வீட்டை அலங்கரிக்கும் ஸ்கெலிட்டன் ஆர்ட் !! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 56 Second

யார் சொன்னது, பாய்களை படுப்பதற்கும், உட்காருவதற்கும் மட்டும்தான் பயன்படுத்தணும்னு..? வேறு எதற்கு பாய் பயன் படும்னு ஒரு கேள்வி உள்ளுக்குள்ள வரும். பொதுவாக நாம் உபயோகப்படுத்தும் பாய்களில் பல வண்ணங்களில் பூக்களோ, மயில்களோ அல்லது மரங்கள் போன்ற வடிவமைப்புகள் தையல் முறையில் வேயப்பட்டிருக்கும். ஆனால், இங்கு கோரப்பாய்களில் கைகளால் பல வண்ணங்களை பயன்படுத்தி பெண்கள் நடனம் ஆடுவதையும், குழந்தைகளுக்கு பிடித்த பொம்மைகளையும் ஓவியமாக வரைந்து திரைச்சீலைகளாகவும், யோகாசனம் செய்யும் விரிப்பாகவும் விற்பனை செய்து வருகிறார் பெங்களூரை சேர்ந்த ஹரிணி.

‘‘ஓவியம் அப்படினா, குறிப்பிட்ட பொருட்களில்தான் வரையணுமா என்ற கேள்வியை எனக்கே பல தடவை நான் கேட்டுகிட்டேன்’’ என்று பேசத் துவங்கிய ஹரிணி, எவ்வாறு mat art-ல் ஆர்வம் வந்தது எனவும், குடும்பம், வேலை, கலை என தனது நேர திட்டமிடலையும் பகிர்கிறார். ‘‘சென்னையை பூர்வீகமாக கொண்ட நான் என்னோட ஐ.டி வேலை நேரம் போக மீதி நேரங்களில் இந்த ‘ஸ்கெலிட்டன் ஆர்ட்’ அதாவது லீப் ஆர்ட் செய்வேன்.

ஆரம்பத்தில் சென்னையில் தான் இருந்தோம். அப்போது இருந்தே எனக்கு பெயின்டிங், லீப் ஆர்ட் செய்வதில் ஆர்வம் இருந்தது. என் திருமணத்துக்கு பிறகு நாங்கள் பெங்களூரில் செட்டில் ஆகிட்டோம். இந்த ஊரில் இது போன்ற கலைகளுக்கு முக்கியத்துவம் தராங்க. அதுனாலே இங்கே வந்த பிறகும் இந்த லீப் ஆர்டை நான் தொடர்ந்து செய்து வந்தேன். என்னுடைய ஓவியங்களை நான் என் சோசியல் மீடியாவில் பதிவு செய்தேன். அதைப் பார்த்து எனக்கான வாடிக்கையாளர்கள் உருவாக ஆரம்பிச்சாங்க’’ என முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் சொல்லும் ஹரிணி, ஒரு பெயின்டிங் செய்வதற்கு மட்டுமே கிட்டதட்ட 4 முதல் 7 நாட்கள் வரை ஆகும் என்கிறார்.

‘‘ஒவ்வொரு ஓவியமும் தனித்துவம் வாய்ந்தது. அதனால் அதன் அளவு குறித்து அதை முடிக்க ஒரு வாரத்திற்கு மேலாகும். ஆனால் இதற்கான முழு வடிவத்தினை அமைக்க
கிட்டத்தட்ட ஒரு மாதமாகும்’’ என்றார். பாய்களில் கண்களை கவரும் வண்ண ஓவியங்கள் வரைந்து வரும் இவர், இது போக, வாட்டர் பாட்டில்களிலும் அழகான கைவேலைப்பாடுகளை செய்து அதை கைவினை பொருட்களாக மாற்றி, வீட்டின் அலங்காரப் பொருட்களாக பயன்படுத்துகிறார்.

‘‘மண்பாண்டங்களில் ஓவியம் வரைதல், 3D பெயின்டிங் போன்றவைகளையும் செய்து வருகிறேன். தற்போது யார் வெண்டுமானாலும், ப்ளாஸ்டிக் பொருட்களை கொண்டு அலங்கார பொருட்கள் தயாரிக்கலாம். அவை பிளாஸ்டிக் என்பதால் நான் அதை விற்பனைக்கு கொண்டு செல்வதில்லை. என்னுடைய வீட்டில் அலங்கார பொருட்களாக வைத்து இருக்கிறேன். பாய்களில் ஓவியம் வரைவதை பலர் செய்வதில்லை. குறைந்த நபர்கள் மட்டுமே செய்து வருகிறார்கள். சொல்லப்போனால் இது போன்ற ஓவியங்களை நான் தமிழகத்தில் பெரிய அளவில் பார்த்ததில்லை என்று தான் சொல்லணும்.

