குவது போலவும் காதுகளின் ஓட்டைகள் பெரிதாக இருப்பதையும் பார்த்திருப்போம்.

ஆதிகாலந்தொட்டே காதுகளை வளர்க்கும் பழக்கம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருந்துள்ளது. முற்காலத்தில் உலோகங்கள், கற்கள் தவிர, தாவரங்களிலிருந்து கிடைக்கும் பொருட்களிலும் காதணிகள் செய்யப்பட்டன. நம்முடைய சங்க இலக்கியங்களில் 39 வகையான காதணிகளை அணிந்திருந்ததாக கூறுகின்றன. அட்டிகை, இட்டடிக்கை, ஓலை, மாணிக்க ஓலை, கடிப்பினை, கடுக்கன், கன்னப்பூ, குண்டலம், குணுக்கு, குதம்பை, குறடு, குழை, குவளை, கொப்பு, சன்னாவ தஞ்சம், சின்னப்பூ, செவிப்பூ, தடுப்பு, தண்டட்டி, தாளுருவி, திரிசரி, தோடு, பொன்தோடு, மணித்தோடு, நவசரி, நவகண்டிகை, நாகபடம், பஞ்சசரி, பாம்படம், பாம்பணி, புகடி, மகரி, மஞ்சிகை மடல், மாத்திரை, முடுச்சு, முருகு, மேலீடு, வல்லிகை, வாளி என கம்மல்களில் பல வகைகள் உள்ளன.

மாட்டல், பூங்கொப்புமணி, பூட்டுக்காப்பு, தொங்கல், அட்டியல், பொன்மணி, திருச்சூலி, அலுக்குத்து, சரப்பளி போன்ற ஆபரணங்கள் காதுகளில் குத்தப்படுகிறது. காதுகளில் காது அணிகலன்களான கொப்பு, முருக்கச்சி, ஒணப்புத்தட்டு, எதிர்தட்டு, குறுக்குத்தட்டு, தண்டட்டி, முடிச்சு, நாகவட்டம் ஆகிய அணிகலன்களையும், அதன் பின்னர் அரசளிவாளி என காதில் ஒவ்வொரு இடத்திலும் வளையங்களைப் பொருத்தினர்.

ஆண்களும், பெண்களும் காதுகளில் அணிகலன்களை அணிந்துள்ளனர். மராட்டியர்களின் வருகைதான் ஜிமிக்கி கம்மலை தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் தங்கம், வெள்ளி என பல வகைகளில் காதணிகள் அணிந்தாலும் அந்த காலத்தில் இயற்கையாக கிடைத்த பொருள்களை வைத்தே கம்மல்கள், கழுத்தில் அணியும் அணிகலன்கள், கொலுசுகள் என எல்லாவற்றையும் அணிந்து வந்திருக்கின்றனர்.

கப்பல்களில் வேலை செய்யும் ஆண்கள் தவறாமல் கடுக்கன் மாதிரி ஓர் அடையாளத்திற்காக அணிந்திருப்பர். கடலில் ஏற்படும் சீற்றங்களில் யாராவது இறந்து விட்டால் அவர்களை அடையாளம் தெரிந்து கொள்ளவே இந்த கடுக்கன்கள். நாகரிக பெருவெள்ளத்தில் பல வகையான கம்மல்கள் காணாமல் போய்விட்டன. இதில் அதிகம் பேருக்கு பம்படம், தண்டட்டி இவையெல்லாம் பரிச்சயமாக இருக்கலாம். ஆனால் இன்றும் ஒரு சிலர் சடங்குகளுக்காக இயற்கையாக கிடைக்கும் பொருள்களிலிருந்து காதணிகளை அணிந்து வருகின்றனர். அப்படிப்பட்டவைகளில் ஒன்று தான் ‘காதோலை’.

வட்டவடிவில் இருக்கும் இந்த காதோலை பழங்குடிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூடலூரில் உள்ள பனியா பழங்குடி மக்கள் இன்னமும் இதை பயன்படுத்தி வருகின்றனர். ஏன் இந்த மாதிரியான காதோலைகளை பயன்படுத்தி வருகிறார்கள் என பனியா பழங்குடி பெண் குறிஞ்சி நம்மிடம் விளக்கம் அளித்தார்.‘‘நாங்க கூடலூரில்தான் பிறந்து வளர்ந்தது. அடர்ந்த காடுகளில் இருந்தவங்க. 70 வருசத்துக்கு முன்னாடி எங்களை புலிகள் காப்பகம் வருதுன்னு சொல்லி இப்போ இருக்கிற கையுண்ணி கிராமத்திற்கு இடமாற்றம் செய்தாங்க. காட்டை விட்டு வந்ததும் எங்களோட வேலைகளும் மாறி போச்சு. இப்போ தேயிலை பறிக்கிறதுக்கும். ஏலக்காய் எடுக்கிற வேலைகளுக்கும் போயிட்டு இருக்கோம்.

