கலைமாமணி விருது வாங்க வேண்டும்! (மகளிர் பக்கம்)
2023ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் சிறந்த திருநங்கை என்ற விருதை பெற்றிருக்கிறார் வேலூரை சேர்ந்த ஐஸ்வர்யா. இவர் திருநங்கை கலைஞர்களை ஒருங்கிணைத்து சொந்தமாக நாடக கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். அதிலிருந்து வரும் வருமானத்தில் பல குழந்தைகள் படிப்பதற்காக உதவிகளையும் செய்து வருகிறார். ‘‘எனக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகள் எல்லாவற்றையும் மத்தவங்களுக்கு கிடைக்க வேலை செய்வேன்’’ என்று பேசத் தொடங்கினார் ஐஸ்வர்யா.
‘‘சொந்த ஊரு படிச்சதெல்லாம் வேலூர். எனக்கு இரண்டு அக்கா இருக்காங்க. வீட்ல எனக்கு வச்ச பெயர் அசோக். என்னோட சின்ன வயசிலேயே அப்பா எங்க குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சிட்டார். அம்மாதான் குடும்பத்தை பார்த்துகிட்டாங்க. அவங்கதான் எங்களுக்கு எல்லாமே. வீட்டில் வறுமையான சூழ்நிலையிலதான் நான் பிறந்து வளர்ந்தேன். சின்ன வயசில் இருந்தே நான் வீட்டு வேலைகள் எல்லாம் செய்வேன். காலையில தண்ணீர் எடுப்பது என்னுடைய வேலை.
என்னுடைய நடை, பாவனையை பார்த்து எங்க பக்கத்து வீட்டுக்காரங்க என் அம்மாவிடம் உன் பையன் பொண்ணு மாதிரி நடந்துக்கிறான்னு சொல்லுவாங்க. ஆனால் என் அம்மாவிற்கு எனக்குள் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் குறித்து முன்பே தெரியும். நான் ஒரு திருநங்கைன்னு அவங்க ஏற்கனவே ஊர்ஜிதம் செய்திருக்காங்க. மற்றவர்களால் என்னுடைய பழக்கவழக்கத்தில் மாற்றத்தை பார்க்கும் போது, என்னை பெற்று வளர்த்த தாய்க்கு தெரியாமலா போகும்.
அந்த மாற்றத்தை நான் உணர்ந்த போது, முதலில் என் அம்மாவிடம்தான் அது குறித்து சொன்னேன். அவங்க பெரிசா படிக்கல. கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்ததில்லை. ஆனால், அவங்களிடம் நான் என்னை ஒரு பெண்ணா உணர்கிறேன்னு சொன்ன போது, அவங்க, ‘நீ பொண்ணா இருந்தாலும் சரி ஆணா இருந்தாலும் சரி, நீ என்னோட பிள்ளை. நீ எப்படி வேணும்னாலும் இரு’ன்னு சொல்லிட்டாங்க. அவங்க தந்த அந்த பாதுகாப்புதான் என்னுடைய இயல்பில் என்னை இருக்க வைத்தது. இதனால் நான் மத்தவங்க சொல்வதைப் பற்றி கவலைப்பட்டதும் கிடையாது. நான் நானாகவே இருந்தேன்.
எங்க ஊரில் திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் நாடகங்கள் நடக்கும். எனக்கு நாடகம் பார்க்க பிடிக்கும். எங்க ஊரில் நடக்கும் நாடகத்தை வேடிக்கை பார்க்க போவேன். ஒரு முறை போன போது, அந்த நாடகத்தை அரங்கேற்றியவரிடம் எனக்கு நாடகத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும், அதில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமான்னு கேட்டேன். அவரும் தாராளமா நடிக்கலாம்னு சொல்லி அவரின் போன் நம்பரை கொடுத்தார். வீட்டில் அம்மாவிடம் சொன்ன போது, அவங்க மறுத்துட்டாங்க.
