என்னுடைய இன்னொரு குரல் பறை! (மகளிர் பக்கம்)
‘நமக்கு ஒரு அநீதி நடந்தா, உடனே அதை எதிர்த்து குரல் கொடுக்கிறோம். அந்த சமயம் நம்முடைய குரல் உயர்ந்து இருக்கும். அதை போல தான் நான் இந்த பறை இசையையும் பார்க்கிறேன். தனக்கு இழைக்கப்பட்ட இழிவுகளுக்கு எதிராக பல நூற்றாண்டுகளாக ஒலித்துக் கொண்டே இருக்கு இந்த பறை. அதனாலதான் எனக்கு பறை இசை ரொம்ப பிடிச்சிருக்கு. என்னோட இன்னொரு குரல்னு கூடச் சொல்லலாம்’’ எனப் பேசுகிறார் சந்திரிகா. ‘நிகர் கலைக்குழு’ என்ற பெயரில் பறை இசை பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார் சந்திரிகா. பறை இசையின் நடுவே அவர் நம்மிடம் பேசிய போது…
‘‘கோவையில் அரசுக் கல்லூரியில் வேதியியலில் பி.எச்.டி செய்து கொண்டு இருக்கேன். கடந்த ஏழு வருஷமா பறை வாசித்தும் அதனை பயிற்சி அளித்தும் வருகிறேன். நான் கல்லூரியில் படிக்கும் போது என்னுடைய கல்லூரியில் ராமராஜ் சார் வீதி நாடகங்கள் எழுதி இயக்கிட்டு இருந்தார். எனக்கு நாடகங்கள் மேல ஈர்ப்பு ஏற்பட்டதால், அவரின் வீதி நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன். பல வகையான கதாப்பாத்திரங்களில் நடிச்சிருக்கேன். பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, ஒவ்வொரு ஊரா பயணிச்சு வீதி நாடகங்களை அரங்கேற்றி நடிச்சிருக்கேன். அதில் பெரும்பாலும் சமுதாய விழிப்புணர்வு, விவசாயம், பெண்ணுரிமை சார்ந்த நாடகங்களாக இருக்கும். ஒவ்வொரு நாடகத்திலும் எனக்கென தனிப்பட்ட வேஷம் பூண்டிருக்கேன்.
வீதி நாடகங்கள் பொதுவாகவே மக்கள் அதிகமா கூடும் இடங்கள் அல்லது ஊருக்கு பொதுவான இடத்தில் தான் போடுவோம். அந்த சமயத்தில மக்களுக்கு நாங்க நாடகம் போட இருக்கோம் என்பதை பறை மூலமாக அறிவிப்பு விடுப்போம். அந்தக் காலத்தில் கிராம மக்களுக்கு செய்தி அறிவிக்க தண்டோரா அடிச்சு தெரிவிப்பாங்க. காரணம், அந்த சத்தம் மக்களை ஈர்க்க செய்யும். நாம் சொல்ல வரும் செய்தியையும் கவனிப்பாங்க. மேலும் நாடகத்திற்கும் வருவாங்க. அதற்காக தான் பறை மூலமாக எங்களின் நாடகம் குறித்து அறிவிப்பு விடுப்போம். அப்படி தான் எனக்கு பறை அறிமுகமானது. பறையும் அதிலிருந்து வருகிற சத்தமும் எனக்கு அதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதனால் நான் பறை வாசிக்க தொடங்கினேன்.
