மனதார கிடைக்கும் வாழ்த்து விருது பெற்றதற்கு சமம்! (மகளிர் பக்கம்)
சிதம்பரத்தில் எல்லோரும் தினமும் பார்க்கக்கூடிய ஒரு காட்சி. ஒரு பெண் டூவீலரில் சாப்பாடு பார்சல் மற்றும் தண்ணீர் பாட்டில்களுடன் வருவார். அந்தத் தெருவில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்களுக்கு தன் கையில் இருக்கும் சாப்பாடு மற்றும் தண்ணீர் பாட்டிலை கொடுத்து சாப்பிட சொல்வார். தினமும் காலை மதிய வேளைகளில் இவரைப் பார்க்கலாம். வெயில், மழை என எல்லாக் காலத்திலும் இவரின் சேவையில் தடையே ஏற்படாது. இந்த குறிப்பிட்ட நேரத்திற்கு இவரின் வருகைக்காக அவர்களும் காத்திருக்கிறார்கள். இவர்களின் பசியினை போக்கி வரும் அன்னலட்சுமிதான் லீலாவதி. சிதம்பரத்தை சேர்ந்த இவர் இந்த சேவையில் ஈடுபட்டது குறித்து விவரித்தார்.
‘‘நான் சமூக நலத்துறையில் உயர் பதவியில் இருந்தேன். 2021ல் கொரோனாவால் கொடூரமாக பாதிக்கப்பட்டேன். மரணத்தின் விளிம்பிற்கே சென்று பிழைத்து வந்தேன். அந்த பாதிப்பினால் என் உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டது. அதனால் வி.ஆர்.எஸ். கொடுத்து வேலையில் இருந்து ஓய்வு பெற்றேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே ஒரு பழக்கம் உண்டு. நான் மதிய உணவு என்ன கொண்டு போனாலும், என் நண்பர்களுடன் பகிர்ந்துதான் சாப்பிடுவேன். கல்லூரி நாட்களிலும் இந்த பழக்கம் தொடர்ந்தது.
படிப்பு முடித்து, வேலைதிருமணம், குடும்பம் என்று நான் செட்டிலானாலும், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதிற்குள் இருந்தது. ஆனால் இதற்கு கணவரும் ஒத்துழைக்கணும் என்பதால் ஏதும் பேசாமல் இருந்து விட்டேன். ஒரு முறை கணவருடன் வெளியே சென்ற போது, சாலையின் ஓரத்தில் இருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியோர்களை பார்த்தேன்.
என் கணவரிடம் இவங்க எல்லாரும் சாப்பாடு இல்லாம தவிக்கிறாங்க. அவங்களுக்கு நம்மளால முடிஞ்ச உதவி செய்யலாமேன்னு சொன்னேன். அவரோ, ‘ஒரு நாளைக்கு உதவி செய்யலாம், உன் பேச்சைப் பார்த்தால் தினமும் அவர்களுக்கு சாப்பாடு செஞ்சு போடணும்னு சொல்லுவ போலிருக்கே’ என்றார். நான் உடனே, அதில் என்ன தப்புன்னு கேட்டேன். நாம் இருவரும் சம்பாதிக்கிறோம், சேமிப்பும் இருக்கு. அது போக எஞ்சி இருக்கும் பணத்தில் ஒரு நாளைக்கு 40 பேருக்கு சாப்பாடு போடலாமே என்றேன். அவரும், ‘நீ சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்றும் பச்சைக் கொடி காட்டி விட்டார்.
அப்பறம் என்ன மறுநாளில் இருந்தே என்னுடைய வேலையை ஆரம்பிச்சிட்டேன். தினமும் நான்கு மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரம் வாக்கிங் போவேன். அதன் பிறகு காலை சிற்றுண்டி வேலையை ஆரம்பிப்பேன். என் கணவர் அதை பார்சல் செய்திடுவார். எட்டு மணிக்கு டூவீலரை ஸ்டார்ட் செய்து கையில் சாப்பாடு பார்சலை எடுத்துக் கொண்டு ஐந்து கிலோமீட்டர் வரை சுற்றுவேன்.
எங்கு மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்களை பார்த்தாலும் அவர்களுக்கு சாப்பாடும் தண்ணீர் பாட்டிலும் கொடுப்பேன். சாப்பாடு பொட்டலம் கொடுப்பதைப் பார்த்து, நல்லா இருப்பவர்களும் கேட்பாங்க. உங்களால் உழைத்து கடையில் வாங்கி சாப்பிட முடியும். அவங்க எல்லாரும் ஒரு வேளை சாப்பாடுக்கு கூட வழியில்லாதவங்க என்று சொன்னதும் சென்றுவிடுவார்கள். நானும் என் கணவர் இருவருக்கும் அரசு வேலை. நான் தற்போது ரியல் எஸ்டேட் பிசினஸும் செய்றேன். இதில் வரும் வருமானத்தைக் கொண்டு நாலு பேருக்கு உதவி செய்யலைன்னா சம்பாதித்ததற்கான அர்த்தம் இல்லை’’ என்றார்.
‘‘நான் ஆரம்பத்தில் செய்த போது, பலர் என்னை கிண்டல் செய்தாங்க. நல்ல காரியம் செய்யும் போது விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அவர்களால் ஒருத்தருக்கு கூட ஒரு வேளை சாப்பாடு போட முடியாது. அதனால் அதை பற்றி சிந்திக்காமல் என் வேலையைப் பார்த்து வருகிறேன். இரண்டாவது அலை கொரோனாவில் பாதிக்கப்பட்ட போது, நான் மீண்டு வருவேன்னு நினைக்கல. நான் செய்த அந்த தர்மம்தான் என்னை பிழைக்க வைத்ததுன்னு நான் சொல்வேன்.
அன்று பிறந்தோம் இன்று வாழ்கிறோம் நாளை இறக்கப் போகிறோம். இதுதான் வாழ்க்கை. இதில் நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்யலாம். சலூன் கடை வைத்திருப்பவர்களிடம் பணம் தருகிறேன். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிவெட்டி விடுங்கள் என்று கேட்டும் யாரும் முன்வரவில்லை. அவர்களை வேற்று கிரகவாசிகள் போல் பார்க்கிறார்கள். அதனால் நானே இவர்களுக்கு ஆதரவு தர திட்டமிட்டிருக்கிறேன். அதற்கு முதல் அடியாக ஒரு இல்லம் அமைத்து அதில் வயதானவர்கள், ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்ட குழந்தைகளை பராமரிக்க போகிறேன். இது என் மனதிருப்திக்காக செய்கிறேன். பசியாறிய வயிறு, ‘நீ நல்லா இருமா’ன்னு வாழ்த்தும் போது விருது கிடைத்தது போன்ற சந்தோஷம் ஏற்படும். அது போதும் எனக்கு’’ என்றார் லீலாவதி.