நானும் சரி வேண்டாம்னு நடிக்க வேண்டும் என்ற ஆசையை விட்டுட்டேன். ஆனால் வீட்டில் வறுமை தாண்டவம் ஆடியது. அம்மா மட்டுமே உழைத்து எங்களை பார்த்துக் கொண்டாங்க. அவங்களுக்கு நானும் உதவி செய்யலாம்னு வேலைக்கு போக முடிவு செய்து, நாடக கம்பெனியில் சேர்ந்தேன். எனக்கு நாடகத்தில் பெண் வேடம்தான் கொடுத்தாங்க. அது எனக்கும் பிடிச்சிருந்தது. காரணம், பெண்கள் போல மேக்கப் போட்டுக் கொள்ளலாம், பொட்டு வச்சுக்கலாம், மேடையில் யாருக்கும் பயப்படாமல் பெண்ணாகவே இருக்கலாம். அதனாலேயே எனக்கு நாடகத்தில் நடிப்பது ரொம்பவே பிடிச்சிருந்தது. வீட்டில் இருந்து ஆணாக நான் போனாலும், நாடக மேடையில் ஒரு பெண்ணாகவே நான் மாறிடுவேன்.
என் 15 வயசில் இருந்தே நாடகத்தில் நடிக்க ஆரம்பிச்சிட்டேன். ஒரு நாடகத்தில் நடிச்சா எனக்கு 20 ரூபாய் கொடுப்பாங்க. என்னுடைய பயண செலவுக்கு போக மற்றதை வீட்டில் கொடுத்திடுவேன். நாடகங்கள் இல்லாத நாட்களில் பள்ளிக்கு போவேன். ஆனால் எதுவும் குடும்ப சூழ்நிலை காரணமா தொடர முடியல. நாடகம் இல்லாத நாட்களில் கூலி வேலைக்கு போக ஆரம்பித்தேன். 19 வயசுல நான் முழுமையா திருநங்கையா மாறியதும், நாடகக் குழுவில் என்னை சேர்த்துக்க மறுத்தாங்க.
நீ ஆணாக இருந்தா மட்டுமே இங்க நடிக்கலாம்னு சொல்லிட்டாங்க. அதில் வரும் வருமானத்தை விட மனமில்லாமல், நாடகத்திற்கு நடிக்க போகும் போது ஆண் உடையில் போவேன். அந்தச் சமயத்தில் தான் எனக்கு திருநங்கை கங்காம்பாளின் அறிமுகம் கிடைச்சுது. அவங்க வேலூர் மாவட்டம், திருநங்கை கூட்டமைப்பின் தலைவியா இருக்காங்க. நாடகத்துல எனக்கு இருக்குற ஆர்வத்தைப் பார்த்து என்னை ஆரணியில சிவா அமுது நாடக மன்றத்தில் சேர்த்துவிட்டாங்க. அந்த சமயத்துல என் அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துட்டாங்க. அப்போ எனக்குத் திருநங்கை சமூகம்தான் ஆதரவு கொடுத்தாங்க’’ என்றவர் திருநங்கை சமூகத்திற்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.
‘‘திருநங்கை சமூகத்தில் என்னைப் போல் பல ஆதரவற்ற திருநங்கைகளை சந்தித்தேன். எனக்கு என் அம்மாவின் ஆதரவு இருந்தது. ஆனால் பலர் வீட்டை விட்டு துரத்தி அடிக்கப்படுகிறார்கள். ஒரு சிலர் வீட்டில் உள்ளவர்களின் ஏளன பேச்சு பொறுக்க முடியாமல் வீட்டை விட்டு வந்துவிடுகிறார்கள். இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்னு நினைச்சேன். கஷ்டப்பட்டு உழைக்க ஆரம்பிச்சேன். நடிப்பு மட்டுமில்லாமல் நடனமும் ஆட ஆரம்பித்தேன்.