பறையில் பல வகையான அடிகள் இருக்கு. அதை எல்லாம் கற்றுக் கொண்டேன். மற்றவர்களுக்கும் சொல்லி கொடுத்தேன்’’ என்றவர் எப்படி பறை சம்பந்தமாக நிகர் கலைக்கூடத்தை தொடங்கினார் எனச் சொல்லத் தொடங்கினார். ‘‘மங்கோலிய பழங்குடிகள் பறையை போலவே ஒரு இசைக்கருவியை வைத்திருப்பார்கள். அவர்கள் மட்டுமில்லை பல்வேறு நாடுகளில் உள்ள பழங்குடியின மக்களிடமும் நம்முடைய பறை போன்ற அமைப்பில் ஒரு கருவி உள்ளது. காரணம் இசைக் கருவிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது பாகுபாடு அற்றது. ஆனால் இங்கு அப்படி இல்லை. நான் வாசிக்க ஆரம்பித்த நாட்களில் பறையை பெண்கள் வாசிக்க மாட்டார்கள்.
நான் வாசித்த போது, பல எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும் மனம் தளராமல் நான் பறை வாசிக்கவும் சொல்லிக் கொடுத்தும் வந்தேன். கலை மக்களுக்கானது, அதிலும் நம் மண் சார்ந்த கலைகள் முழுக்கவும் நம் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பவை. இந்த கலைகள் எல்லாமே பல ஆண்டுகளாக மக்களால் வாசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருபவை. நம்மிடம் இருக்கும் அனைத்து வாத்தியங்களுமே கேட்பவர்களுக்கு கொண்டாட்ட மன நிலையை ஏற்படுத்துபவை. அதிலும் பறையினை வாசித்துக் கொண்டே ஆடலாம். ஆனால் அந்த பறை இசையினை எல்லாராலும் வாசிப்பதில்லை. குறிப்பாக பெண்கள். இவர்கள் எந்த கலை வடிவத்திற்குள் சென்றாலும், அவர்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கிறார்கள்.
அதனாலயே பெண்களில் ஒரு சிறிய சதவிகிதத்தினர்தான் கலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை மாற்றவே நான் பறை வாசிக்கவும் அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடங்கினேன். வீதிகளில் வாசித்த பறை இசையை மேடையேற்ற நினைத்தோம். என்னுடன் சேர்ந்து பறை வாசித்த என் கணவர் னிவாஸ், தோழர் சுரேஷ் மூவராலும் தொடங்கப்பட்டது தான் ‘நிகர் பறை இசைக் கலைக்கூடம்’. சாதி, பாலினம் கடந்து பறை இசையினை மாற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். பறை இசையில் உள்ள அடிகள் மட்டுமில்லாமல் நாங்க புதிய அடிகளை உருவாக்கி புது தாளம் அமைத்தோம்.
மேலும் அதிலிருந்து வெளிவரும் தாளத்திற்கு ஏற்ப நடன அசைவுகளையும் அமைத்தோம். ஒரே மாதிரி உடை அணிந்து ஆடுவது என முறைப்படுத்தினோம். எங்களைப் பற்றி தெரிந்து கொண்ட அமைப்புகள் அவர்களின் நிகழ்ச்சிகளுக்கு வாசிக்க அழைத்தார்கள். நாங்க சென்ற இடங்களில் ஆதரவு பெருகியது, குறிப்பாக பெண்கள் அதிகம் வரவேற்றனர். அதில் சில பெண்கள் கற்றுக் கொள்ள முன் வந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். கல்லூரி நிகழ்ச்சிகளிலும் வாசிக்கிறோம். வீதிகளில் மட்டுமே வாசிக்கப்பட்டு வந்த இந்த இசை மேடையில் ஏறிய பிறகு தான் அதற்கான தனித்துவம் பெற்றிருக்கிறது. இந்த வாத்தியத்தில் இசைக் கச்சேரிகள் நடத்த வேண்டும். ஆப்பிரிக்க மக்கள் தங்களின் இசைக்கருவிகள் மற்றும் நடன அசைவுகளை மற்ற நாட்டு மக்களும் ரசிக்கும் வண்ணம் மாற்றி அமைத்தார்களே அதே போல இந்த இசையையும் எல்லா நாடுகளுக்கும் எடுத்து செல்ல வேண்டும்’’ என்றார் சந்திரிகா.