ஒரு நாளைக்கு 300 ரூபாய் கிடைக்கும். கூடலூர்ல 7 வகையான பழங்குடிகள் இருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடுகள் இருக்கு. அதே போல தான் நாங்களும் தனிச்ச அடையாளம் கொண்டவங்க. பனியா பழங்குடிகள்னு எங்களை சொல்லுவாங்க. நாங்க காதுல அணியிற காதோலையை வச்சு எங்களை அடையாளம் கண்டுகொள்ளலாம்’’ என்றவர் காதோலை செய்யும் முறைப்பற்றி விவரித்தார்.

‘‘வசதியுள்ளவர்கள் தங்கம், வெள்ளின்னு கம்மல்கள் போட தொடங்கியிருக்காங்க. பழங்குடி மக்களாகிய எங்களுக்கு இயற்கைதான் எல்லாமே. அங்க இருக்கிற பொருள்களை வச்சுதான் எங்களை நாங்க அலங்காரம் செய்துப்போம். இங்க இருக்கிற மத்த பழங்குடி மக்கள் பனையோலையைச் சிறிய அளவில் சுருட்டி காதுத் துளைக்குள் செருகி, காதணியா பயன்படுத்திட்டு இருக்காங்க. இந்த வகைக் கம்மலையும் காதோலை என்று தான் சொல்வாங்க. மேலும் இங்குள்ள மற்ற பழங்குடி மக்களிடமும் பல வகையான கம்மல்கள் இருக்கும்.

ஆதிகாலத்து வழக்கப்படியே எங்களுக்கும் சாதாரணமாக காது குத்துவாங்க. நாங்க சின்ன வயசா இருக்கும் போதோ எங்க வயல்ல முளைக்கிற நண்டங்கன்னி கொடியை எடுத்து எங்க காதுல போட்டு விடுவாங்க. நாளாக நாளாக அந்த தண்டோட அளவை பெரிசாக்கிட்டு இருப்போம். கொஞ்ச நாள் கழிச்சு காதோட ஓட்டை பெருசாக கல்லை கட்டி விடுவோம். ஓரளவுக்கு காது பெருசாயிரும். நாங்க பெரிய மனுசியானதும் இந்த மாதிரி காதோலையை செய்ய தொடங்குவோம்.

இதை எங்க மொழியில ‘சூது’ன்னு சொல்வோம். தென்னை அல்லது பனை ஓலையை கிழிச்சு தண்ணீரில் போடுவோம். ஒரு நாள் ஊறிய பிறகு தேன் அடையை எடுத்து வந்து நல்ல தேனால மெழுகி கெட்டியான உருண்ட வடிவத்துல ஓலையை கொண்டு வருவோம். எங்களோட காது ஓட்டை அளவிற்கு ஏற்ற உருண்டை செய்து ஊற வைத்திருந்த ஓலையை எங்க காதில் மாட்டிக் கொள்வோம்.

தேன் மெழுகால மெருகேத்துறதால இந்தக் கம்மல் ஒன்றரை வருசத்துக்கு வரும். 6 மாசம் அல்லது வருஷத்திற்கு ஒரு முறை காதோலையின் அளவை பெருசாக்கிட்டே இருப்போம். புதுக் கம்மலு முன்னதவிட பெருசா இருக்கும். அதற்கேற்ப காது துவாரமும் பெருசாகும். பழைய காதோலையை அப்படியேவச்சிருப்போம். மற்ற நாட்களை விட திருவிழா நேரங்களில் கண்டிப்பாக காதோலையை அணிந்து கொள்வது எங்க வழக்கம். இந்தக் கம்மல்களுக்கு நடுவுல காட்டுல கிடைக்கிற சிவப்பு, பச்சை நிற மர விதைகளை ஒட்ட வைப்போம். இதுல பாசி மணிகளையும் ஒட்ட வைக்கலாம்.

ஓலையை மட்டுமே சுற்றி கம்மல் செய்வாங்க. எங்க பழங்குடியில் உள்ள இன்றைய தலைமுறைகள் யாரும் காதோலை அணிவதில்லை. வயசானவங்க மட்டும் தான் அந்த பாரம்பரியத்தை கடைபிடிக்கிறோம். மத்தவங்க, தங்கம் அல்லது கவரிங்கில் கம்மல், மூக்குத்தி போட்டுக்கிறாங்க. சிலர் காது குத்தாமலே பசை மாதிரி எதையோ காதுல தடவி விதவிதமாக கம்மல் வாங்கி ஒட்ட வச்சிக்கிறாங்க.

நாப்பது அம்பது வருசத்துக்கு முந்தியெல்லாம் காதோலை கம்மல் போடாத பனியர் பெண்களை பார்க்கவே முடியாது. ஆனா இப்ப, நிலைமை மாறிப்போச்சு. இன்னும் பத்திருபது வருசம் போனா, காதோலை கம்மலை மாத்திரமல்ல, அதை போட்டுக்கிற பனியர் பெண்களையும் பார்க்கவே முடியாது’’ என்று ஆதங்கத்தோடு சொல்கிறார் குறிஞ்சி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிறுகதை-முள்!! (மகளிர் பக்கம்)
Next post கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா!! (மருத்துவம்)