தலையில் சொம்பு, அதன் மீது தவளை வைத்து ஆடுவேன். அதே சமயம் நாடகத்திலும் நடித்து வந்தேன். இதனால் மக்கள் மத்தியில் எனக்கு தனி வரவேற்பு கிடைத்தது. நான் நடிப்பு மட்டுமில்லாமல் படிப்பு சார்ந்தும் வேலையில் ஈடுபட விரும்பினேன். எங்க ஊரில் நடக்கும் பள்ளி விழாவில் குழந்தைகளுக்கு நாடகம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். மேக்கப் போட ஆரம்பித்தேன். படிப்படியாக பள்ளிகளில் நடக்கும் விழாவில் தங்களின் பள்ளி மாணவர்களுக்கு நாடகம் சொல்லித் தரச்சொல்லி கேட்க ஆரம்பிச்சாங்க. பள்ளி நிறுவனமும் எனக்கு அதற்கான வாய்ப்பினை கொடுக்க முன்வந்தார்கள். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வருமானம் வந்தது.
அதனை கொண்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு தவிக்கும் திருநங்கைகளுக்கு உதவ ஆரம்பிச்சேன். என்னுடைய வேலையை பற்றி கேள்விப்பட்ட சென்னையை ேசர்ந்த பிரபல கல்லூரி பேராசிரியர் காளீஸ்வரன் அவர்கள், சென்னையில நடக்கும் வீதி விருது விழா கலை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார். அந்த நிகழ்ச்சியில் என்னுடைய நாடகம் ஒன்றை அரங்ககேற்ற வாய்ப்பு கொடுத்தார். அதன் மூலம் கலைத் துறையில் என்னைப் பற்றி தெரிய ஆரம்பித்தது. அதே சமயம் என்னுடைய சமூகம் சார்ந்த வேலைகளிலும் ஈடுபட்டு வந்தேன். என்னுடைய சம்பாத்தியத்தில் ஒரு தொகையினை அவர்களின் நலனுக்காக ஒதுக்கினேன்.
இதன் மூலம் கடந்த ஏழு வருஷமா வீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டு, படிக்க ஆர்வமுள்ள திருநங்கைகளை தத்தெடுத்து, அவர்களுக்குப் பாடப் புத்தகங்கள், தேர்வுக் கட்டணம் செலுத்துவது, ஸ்காலர்ஷிப் வாங்கிக் கொடுப்பது போன்ற உதவிகளை செய்து வருகிறேன். பலர் கல்லூரி படிப்பு முடித்துவிட்டு, தற்போது, ஆசிரியர், காவலர் பயிற்சி பெற்று நல்ல வேலையில் உள்ளனர்’’ என்றவர் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
‘‘கலையின் அம்சம் எங்களின் சமூகம் என்றாலும், எங்களை கலைக் குழுக்களில் சேர்த்துக்கொள்ள பலர் தயக்கம் தெரிவித்ததால், ‘அசோக் திருநங்கைகள் கலைஞர்கள் நாடக சபா’ பெயரில் கலைக்குழு ஒன்றை துவங்கினேன். தெருக்கூத்து, ராமாயணம், மகாபாரதம் நாடகங்களில் நடிச்சிருக்கேன். மேலும் கடவுள் வேடங்களில் நடித்த அனுபவமும் எனக்கு இருக்கு. எனக்கு இருந்த அனுபவத்தைக் கொண்டுதான் இந்தக் கலைக் குழுவினை அமைத்தேன். கலையில் ஆர்வமுள்ள திருநங்கைகளுக்கு பயிற்சி அளித்து, என் கலைக்குழு மூலம் பல இடங்களில் நாடகங்களை நிகழ்த்தி வருகிறேன். கொரோனா சமயத்தில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை எங்க குழு மூலம் நிகழ்த்தினோம்.
அதற்கு அரசாங்கத்திடமிருந்து பாராட்டுகள் கிடைத்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலை இழந்து நின்றவர்களுக்கு நான் சேமித்து வைத்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை கொடுத்து உதவினேன். இதையெல்லாம் கேள்விப்பட்ட தமிழ்நாடு அரசு எனக்கு சிறந்த திருநங்கை என்ற பட்டத்தை கொடுத்து கவுரவப்படுத்தியது. அது எனக்குள் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களின் திருநங்கை சமூகத்தினருக்கு மேலும் பல சேவைகள் செய்ய வேண்டும். கலைமாமணி விருது பெற வேண்டும் என்பதே என் வாழ்நாள் கனவு’’ என்கிறார் ஐஸ்வர்யா.