பாய்களில் மட்டுமில்லாமல் இலைகளிலும் அழகான ஓவியங்களை நான் வரைந்து வருகிறேன். பொதுவாக இலைகளில் ஒருவரின் முகத்தை தவிர வேறு எதையும் வரைய முடியாது. இதுவே பாய்களில் வரையும் போது நாம் விரும்பும் ஒருவரின் முழுபடத்தையும் அல்லது ஒரு சிலையின் முழு அமைப்பையும் வரைய முடியும். முதன்முதலில் நான் வரைந்த புத்தர் ஓவியம் நான் எதிர்பார்த்ததைவிட மிகவும் நன்றாக வந்தது. அது இன்னும் என்னிடம் உள்ளது. நான் இந்த ஓவியங்கள் வரைய ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. குறைந்த அளவில் இதனை செய்து வந்தாலும், தற்போது எனக்கு இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர்’’ என்ற ஹரிணி பாட்டிகளில் மட்டுமில்லாமல் கேன்வாசிலும் ஓவியங்களை வரைந்துள்ளார்.

‘‘இலைகளில் ஓவியங்கள் பொறுத்தவரைக்கும் நமக்கு தேவையான மூலப்பொருட்கள் சுலபமா கிடைக்கும். அதனால்தான் அதை செய்ய ஆரம்பிச்சேன். ஒரு இலையை 20 நாட்கள் நீரில் ஊற வைக்க வேண்டும். அப்போது அதன் பச்சை நிறமிகள் நீங்கி, இலை பார்ப்பதற்கு கண்ணாடி போலவே இருக்கும். அதன் மேல் நமக்கு தேவையான ஓவியத்தை வரைந்து கொள்ளலாம். மேலும் இலைகள் கண்ணாடி போல் இருப்பதால், க்ளாஸ் பெயின்டிங்கில் பயன்படுத்தப்படும் வண்ணங்களை பயன்படுத்தலாம்.

க்ளாஸ் பெயின்டிங் மட்டுமில்லாமல் கேன்வாஸ் பெயின்டிங் கூட இதில் வரைய முடியும். என்னுடைய படைப்புகளை நான் முதலில் இன்ஸ்டாகிராமில்தான் போட ஆரம்பித்தேன். வாடிக்கையாளர்களிடமிருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அவற்றை பார்த்துட்டு எனக்கு ஆர்டெர்ஸ் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இதுவரையில் 40-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து இந்தியா முழுவதும் விற்பனை செய்துள்ளேன். வாடிக்கையாளர்கள் தங்களின் புகைப்படங்களையும் இலைகளில் வரைந்து தர சொல்வார்கள். பொதுவாக இந்த பெயின்டிங்கை வீட்டில் அலங்காரத்திற்கு இல்லையெனில் தெரிந்தவர்களுக்கு பரிசு கொடுக்க தான் என்னிடம் ஆர்டர் செய்கிறார்கள்.

பெயின்டிங்கின் அளவினைப் பொருத்து ரூ.600 முதல் ரூ.3000 வரை அதன் விலை மாறுபடும். கிருஷ்ணர், விநாயகர், பெண் பரதநாட்டியம் ஆடுவது, மேலும் சில கடவுள்களின் ஓவியங்களும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப வரைந்து தருகிறேன். உலர்ந்த கண்ணாடி இலைகளில் ஓவியம் வரைவது போல் பச்சை இலையில் வரைய முடியாது. காரணம், அவை காய்ந்து போய்விடும். இல்லையெனில் மக்கி தூளாக மாறிடும். நல்ல பராமரிப்பில் இருந்தால், சராசரியாக 3 வருடங்கள் இருக்கும்.

பாய்களில் ஓவியம் வரைதலை பார்த்து நிறைய பேர் ஆன்லைன் முறையில் பயிற்சி அளிக்க சொல்லி கேட்கிறார்கள். நான் அதுகுறித்து என்னுடைய யுடியூப் சேனலில் பதிவு செய்திருக்கேன். அதைப்பார்த்தாலே இதன் அடிப்படை புரிந்திடும். தற்போது வேலை பார்ப்பதால், வார விடுமுறையின் போது தான் ஆர்டரின் பேரில் இதனை செய்து தருகிறேன். சிலர் நேரடி வகுப்பு எடுக்க சொல்கிறார்கள். அதன் செயல்முறைக்கு அதிக நேரம் செலவிடணும். அதனால் தற்போது நேரடி பயிற்சி அளிக்கும் எண்ணமில்லை என்றாலும், பிற்காலத்தில் துவங்கும் திட்டமுள்ளது.

பாய்களில் வரைவது கொஞ்சம் புதுவிதமானதா இருந்தாலும், கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஒவ்வொரு இடத்துலையும் நுண்ணிப்பாக வரையணும். ஒரு இடத்துல சின்ன மிஸ்டேக் ஆனாலும், முழு வரைபடமும் தவறாயிடும். அதனால் வரைவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமும் கொஞ்சம் அதிகமாகும். உதாரணத்துக்கு, பரதநாட்டியம் ஆடுவது போல் இருக்கும் ஓவியங்கள் பார்ப்பதற்கு வண்ணமயமாகவும், அழகாகவும் இருக்கும். ஆனால் அதில் உன்னிப்பாக கவனித்தால் பெண்ணின் நக கணுக்களுக்கும் கூட பெயின்ட் செய்திருப்போம்’’ என்று அதன் நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண் விற்பனையாளர்களின் ஆன்லைன் ஷாப்பிங்! (மகளிர் பக்கம்)
Next post செக்ஸ் அடிமை!! (அவ்வப்போது கிளாமர்)